
- ஸ்ட்ரீம் பாய்
Away - Web Series - NETFLIX
ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றை ஆதர்சமாக வைத்து 10 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரை உருவாக்கியிருக்கிறார் ஆன்ட்ரூ ஹிண்டரேகர். சீனாவைச் சேர்ந்த வேதியியலாளர், ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர், பிரிட்டிஷ் உயிரியலாளர், குழுவின் தலைவராக அமெரிக்கப் பெண்மணி ஒருவர் என ஐந்து பேர் கொண்ட குழு செவ்வாய்க் கிரகத்துக்குப் பயணிக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் தொடர்புள்ளவர்களுக்கு பூமியில் நடக்கும் மாற்றங்கள் என ஒரு மெலோ டிராமாவாக இந்தத் தொடர் விரிகிறது.

நெட்ப்ளிக்ஸின் கெத்தே எதற்கும் சமரசம் செய்யாத அதன் தயாரிப்பு பட்ஜெட்தான். தரமான ஒளிப்பதிவு. எடிட்டிங், நடிகர்களின் பங்களிப்பு இதன் ப்ளஸ். ஆனால், விண்வெளிப் பயணம் என்றதும் மாஸான ஆக்ஷன், சாகசம் என்று உட்கார்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தொடர் முழுக்கவே நிறைய வசனங்களும், உணர்வுகள் கொப்பளிக்கும் டிராமாவுமே நிறைந்து வழிகின்றன.

Secret Society of Second-Born Royals - Movie - DisNEp + hotstar
மூத்த வாரிசு முடிசூடினால், இரண்டாம் வாரிசுக்கு என்ன வேலை? அவர்கள்தாம் அந்த ராஜ்ஜியத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் ரகசிய சூப்பர்ஹீரோக்கள் என்னும் வித்தியாச மாயாஜால சினிமா இது. புனைவு தேசங்களை ஆண்டு வருகிறார்கள் மன்னர்கள். இரண்டாம் வாரிசான சமந்தாவுக்கோ, இதில் எந்தவித நாட்டமும் இல்லாமல், தன் கல்லூரித் தோழனுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், ராஜ வழக்கங்களுக்கு எதிராகவும் பாட்டுப்பாடி புரட்சி செய்கிறாள். ‘உனக்குள்ள சக்தி இருக்கு’ என சமந்தாவின் அம்மா அறிவுரை வழங்க, அதைப் பயன்படுத்தி எப்படி நாட்டைக் காக்கிறாள் என்பதுதான் மீதிக் கதை. சிறுவர்களின் கதை என்பதால், காட்சிகளும் அந்த மனநிலையில்தான் இருக்கின்றன. விஜய்யின் ‘புலி’ படத்துக்கதைதான். சிறார்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறது டிஸ்னி.

Challenger: The Final Flight - DocuSeries - NETFLIX
உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்றும் மறக்க நினைக்கும் கெட்ட கனவு 1986-ல் நடந்த ‘சேலஞ்சர்’ ஸ்பேஸ் ஷட்டில் விபத்து. ஏழு பேரின் உயிரைப் பறித்த இந்த விபத்து, விண்வெளி ஆராய்ச்சியில் மிகவும் துயரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எப்படி ஒரு சிறிய கவனக்குறைவு மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்க முடியும் என்பதை எடுத்துக்காட்ட இன்று பாடப்புத்தகங்களில்கூட இந்த விபத்து இடம்பெற்றிருக்கிறது. பார்வையாளர்களை இந்த விபத்திற்கு இன்னும்கூட அருகில் அழைத்துச்செல்லும் முயற்சிதான் நெட்ப்ளிக்ஸின் இந்த நான்கு எபிசோடு ஆவணத்தொடர். ஆஸ்கர் வென்ற ஆவணப்பட இயக்குநர் டேனியல் துஞ்ச் மற்றும் ஸ்டீவன் லெக்கர்ட் இயக்கியிருக்கும் இந்தத் தொடர் இந்த மிஷனில் வேலைபார்த்த நாசா விஞ்ஞானிகள் மற்றும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரின் அனுபவப் பகிர்வுகள் வழி நமக்கு அனைத்தையும் தெளிவாக விளக்குகிறது. ஒரு மாற்றத்திற்கு டிராமா சீரிஸ் இல்லாமல் ஆவணத்தொடர் பார்க்க விரும்பினால் நிச்சயம் இதை முயலலாம்.

Bacurau - Movie - MUBI
திடீரென உங்கள் ஊர் கூகுள் மேப் முதலிய அனைத்துத் தேடுதல்களிலும் காணாமல் போனால் எப்படியிருக்கும்? ஊரில் இருக்கும் ஆற்று நீருக்காகப் போராடும் மக்களை வஞ்சிக்க நினைக்கும் அரசு, அதிகாரத்துடன் கூட்டு சேர்ந்து கிராமத்தை வரலாற்றின் சுவடுகளிலிருந்து நீக்க சதித்திட்டம் தீட்டுகிறது. அதையெப்படி அந்த கிராம மக்கள் முறியடிக்கிறார்கள் என்பதுதான் பக்குராவ் படத்தின் கதை. ‘‘அட, இது ‘சிட்டிசன்’ அத்திப்பட்டியில்ல’’ என யோசிக்கறீர்களா? கிட்டத்தட்ட ஒன்லைன் அதுதான். ஆனால், மேக்கிங் தரத்திலும், கதை சொன்ன விதத்திலும் பல படிகள் மேலே நிற்கிறது இந்த பிரேசிலிய சினிமா. நம் கிராமங்களைக் கண்முன் கொண்டு வரும் மக்கள், அங்கு நடக்கும் போராட்டங்களின் பிரதிபலிப்பு என நாம் இக்கதையுடன் ஒன்ற காரணங்கள் ஏராளம் இருக்கின்றன. mubi வலைதளத்தில் இப்படத்தினைப் பார்க்க முடியும்.