சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்

பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
News
பார்த்திபன்

சினிமா அதன் ஆதிகாலம் தொட்டு, கதைசொல்லலில் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டே இருக்கிறது.

உலகளவில் மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும், தமிழில் இப்படியான முயற்சிகள் எப்போதாவதுதான் நிகழ்கின்றன. அப்படியானதொரு பரீட்சார்த்த சினிமாதான் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7.’

சந்தேகத்தின்பேரில் ஒரு கொலைவழக்கில் மாசிலாமணியை (பார்த்திபனை) கைதுசெய்கிறது காவல்துறை. கொலைக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று காவல்துறை நினைக்கும் நேரத்தில் மாசிலாமணி ஏற்றுக்கொள்கிறார், ஒன்றல்ல, நான்கு கொலைகளை. காவல்துறை ஆச்சர்யப்படும் சமயத்தில் ஐந்தாவதாக ஒரு கொலையைப் பற்றியும் மாசிலாமணி பேசும்போது, ஒட்டுமொத்த வழக்கின் தன்மையும் மாறிப்போகிறது. மாசிலாமணி எத்தனை கொலைகள் செய்தார், ஏன் செய்தார், ‘ஒத்த செருப்பு’க்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு, மாசிலாமணி தப்பித்தாரா, சிறைக்குச் சென்றாரா - இத்தனை கேள்விகளுக்குமான பதில்கள் இரண்டுமணி நேரத்தில் இருக்கின்றன.

படத்தின் மொத்தச் சுமையையும் தாங்கி மாசிலாமணி என்ற ஒற்றை மனிதராய் உயர்ந்துநிற்கிறார் பார்த்திபன். நிச்சயமாய் இது அவருடைய சினிமா வாழ்க்கையிலும் சரி, தமிழ் சினிமா வரலாற்றிலும் சரி புதிய பாதைதான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என, பார்த்திபனுக்குப் பல பரிமாணங்கள். இரண்டு மணி நேரம், திரையில் பார்த்திபன் மட்டுமே. ஆனாலும் படம் பார்க்கும் ரசிகர்களைத் தன் ஒன்லைனர்கள் மூலமாகவும், முடிச்சுகள் நிறைந்த சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலமாகவும் நான்-லீனியர் கதை சொல்லலில் கட்டிப்போடுகிறார்.

‘மொத முறையா 2000 ரூவா நோட்டு, அவ ஜாக்கெட் கலர்ல இருந்த அதை அன்னிக்குத்தான் பார்த்தேன்’ எனப் பல வசனங்களில் ஈர்க்கிறார். இரண்டுமணி நேரம் ஒரே ஒரு முகத்தைத் திரையில் பார்க்கவேண்டும் என்னும்போது பார்வையாளர்களைத் தக்கவைக்க சுவாரஸ்யமான வசனங்கள் முக்கியம் என்பதை அனுபவத்தால் உணர்ந்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் அதுவே ‘உஷா கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும்’, ‘சின்னவீட்டுக்கு ஒரு பெரியவீடு வாங்கித்தந்தார்’ என்பதுமாதிரியான பார்த்திபன் டைப் வசனங்கள் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகின்றன.

மனைவியிடம் பேசும் அந்தக் காவல்துறை அதிகாரி, பெண் அதிகாரியான ரோஸி, வெளியே அமர்ந்திருக்கும் மாசிலாமணியின் மகன், முன்கோபி போலீஸ், மனநல மருத்துவர், மனைவி உஷா எனப் பல கதாபாத்திரங்களுக்கும் படம் பார்க்கும் ரசிகர்களையே ஒரு முகம் வரையச் சொல்லி ஆழம்பார்க்கிறார் பார்த்திபன்.

படத்தின் ஆகப்பெரும் பலங்கள் ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் சவுண்டு டிசைனிங்கும். மேஜையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பார்த்திபனின் பிம்பத்தைக் காட்டுவதில் ஆரம்பித்து அந்த அறையிலிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உயிர்கொடுத்திருக்கிறது ராம்ஜியின் கேமரா. ‘ஒரே ஓர் அறையில் ஒட்டுமொத்தக் கதையும். முடியுமா?’ என்ற சவாலை சந்தோஷமாக எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் ராம்ஜி.

பார்த்திபன் சொல்லும் முன்கதைகளில், பார்த்திபனுடன் பயணம் செய்து அந்தக் காட்சிகளைச் செவிகளில் உயிர்ப்பிக்கிறது ரசூலின் சவுண்டு டிசைனிங். படத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் இளையராஜாவின் பாடல்களும் கைகோத்து, கதைக்கு உருவம் கொடுக்கின்றன.

ஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்

செல்வாக்கு இருப்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து வெளியேற முடியும் போது ஏன் ஒரு சாமானியனுக்கு அந்த ஓட்டைகள் அடைக்கப்படுகின்றன என்னும் கேள்வியை எழுப்புகிறார் பார்த்திபன். ஆனால், மாசிலாமணி இந்தச் சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு குற்றவாளி என்றாலும், தான் செய்த கொலைகள் பற்றிக் கிஞ்சித்தும் குற்ற உணர்வற்று இருப்பது உறுத்துகிறது. திரையில் ஒரே ஒரு மனிதரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுவதால் மாசிலாமணியின் மனைவி மற்றும் கொலையுண்டவர்களின் நியாயங்கள் நமக்குத் தெரிவதில்லை என்பது குறைதான்.

இந்தக் கதைக்கு ஒரே ஒரு பாத்திரம் என்பது தேவையா என்று கேட்டால், தேவையில்லை என்றுதான் சொல்லவேண்டும். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். ஆனால் படத்துடன் ஒன்றவைத்த வகையில் வெற்றிகரமான பரிசோதனை முயற்சி.

உலகளவில் ஒரே ஒரு நபர் நடித்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஒரே ஒருவர் நடித்து, அவரே இயக்கிய முதல் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’தான். அந்தவகையில் சாதித்துக்காட்டியிருக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு வாழ்த்துகள்.

விகடன் விமர்சனக் குழு