
மாயாஜால நகரமான ரவ்காவில் அசகாய சூரன் ஒருவனின் சூழ்ச்சியில் கிழக்கு, மேற்கு ரவ்காவுக்கு இடையே இருள் சூழ்ந்துவிடுகிறது

Shadow and Bone Youtube Series
மாயாஜால நகரமான ரவ்காவில் அசகாய சூரன் ஒருவனின் சூழ்ச்சியில் கிழக்கு, மேற்கு ரவ்காவுக்கு இடையே இருள் சூழ்ந்துவிடுகிறது. அதை ஓவர்நைட்டில் சன் சம்மனராகும் அலினா ஸ்டார்கோவ் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் Shadow and Bone தொடரின் ஒன்லைன். புத்தகங்களை மையப்படுத்திய மாயாஜாலத் தொடர்களை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது நெட்ஃபிளிக்ஸ். ஆனால், அவற்றுள் முக்கால்வாசித் தொடர்களை, இரண்டு எபிசோடுகள்கூடத் தாண்ட முடியாது என்பது தனிக்கதை. அந்த வகையில் ஷேடோ அண்டு போன், முதல் சீசன் பட்டாசாய்ப் பறக்கிறது. வெவ்வேறு நிலப்பரப்புகள், வித்தியமான எழுத்துருக்கள், ஆசிய முகங்கள் எனப் பக்காவாக அடுத்தடுத்த பாகங்களுக்கான லீடை செட் செய்திருக்கிறார்கள். பட்ஜெட் குறைபாட்டினால், சற்றே டொங்கலாக வரும் க்ளைமேக்ஸ் காட்சிதான் பெரும் மைனஸ்.

Love and Monsters Youtube Movie
‘டீன் வுல்ஃப்’, ‘மேஸ் ரன்னர்’ புகழ் டைலன் ஓ ப்ரையன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். பூமியை நோக்கி வரும் விண்கல்லைச் சுக்குநூறாக்க இங்கிருந்து ஆயுதங்களை ஏவுகிறார்கள். அதிலிருக்கும் ரசாயனங்கள் வான்வெளி எங்கும் பரவி குட்டிக் குட்டி மிருகங்களையெல்லாம் பூதாகரமான சைஸில் மாற்றிவிட, அவை மனிதர்களைக் கொன்றொழிக்கின்றன. எஞ்சிய மனிதர்கள் பூமிக்கடியில் ஆங்காங்கே காலனி கட்டி வாழ்ந்து வர, அதில் ஒருவன் தன் காதலுக்காகத் துணிந்து சமதளத்திற்கு வந்து பயணப்படுவதே கதை. டிஸ்டோப்பியன் வகைப் படம் என்றாலும் ஜாலியாக குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் காமெடி கலந்து சொல்வதால் எல்லாராலும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கிறது ‘லவ் அண்ட் மான்ஸ்டர்ஸ்.’ கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தப் படம் கடைசியில் டெனட்டிடம் விருதைப் பறிகொடுத்தது. ஒரு ஜாலி குடும்ப என்டர்டெயினர் பார்க்க விரும்புபவர்கள் பாப்கார்னோடு இதை செலக்ட் செய்யலாம்.

Legacies Youtube Series
வேம்பயர்ஸ் (ரத்தக்காட்டேரி), வேர்வுல்ஃப்ஸ் (ஓநாய் மனிதர்கள்), விட்சஸ் (மாய மந்திரம் கற்றவர்கள்) உள்ளிட்ட பல அமானுஷ்ய சக்தி படைத்தவர்களும் உலகில் மனிதர்களாக உலவுகின்றனர். அவர்களில் பதின்பருவத்தவர்களை நல்வழிப்படுத்தச் செயல்படுகிறது மிஸ்டிக் ஃபால்ஸில் இருக்கும் சால்வடோர் பள்ளி. ‘வேம்பயர் டைரிஸ்’, ‘தி ஒரிஜினல்ஸ்’ ஆகிய தொடர்களின் ஸ்பின் ஆஃபாக உருவான இந்தத் தொடரின் 3-வது சீசன் இது. மலவோர் எனும் நரகத்தில் சிறைப்படுத்தப்பட்ட அனைத்து மான்ஸ்டர்களும் ஒவ்வொன்றாக வெளியே வந்து சால்வடோர் பள்ளியைத் தாக்குகின்றன. அவற்றிடமிருந்து பள்ளியையும் தன் நண்பர்களையும் காக்கப் போராடுகிறாள் ஹோப் மைக்கல்சன். வேம்பயர், வேர்வுல்ஃப், விட்ச் என மூன்றுமாக இருக்கும் அதீத சக்திவாய்ந்தவள். அவளின் காதலன், அந்தப் பள்ளித் தலைமையாசிரியரின் இரட்டைப் பெண் பிள்ளைகள், மேலும் சில மாணவர்கள், மாணவிகள் என இவர்களைச் சுற்றிச் சுழலும் இந்தத் தொடரின் ப்ளஸ், தடதடக்கும் திரைக்கதையும் அதனுடன் வரும் ட்விஸ்ட்களும்தான். மாய மந்திரங்கள் எனும் கண்கட்டி வித்தையை மட்டும் நம்பாமல், இந்த மாணவர்களுக்குள் நிகழும் காதல், உறவுச் சிக்கல், தன்பாலின ஈர்ப்பு என பதின்பருவ உளவியலையும் காட்சிப்படுத்துகிறது தொடர்.

Stowaway Youtube Movie
நெட்ஃப்ளிக்ஸின் ஃபேவரைட் ஜானர்களில் ஒன்றான சயின்ஸ் பிக்ஷனில் வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் படம். இரண்டு ஆண்டுகள் மிஷன் ஒன்றிற்காக பூமியிலிருந்து செவ்வாய் பயணப்படுகிறது மூன்று பேர் கொண்ட குழு. இங்கிருந்து கிளம்பிய பல மணி நேரத்துக்குப் பின் விண்கலத்தில் நான்காவதாய் ஒருவர் இருப்பதைக் கண்டறிகிறார்கள். ‘இருக்கும் உணவும் உபகரணங்களும் மூன்று பேருக்குத்தான். பூமியை நோக்கி இனி திரும்பவும் முடியாது; அதேசமயம் இரண்டு ஆண்டுகள் நான்கு பேராய் விண்கலத்தில் வாழவும் முடியாது’ என்கிற நிலையில் அந்தக் குழு என்ன முடிவெடுக்கிறது என்பதுதான் கதை. நான்கே கேரக்டர்கள்தான். அதிலும் சிறந்த நடிகைகளான டோனி கொலேட்டும் அன்னா கெண்ட்ரிக்கும் கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள். யூகிக்க முடிந்த க்ளைமேக்ஸ், நீளமான வசனங்கள் ஆகியவை படத்தின் வேகத்திற்குத் தடைபோடுகின்றன. ஆனாலும் ஒரு டீசன்ட் த்ரில்லர் வகைப் படம் இது.