கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஸ்ட்ரீம் பாய்

social dilemma

மொபைல் போன் மூலம் மனிதர்களின் வாழ்க்கை எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னேப்சாட், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பங்கு வகித்தவர்கள் நெட்ஃபிளிக்ஸில் `Social Dilemma’ ஆவணப்படத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்கள்.

OTT கார்னர்!

தாழ்வு மனப்பான்மையில் உழல்வது முதல் தற்கொலையில் வீழ்ந்து மடிவது வரை, மக்களின் முடிவெடுக்கும் திறனை சமூகவலைதளங்களின் அல்காரிதம்கள் மாற்றியமைக்கும் விதத்தையும் அதன் தீமையையும் அவற்றை உருவாக்கியவர்களே வந்து விளக்குகிறார்கள். வறட்சியான, குறைகூறும், பயமுறுத்தும் ஆவணப்படமாக மாறும் அத்தனை சாத்தியமும் இதில் உண்டு. ஆனால், ஒரு கதையையும் சேர்த்து இந்த அல்காரிதம்களுக்கு மனித உரு அளித்து, அவை எப்படி மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மாற்றியமைக்கின்றன, உடைக்கின்றன என்பதையும் ஒரு கதையாகச் சேர்த்து இதை ஒரு படி மேலே உயர்த்தியிருக்கிறார்கள்.

காமிக்ஸ்தான் - செம காமெடிப்பா!

OTT கார்னர்!

இந்தியில் 2018-ம் ஆண்டு தொடங்கிய காமிக்ஸ்தான் எனும் ஸ்டாண்ட் அப் காமெடி ரியாலிட்டி ஷோவை, தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறது அமேசான். மார்க் போடும் நீதிபதிகளாகவும் அதே சமயம் போட்டியாளர்களைத் தயார்ப்படுத்தும் ஆசான்களாகவும் கார்த்திக் குமார், பிரவீன் குமார், ராஜ்மோகன்... ஆங்கரிங்கிற்கு மெர்வினும், நடிகை வித்யூலேகாவும். 8 எபிசோடுகளாக விரிந்த இந்த முதல் சீசனில் 6 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஸ்டாண்ட் அப் காமெடியிலிருக்கும் வெவ்வேறு ஜானர்கள், ஒரு செட் எழுத ஒரு காமிக் போடும் உழைப்பு எனப் பல விஷயங்களை இதன் மூலம் அறிய முடிந்தது. ‘சதி’ எனும் பிற்போக்கு விஷயங்களையெல்லாம் காமெடி என்று டீல் செய்தது சகிக்க முடியாத ஒன்று. அந்தக் கணவன் மனைவி சமையல் ஜோக்கெல்லாம் எப்பதான் நிறுத்துவீங்க பாஸ்?! அடுத்த முறையாவது ஐ.டி கிரவுடுக்கும், மேல்தட்டு மக்களுக்கு மட்டும் ஷோ செய்யாமல் அனைவரையும் கருத்தில் கொள்வீராக!

I’m Thinking of Ending Things

OTT கார்னர்!

ஒரு முதியவர் காலச் சுழலில் தொலைத்த தன் பொக்கிஷத் தருணங்களை அசைபோட விரும்பினால் என்ன நடக்கும் என்பதைப் பற்றிப் பேசுகிறது I’m Thinking of Ending Things. அந்த முடிவுறா ஏக்கங்களின் தொகுப்புகளுக்கு முடிவுரை எழுத எத்தனிக்கிறது அவரின் முதிர்ந்த மனம். Eternal Sunshine of the Spotless Mind, Anomalisa போன்ற படங்களின் மூலம் மனித இயல்புகளை, அதன் வலிகளை நம்முள் கடத்திய சார்லி கௌஃப்மேன், இந்த முறை இன்னும் சிக்கலான ஒரு கதைக்கருவை எடுத்துக்கொண்டிருக்கிறார். சிறுவயதுக் காதலியுடன் செல்லும் பயணம் என விரியும் கதை நம் எல்லோருக்குள்ளும் இருக்கிற கற்பனைகளைத் தூசுதட்டுகிறது. காலம் கடந்த வாழ்க்கை என நினைத்துக்கொண்டிருக்கும்போது, வாழ்க்கை ஒரே இடத்தில் சுழன்றுகொண்டிருக்க காலம் நம்மைத் தாண்டிச் செல்லும் ஆச்சர்யத்தைக் கண் முன் கொண்டுவருகிறது இந்தத் திரைப்படம்.

Cargo

OTT கார்னர்!

இறந்தபின்னர் கணக்குப் பார்த்து அடுத்த ஷிப்ட்டுக்கு ஆன்மாவைத் தயார் செய்யும் எமதர்மராஜா நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும். நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘கார்கோ’ திரைப்படத்தின் ஒன்லைன் இதுதான். அட, நம்ம அதிசயப்பிறவியா எனச் சிரிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க டெக் உலகம். இறந்தவர்களின் உடல் கார்கோவில் வந்து இறங்க, அவர்களை கன்வின்ஸ் செய்து, மூளைச்சலவை செய்து, காயத்தைக் குணப்படுத்தி, அடுத்த பிறவிக்குத் தயார் செய்யும் வேலை பிரஹஸ்தாவுடையது. பல ஆண்டுகளாக தனியாகவே வேலை பார்த்துப் பழகிய பிரஹஸ்தாவுக்குப் புதிதாக ஓர் உதவியாளர் கிடைக்கிறார். அடுத்து என்ன என்பது மீதிக் கதை. கம்மியான பட்ஜெட்டில் இந்தியப் புராணங்களை சயின்ஸ் பிக்‌ஷனுக்குள் நுழைத்து ஜாலியான திரைக்கதை மூலம் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் பெண் இயக்குநரான ஆரத்தி காதவ்.