சினிமா
Published:Updated:

OTT கார்னர்

மலேசியா டு அம்னீசியா
பிரீமியம் ஸ்டோரி
News
மலேசியா டு அம்னீசியா

நம்மைச் சிரிக்கவைப்பதனால் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய படம்தான்.

சினிமா பண்டி - Movie

ஓர் எளிய கிராமத்து இளைஞரது ஷேர் ஆட்டோ, சினிமாவை உருவாக்கும் வாகனமானால் அதுதான் `சினிமா பண்டி.’ சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்தத் தெலுங்குப் படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியிருக்கிறார். கன்னடப்படங்களுக்கு இசையமைத்துவரும் விகாஸ் வசிஷ்டா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். தான் ஓட்டிவரும் ஆட்டோவில் கண்டெடுக்கப்பெறும் ஒரு டி.எஸ்.எல்.ஆர் கேமராவைக்கொண்டு அவரும் அவர் போட்டோகிராபர் நண்பரும், தன் கிராமத்து மனிதர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு படம் தயாரித்து இயக்குகிறார்கள்.

OTT கார்னர்
OTT கார்னர்

காமெடி டிராமாவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் எதார்த்தபாணியில் அமைந்திருக்கிறது. படத்தின் இசையும் ஒளிப்பதிவும் அதன் நகைச்சுவையும் இயல்பாக நம்மை ஒன்றிவிடச் செய்கின்றன. சினிமா குறித்த எந்தவிதத் தொழில்நுட்ப அறிவும், கற்பனை வளமுமற்ற மனிதர்கள் ஒரு சினிமா எடுத்துவிடத்துணிகிறார்கள் என்பதும், எந்தவித சமூக அரசியல் ஏற்றத்தாழ்வுமற்ற ஒரு கிராமமாகக் காட்டப்படுவதும், ஒரே சினிமாவில் பொருளாதார வளமடைந்து தன் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும் என நம்புவதாகக் காட்டப்படுவதும் படத்தின் குறைகளாக இருந்தாலும், பல பத்தாண்டுகளாக இந்திய சினிமாக்கள் என்ன கதையமைப்பையும் கிளிஷேக்களையும் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துவதாக படம் இருப்பது உண்மை. சில பல குறைகள் இருந்தாலும், இந்த லாக்டௌன் காலத்தின் மன அழுத்தங்களைக் குறைத்து, நம்மைச் சிரிக்கவைப்பதனால் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய படம்தான்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Last Hour - series

வடகிழக்கு மாநிலத்தில் நடக்கும் ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக இந்தியில் வெளியாகியிருக்கிறது ‘தி லாஸ்ட் ஹவர்.’ நாயகன், இறந்தவர்களின் ஆன்மாவோடு பேசி அவர்கள் உயிருடன் இருந்த கடைசி ஒரு மணி நேரத்தை மீண்டும் பார்க்கும் அபூர்வ சக்தி படைத்தவன். அந்த ஊரில் நடக்கும் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறை அதிகாரிக்கு தன் சக்தியின் மூலம் உதவி செய்கிறான். ஒருவரைப் பார்த்தாலே அவர் எங்கே எப்போது இறப்பார் என்று அவரின் எதிர்காலத்தைக் கண்டறியும் சக்திகொண்ட வில்லன், நாயகனின் இந்த இறந்த காலம் சென்று பார்க்கும் சக்தியையும் அடைய நினைக்கிறான். இவர்களுக்கு இடையில் அந்தக் காவல்துறை அதிகாரியின் மகளும் நாயகன் மீதான அவளின் காதலும் வந்து நிற்க, யார் யாரை வென்றனர் என்பதே ஒன்லைன். அனில் கபூரின் சகோதரரான சஞ்சய் கபூர் காவல்துறை அதிகாரியாக நடிக்க, இயக்குநராக இருந்த கர்மா டகாபா நாயகன் தேவ்வாக அவதாரம் எடுத்திருக்கிறார். கொலையாளி இவர்தான் என்பது முன்னரே தெரிந்தாலும், முடிச்சுகள் அவிழும் விதமும், அதில் சின்னச் சின்ன ட்விஸ்ட்களைச் சேர்த்த விதமும் பெரிய பலம். இரண்டாவது சீசனுக்கு லீடு வேண்டுமென்பதற்காக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் முடித்திருக்கி றார்கள். அதேபோல் திரைக் கதை சற்றே மெதுவாக நகர்வதும் மைனஸ்!

OTT கார்னர்
OTT கார்னர்

மலேசியா டு அம்னீசியா - Movie

அழகான மனைவி, அன்பான குழந்தை என சுபயோக வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் வைபவ். காதலும் காமம் நிமித்தமுமாக பெங்களூரிலிருந்து இன்ப அழைப்பு வர, கம்பெனி விஷயமாக மலேசியா செல்கிறேன் எனத் தப்பித்துச் செல்கிறார். பெங்களூரு பயணங்கள் சிறப்பாக அமைந்தாலும், அவர் சென்றதாகச் சொல்லும் மலேசியா விமானம் மாயமாக மறைந்துவிடுகிறது. அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் இயக்குநர் ராதாமோகன் zee5-ல் வெளியிட்டிருக்கும் மலேசியா டு அம்னீசியா படத்தின் கதை. காமெடிக்கு எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி, சச்சு என லாக்டௌனிலும் பலரை இணைத்திருக்கிறார். ஆனால், எல்லாமே படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் மொக்கை ஜோக் அளவுக்குத்தான் இருக்கின்றன. எமோஷனல் காட்சிகளில் வாணி போஜன் முடிந்தமட்டிலும் நடித்திருக்கிறார். கருணாகரனும், எம்.எஸ்.பாஸ்கரும் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயல்கிறார்கள். மற்றபடி மேடை நாடகத்தின் பிரதி பலிப்பாகத்தான் படம் முழுக்க இருக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Army of the Dead - Movie

ஜஸ்டீஸ் லீக் பஞ்சாயத்துகள் முடிந்து ஜாம்பி படமொன்றைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜேக் ஸ்நைடர். ஜாம்பிக்களின் அணிவகுப்பால், லாஸ் வேகாஸ் நகரையே லாக்டௌனில் வைக்கிறது அமெரிக்கா. அங்கிருக்கும் ஒரு கேசினோவில் 200 மில்லியன் அமெரிக்க டாலரை எடுத்துவரத் திட்டம் போடுகிறார் டனாகா. WWE புகழ் பட்டிஸ்ட்டா தலைமையில் ஒரு குழு, ஜாம்பிகளைக் கடந்து அங்கு சென்று டாலர்களை அள்ளினார்களா என்பது தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Army of the dead படத்தின் கதை. ஸ்நைடர் இந்த முறை கேமராவையும் கையிலெடுத்து, வித்தியாசமான ஷாட்டுகள் மூலம் ‘அட’ சொல்ல வைக்கிறார். ஆனால், பழகிப்போன திரைக்கதையும், கிளிஷேவான எமோஷனல் காட்சிகளும் ஒரு கட்டத்துக்கு மேல் படத்தை சோதிக்கின்றன. ‘காலா’வில் கலக்கிய ஹூமா குரோஷியும் நடித்திருக்கிறார் என்பது துணைத்தகவல்.