கட்டுரைகள்
Published:Updated:

“விஜயகாந்திடம் ஏழு நாள்கள் கால்ஷீட் கேட்டோம்... 70 நாட்கள் நடிச்சுக் கொடுத்தார்!’’

அரவிந்த்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
அரவிந்த்ராஜ்

- ‘ஊமை விழிகள்’ ப்ளாஷ்பேக்

படங்கள்: சந்தீப்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே கலைப்படம் எடுப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சூழலைச் சுக்கு நூறாக்கிய பெருமை ஆபாவாணன் - ஆர்.அரவிந்த்ராஜ் கூட்டணிக்கு உண்டு. கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அவ்வளவாக இல்லாத காலத்திலேயே டெக்னாலஜியில் மிரட்டிய ‘ஊமை விழிகள்' படத்தைக் கொடுத்தவர்கள் இவர்கள்.

தவிர, விஜயகாந்தின் ‘உழவன் மகன்', ‘கறுப்புநிலா' போன்ற படங்களை இயக்கிய அரவிந்த்ராஜ், இப்போது வரலாற்றுத் தலைவர்களின் பயோபிக்கை இயக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ‘தேசிய தலைவர்' படத்தைத் தொடர்ந்து அடுத்து வேலுநாச்சியாரின் வரலாற்றை இயக்குகிறார்.

அரவிந்த்ராஜ்
அரவிந்த்ராஜ்

இன்னமும் ‘ஊமை விழிகள்' படத்தை வியந்து பேசுறாங்க...

‘‘அதுக்குக் காரணம் ஆபாவாணன் சார்தான். திரைப்படக் கல்லூரியில்தான் நாங்க நட்பானோம். அந்த நட்பில்தான் என்னை அவர் இயக்குநர் ஆக்கினார். அவர் கையில் பணமே இல்லாத சூழலில் சின்ன பட்ஜெட் படமாகத்தான் இதைத் தொடங்கினோம். விஜயகாந்துக்கு முன்னாடி சிவகுமார் சாரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம். ஆனால், அது நடக்கலை. நாங்க வாகை சந்திரசேகருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கோம். இந்தப் படத்தில் அவர்தான் முதலில் ஒப்பந்தம் ஆனார். போலீஸ் அதிகாரி தீனதயாளன் ரோலுக்கு விஜி (அப்போது திரையுலகிலகினர் விஜயகாந்தை ‘விஜி’ என்றுதான் அழைப்பார்கள்) கிடைத்தார். 1984-ல் தொடங்கப்பட்ட படம், விஜயகாந்த் சாரிடம் வெறும் ஏழு நாள்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும்னு சொல்லி ஆரம்பிச்சோம். அவர் 70 நாள்களுக்கு மேலாக நடிச்சுக் கொடுத்ததுடன் கிட்டத்தட்ட தயாரிப்பாளராகவும் இருந்து படத்தை முடிச்சுக் கொடுத்து உதவினார்.

பல சவால்களைக் கடந்து படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா, சென்சார்ல படத்தைத் தடை செய்திட்டாங்க. இதை ஏன் தடை செய்தாங்க, எதுக்காகத் தடை செய்தாங்கன்னு யாருக்குமே தெரியாது. அதன்பின் மும்பைக்கு அனுப்பினோம். அங்கேயும் கைகொடுக்கல. கடைசியாக ட்ரிபியூனலுக்குப் போனோம். அங்கேதான் ‘ஊமை விழிகள்'க்குத் தடை விலகியது. 1986 ஆகஸ்ட் 15-ல் படம் வெளியாகி எங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் வசந்தம் வீச வைத்தது.''

“விஜயகாந்திடம் ஏழு நாள்கள்  
கால்ஷீட் கேட்டோம்... 70 நாட்கள் நடிச்சுக் கொடுத்தார்!’’

இப்ப பயோபிக் இயக்குவதில் ஆர்வமாகிட்டீங்க. ‘தேசிய தலைவர்' ‘மருது ஸ்கொயர்ஸ்', ‘வேலுநாச்சியார்'னு பட்டியல் பெருசா இருக்குதே?

