
ஒரு மெல்லிய இழையை எடுத்து த்ரில்லராக மாற்றிவிடும் மலையாளத் திரைப்படம்தான் ‘ஆர்க்கறியாம்?’
Sweet Tooth - SERIES


கிட்டத்தட்ட கொரோனா போலவே உலகமெங்கும் பரவும் ஒரு வைரஸ் பல உயிர்களைப் பலி வாங்குகிறது. அதே சமயம், அதிசய நிகழ்வாக விலங்குகளும் மனிதர்களும் கலந்த கலவையாக ‘ஹைப்ரிட்’ குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் மான்போலப் பிறந்த கஸ் எனும் சிறுவன் தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு வெளியுலகுக்கு வருகிறான். அவனுக்குத் துணையாக முன்னாள் கால்பந்து வீரர் ஒருவரும் உடன்வர, இவர்கள் கஸ்ஸின் தாயைத் தேடிப் பிடித்தார்களா, வைரஸுக்கும் ஹைப்ரிட் குழந்தைகளுக்கும் உண்டான தொடர்பைக் கண்டறிந்தார்களா என்பதே கதை. ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் தயாரிப்பில் DC காமிக்ஸ் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொடர். குட்டி குட்டி ஹைப்ரிட் குழந்தைகள் ஈர்க்கிறார்கள். குறிப்பாக கஸ்ஸின் வெள்ளந்தித் தனத்தில் உருகித்தான்போகிறோம். சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை, கதையைத் தெளிந்த நீரோடைபோல நகர்த்தும் காட்சி அமைப்பு, காடுகளின் பேரழகைப் படம்பிடித்துக் காட்டும் ஒளிப்பதிவு என ஒரு மெகா சைஸ் விருந்து வைத்திருக்கிறார்கள். இரண்டாவது சீசன் ஆன் தி வே எனும் நிலையில், நிச்சயம் கஸ்ஸின் இந்த நெகிழ்ச்சியான சாகசப் பயணத்தை ரசிக்கலாம்.


மகாராணி - SERIES
ரப்பர் ஸ்டாம்பாக அமர வைக்கப்படும் ஒரு பெண் முதல்வர், அதிகாரத்தைக் கையிலெடுத்தால் என்ன நடக்கும் என்பதுதான் சோனிலைவில் வெளியாகியிருக்கும் ‘மகாராணி’ தொடரின் ஒன்லைன். பீகார் முதல்வர் பீமா பாரதியை எதிரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட, மாற்று முதல்வருக்கான ரேஸ் தொடங்குகிறது. பீமாவோ, அரசியலின் அரிச்சுவடி அறியாத அவர் மனைவி ராணி பாரதியை முதல்வராக அறிவிக்கிறார். கண்டுபிடிச்சுட்டீங்களா. ஆம், லல்லு-ராப்ரி கதையை பீமா, ராணியாக மாற்றியிருக்கிறார்கள். மாட்டுத் தீவன ஊழல், பீகாரின் ஜாதியப் பிரச்னைகள் போன்ற பலவற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ராணி பாரதியாக ஹூமா குரோஷியின் நடிப்பு அட்டகாசம். தமிழ் டப்பிங் செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பிளஸ் என்றால், எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் தப்பும் தவறுமாகச் செய்திருப்பது மைனஸ். சின்னச்சின்னக் குறைகள், வரலாற்றுத் திரிபுகள் இருந்தாலும், பக்கா த்ரில்லராக வெளிவந்து கவனம் பெறுகிறது மகாராணி.


Aarkkariyam - MOVIE
ஒரு மெல்லிய இழையை எடுத்து த்ரில்லராக மாற்றிவிடும் மலையாளத் திரைப்படம்தான் ‘ஆர்க்கறியாம்?’ தமிழில் சொன்னால் ‘யாருக்குத் தெரியும்?’ கோட்டயத்தில் வசித்துவரும் தன் தந்தை, ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் பிஜூ மேனனைப் பார்க்கவும் பள்ளி விடுதியில் தங்கிப்படிக்கும் தன் மகளைப் பார்க்கவும் பார்வதியும் செராபுதீனும் மும்பையிலிருந்து கோட்டயம் வருகிறார்கள். கோவிட்டை முன்னிட்டு மோடி லாக்டௌன் அறிவிக்க, நாகர்கோவிலில் படிக்கும் மகளைப் பார்க்கச் செல்ல இயலாத நிலை. இதற்கிடையில் செராபுதீனின் வர்த்தகத்தில் ஏற்படும் சிக்கலால் பெரும் பணக்கஷ்டம். அதைத் தீர்ப்பதற்காகத் தன் வீட்டை விற்க முன்வரும் மாமனார் பிஜு மேனன், யாரிடமும் சொல்லாத மர்மத்தை செராபுதீனிடம் சொல்கிறார். அதை எப்படி இருவரும் தீர்க்கிறார்கள் என்பதை அழகான கேரளப்பின்னணியுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷானு ஜோன் வர்கீஸ். திரைக்கதையை வர்கீஸுடன் அருண் ஜனார்த்தனனும் ராஜேஷ் ரவியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். முதுமையின் தளர்வான உடல்மொழியையும் கறார்த்தன்மை குறையாத ஆசிரியரின் மனதிடத்தையும் பிரதிபலிக்கிறார் பிஜூ மேனன். உண்மை அறியாத இயல்பான வாழ்க்கையில் பார்வதியும், மர்மம் தெரிந்து அச்சம் கலந்த குறுகுறுப்புடன் செராபுதீனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயல்பான ஒரு த்ரில்லரைப் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் பார்க்கலாம்.


Raya and The last Dragon - MOVIE
‘நம்பிக்கை, அதானே எல்லாம்’ என்னும் டேக்லைனை மையமாக வைத்து ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது Raya and the last Dragon. குமாந்தரா என்னும் ஃபேன்டஸி நாட்டில், ட்ரூன் என்னும் நாசகார சக்தியால் மக்களும், டிராகன்களாக கற்களாக மாறிவிடுகிறார்கள். மிச்சமீதி மக்களும் ஒரு மாயாஜாலக் கல்லுக்கு அடித்துக்கொள்ள, அந்த மிச்சமீதியையும் கல்லாக்கிவிடுகிறது ட்ரூன். ரயா என்கிற சிறுமி எப்படி மீதமிருக்கும் ஒரு டிராகனை வைத்து எல்லாவற்றையும் மீட்கிறாள் என்பதுதான் கதை. அமெரிக்க மக்களின் வாழ்வியலை மட்டுமே பெரும்பாலும் அனிமேஷனாக மாற்றிக்கொண்டிருந்த வால்ட் டிஸ்னி, இந்த முறை தென் கிழக்கு ஆசிய மக்களின் வாழ்க்கை முறையைக் கையிலெடுத்திருக்கிறது. முகம், உடை எனப் பல விஷயங்களில் ஆசிய மக்களின் பிரதிபலிப்பைப் பார்க்க முடிகிறது. எல்லோருக்குமான சினிமாவைத் தர முயன்றிருக்கும் வால்ட் டிஸ்னிக்கு வாழ்த்துகள்.