சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

NARCOS MEXICO - SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
NARCOS MEXICO - SERIES

புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்ட பூமியில் மனிதர்கள் மனிதர்களையே வேட்டையாடி வாழ்ந்து வருகிறார்கள்.

THE HARDER THEY FALL - MOVIE

OTT கார்னர்
OTT கார்னர்

ஹாலிவுட்டின் கெளபாய் படங்களுக்கு உலகம் முழுக்கவே வரவேற்பு உண்டு. சமீபத்தில் நல்ல கெளபாய் படம் வரவே இல்லை என்னும் ரசிகர்களின் கவலையை இந்தப் படம் மூலம் தீர்த்து வைத்திருக்கிறது நெட்பிளிக்ஸ். இட்ரிஸ் எல்பா, ரெஜினா கிங் போன்ற சீனியர் நடிகர்களோடு ஜோனாதன் மேயர்ஸ், ஸாஸி பீட்ஸ் போன்ற ஜூனியர்களும் இணைந்து கெத்து காட்டியிருக்கிறார்கள். சிம்பிளான பழிவாங்கும் கதைதான். ஆனால், ஸ்டைலாக ரத்தம் தெறிக்கத் தெறிக்க விறுவிறுப்பாகச் சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது இந்தப் படம். ஒளிப்பதிவு, கலை இயக்கம், முக்கியமாய் ஜேம்ஸ் சாமுவேலின் பின்னணி இசை என எல்லா ஏரியாவிலும் ரகளை. ஆக்‌ஷன் விரும்பிகள் தவறவே விடக்கூடாத படைப்பு இது.

NARCOS MEXICO - SERIES

OTT கார்னர்
OTT கார்னர்

ஓடிடி தளமாக உலகமெங்கும் விரிவடையத் தொடங்கிய நெட்ப்ளிக்ஸுக்கு அப்போது மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது ‘நார்கோஸ்’ தொடர். கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரின் கதையைச் சொன்னது ‘நார்கோஸ்.’ அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களை மையமாகக் கொண்டு ‘நார்கோஸ்: மெக்ஸிகோ’ வெளிவந்தது. இப்போது அதன் இறுதி சீசனும் வெளியாகியிருக்கிறது. இந்தக் குழுக்களை ஒன்றிணைத்த தலைவன் மிகெய்ல் ஃபெலிக்ஸ் கல்லார்டோ கைதுடன் முடிந்தது கடைசி சீசன். அதன்பிறகு 90-களில் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கின மெக்ஸிகோவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்கள். இந்தக் குழுக்களிடையேயான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது இந்தப் புதிய சீசன். எப்போதும்போல இவர்களைத் துரத்தும் அமெரிக்க அதிகாரிகளும் கதையில் உண்டு. இம்முறை கதையில் புதிதாக ஒரு பத்திரிகையாளரும் இணைகிறார். கடந்த சீசன்களைப்போல இல்லாமல் இம்முறை ஆக்‌ஷனுக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. ஊழல் கொழிக்கும் மெக்ஸிகோவில் இன்றும் ஆக்டிவாக இருக்கின்றன இந்தக் குழுக்கள். இதனாலேயே இன்னும் சுவாரஸ்யமானதாகிறது ‘நார்கோஸ்:மெக்ஸிகோ’வின் இந்தக் கடைசி சீசன்.

FINCH - MOVIE

OTT கார்னர்
OTT கார்னர்

புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்ட பூமியில் மனிதர்கள் மனிதர்களையே வேட்டையாடி வாழ்ந்து வருகிறார்கள். பிஞ்ச் என்னும் வயதான தானியங்கியல் பொறியாளர் தன்னுடன் இருக்கும் நாய்க்கு ஒரு ரோபோவை உருவாக்குகிறார். தான் இல்லாத சூழலில் நாய்க்கான மனித அரணாக இந்த ரோபோ செயல்பட வேண்டும் என்பது அவர் விருப்பம். இரும்பினில் இருதயம் முளைக்க வைக்க வேண்டிய இந்த அனுபவத்தைச் சொல்கிறது ஆப்பிள் டி.வி-யில் வெளியாகியிருக்கும் FINCH. படம் முழுக்க வரும் மனிதர் என்றால் டாம் ஹாங்க்ஸ்தான். தனித்து விடப்பட்ட சூழலில் மனிதத்தை உருவாக்கும் வித்தை அறிந்தவர் டாம் ஹாங்க்ஸ். இதற்கு முன்பு பல படங்களில் இதைச் செய்திருக்கிறார். ஆனால், காலச்சூழலில் டாம் ஹாங்குஸுக்கும் வயதாகி வருவதால் இந்தப் படம் இன்னும் நம்மை எமோஷனலாக அணுகுகிறது. மனிதர்களுடனான வாழ்வு தந்த அனுபவத்தை ரோபோவிடம் டாம் ஹாங்க்ஸ் விளக்கும் காட்சி ஒரு சான்று. இன்னும் நெகிழ்ச்சியாய் வந்திருக்க வேண்டிய சினிமாவை, டெம்ப்ளேட் த்ரில்லர் காட்சிகளால் நிறைத்தது மட்டும் ஏமாற்றம்.

SUPERGIRL - SERIES

OTT கார்னர்
OTT கார்னர்

சூப்பர்மேன் கதை நமக்குத் தெரிந்ததே. அந்த சூப்பர்ஹீரோ குடும்பத்தைச் சேர்ந்த சூப்பர்கேர்ள் என்ற பாத்திரத்தின் வாழ்க்கையையும் சாகசங்களையும் பேசும் தொடர்தான் இந்த ‘சூப்பர்கேர்ள்.’ இந்தியாவின் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸ் 6 சீசன்களைக் கடந்த பின்னர், தற்போது எண்டுகார்டு போட்டிருக்கிறார்கள். இந்த இறுதி சீசனில் சூப்பர்மேனின் ஆஸ்தான வில்லன் லெக்ஸ் லூத்தர் தொடங்கி, வரிசையாக டோக்கன் போட்டுக்கொண்டு பல வில்லன்கள் வந்து போகின்றனர். அதேபோல சூப்பர் ஹீரோக்கள் பலரும் உதயமாகி காரா எனும் சூப்பர் கேர்ளுக்குத் தோள் கொடுக்கின்றனர். பிறகு என்ன, வழக்கம்போல, கொடியவர்களின் கதையை முடித்து, சூப்பர்கேர்ள் உலகை மீட்டாளா? இதை 20 எபிசோடுகளுக்கு இழுத்து ஒரு வழியாகச் சுபம் போட்டிருக்கிறார்கள். ஆக்‌ஷன், கிராபிக்ஸ் எல்லாம் சினிமா ரேஞ்சிற்கு எதிர்பார்க்கக்கூடாது என்றாலும், ஒரு டி.வி சீரிஸுக்கான முயற்சியைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். இந்த சீசனில் டைம் டிராவல், எண்ணற்ற சூப்பர் ஹீரோக்கள் என டெம்போ எல்லாம் வைத்துக் கடத்தியதுபோல நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர்கேர்ளுக்கு இது ஒரு தரமான முடிவுரைதான்!