‘‘ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் எனக்கு ஒரு பெரிய பெயரை ‘தேசிய தலைவர்' வாங்கிக் கொடுக்கும்னு நம்புறேன். தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் சார் நடிப்பில் அவர் நண்பர்கள்தான் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. பஷீர் சார் இதுல பசும்பொன் தேவராக நடிச்சிருக்கார். ‘எல்லா ஜாதியும் ஒண்ணா இருக்கோமே... இப்ப இருக்கற சூழல்ல இப்படி ஒரு படம் பண்ணணுமா’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன காரணம், ‘எல்லா ஜாதியும் இன்னும் வலுவா ஒண்ணா இருக்கணும்னுதான் இந்தப் படத்தைப் பண்ணுறோம்'னார். படம் வெளியானதும் அதை நீங்களும் உணர்ந்து கொண்டாடுவீங்க. எந்த கான்ட்ரவர்ஸியையுமே பண்ணாமல் படத்தை எடுத்திருக்கோம்.''

‘வேலு நாச்சியார்' வாழ்க்கை வரலாற்றையும் இயக்குறீங்க.. அதோட படப்பிடிப்பு எப்போது?

‘‘ ‘வேலு நாச்சியார்' படத்துக்கு முன்னாடியே ஒரு கமிட்மென்ட் இருக்குது. அது ரொம்ப பெரிய புராஜெக்ட். ‘தேசிய தலைவர்' படப்பிடிப்பு சிவகங்கைப் பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும்போதே பஷீர் தயாரிப்பில் அடுத்து, ‘மருது சகோதரர்கள்' வாழ்க்கை வரலாற்றை ‘மருது ஸ்கொயர்ஸ்'னு பண்ண முடிவு பண்ணினோம். அப்ப பஷீர் சார் அவரோட மகள் பாபிக்கு ஒரு நல்ல கதை இருந்தால் கேட்டார். ‘மிஸ் சென்னை பட்டம் வாங்கின பொண்ணு. சினிமாவில் நல்ல படம் பண்ணணும்னு விரும்புறாங்க’னு சொன்னார். ‘மருது ஸ்கோயர்ஸ்’ல வேலுநாச்சியார் கதாபாத்திரம் வருகிறது. எனவே, பாபியை வேலுநாச்சியாராகப் பண்ண வச்சிடலாம்னு சொன்னேன். அதன் பிறகு மருதுவையும், வேலுநாச்சியாரையும் கலந்து கொடுக்கலாம்னு கதையை ரெடி பண்ணிட்டு இருக்கோம். விரைவில் முறையான அறிவிப்பு வரும்.''

அரவிந்த்ராஜ்
அரவிந்த்ராஜ்

நீங்க சின்னத்திரையில் நடிகராகவும் கலக்குறீங்க... ‘பாக்யலட்சுமி' சீரியல்ல அசத்துறீங்க..?

‘‘நான் இயக்கிய படங்களில் எல்லாமே நடிச்சுக் காட்டித்தான் வேலை வாங்கியிருக்கேன். என் உதவியாளர்கள் பலரும் இப்ப சீரியல்களில பிஸியாகிட்டாங்க. அவங்க அத்தனை பேருமே, ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனசுல வச்சுத்தான் எழுதினேன்'னு சொல்லி நடிக்கக் கூப்பிடுறாங்க. நானும் மறுக்காமல் போய் நடிச்சிடுறேன். ‘பாக்யலட்சுமி' சீரியல்ல அம்ரிதாவோட மாமனாரா வர்றேன். எழில் என்னை அப்பான்னு கூப்பிடறதால, இப்ப நான் எங்கே போனாலும், ‘அப்பா எப்படி இருக்கீங்க, சாப்டிங்களாப்பா?'ன்னு அக்கறையா வந்து நலம் விசாரிக்குறாங்க. பழகுறாங்க. ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு. இன்னொரு பக்கம் ‘அப்பான்னு சொல்லிப் பழகுறவங்க ரசிகர்களா, என்னோட உறவினர்களா’ன்னு குழப்பம் வருது. ஏன்னா, உறவினர்களை ரசிகர்களா நினைச்சா தவறாகிடும். ரசிகர்களை உறவினர்களாகவும் நினைச்சிடக்கூடாது. இப்படி சுவையான ஒரு குழப்பமும் இருக்கு!'' - ஆனந்தமாகப் புன்னகைக்கிறார் அரவிந்த்ராஜ்.