சினிமா
Published:Updated:

OTT கார்னர்

All of us are dead
பிரீமியம் ஸ்டோரி
News
All of us are dead

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் டெல்லி கணேஷ், கணினி மயம் காரணமாகக் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பப்படுகிறார்.

All of us are dead - SERIES

கொரியப் படைப்புகளுக்கும் நெட்ப்ளிக்ஸுக்கும் இடையே இருக்கும் காதல் நாளாக நாளாக வலுவாகிக்கொண்டே இருக்கிறது. அதில் லேட்டஸ்ட், இந்தத் தொடர். அதுவும் கொரியாவுக்குப் பிடித்தமான ஜாம்பி ஜானரில். பள்ளி அறிவியல் ஆசிரியர் ஒருவர் புதுவித வைரஸ் ஒன்றைக் கண்டறிகிறார். அது மாணவர்களிடையே பரவி அவர்களை ஜாம்பிகளாக மாற்ற, அப்புறம் என்ன, ரத்தம் தெறிக்கும் கடிகளும் வெளியே தொங்கும் குடல்களுமாகக் குருதிக்களம்தான்.

OTT கார்னர்
OTT கார்னர்

முழுக்க முழுக்க டீனேஜ் இளைஞர்களை மையப்படுத்திய கதை என்பதால் காதல், கேலி, நட்பு, தியாகம் என அந்த வயதுக்கே உரிய உணர்வுகளை சரியாகக் கடத்துவதோடு தேவையான இடங்களில் பயத்தையும் பதைபதைப்பையும் கூட்டி நம்மைக் கட்டிப் போடுகிறது. ஒப்பனை, ஒளிப்பதிவு என மேக்கிங்கிலும் மிரட்டுகிறது. 12 எபிசோடுகள், ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் என்கிற நீளம்தான் சின்னப் பிரச்னை. ஹாரர் விரும்பிகள் தவறவிடக்கூடாத தொடர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Torn - Documentary

90களின் தலைசிறந்த மலையேற்ற வீரர்களில் ஒருவர் அலெக்ஸ் லொவ். ‘மலையேற்றத்தின் சூப்பர்ஹீரோ’ என இன்றளவும் கொண்டாடப்படுபவர். 1999-ல் திபெத்தின் சிஸபெங்மா சிகரத்திலிருந்து பனிச்சறுக்கு செய்து சாதனை படைக்கத் தன் நண்பர்களோடு சென்றவர், திடீர்ப் பனிச்சரிவில் சிக்கி இறந்துவிடுகிறார். இந்த இழப்பை அவரின் மனைவியும் மூன்று குழந்தைகளும் எப்படி எதிர்கொண்டு மீண்டார்கள் என்பதை நெகிழ்வாய்ச் சொல்லும் ஹாட்ஸ்டார் ஆவணப்படம் இது. பொதுவாக மலையேற்றம் குறித்த ஆவணப்படங்களில் சம்பந்தப்பட்ட வீரரின் சாகசங்களே அதிகமிருக்கும். ஆனால் முதல்முறையாக அப்படியான ஒருவரின் குடும்பம் பற்றிப் பேசியிருப்பதே இந்த ஆவணப்படத்தைத் தனித்து மிளிர வைக்கிறது. ‘பிடித்தவர் இறந்தபின் இன்னொருவரைக் காதலிப்பது இயல்புதான்’ எனச் சொல்வதில் தொடங்கி, 16 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படும் அலெக்ஸ் லொவின் உடலுக்கு குடும்பமாய் பனிச்சிகரத்தில் இறுதி விடைகொடுப்பதுவரை எக்கச்சக்க உணர்ச்சிகளைப் புதைத்து வைத்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Taming The garden - Documentary

ஜார்ஜியாவின் பெரும் பணக்காரரும் முன்னாள் பிரதமருமான பிட்ஜினா இவானிஷ்விலிக்கு மரங்கள் என்றால் அவ்வளவு பிரியம். இவானிஷ்விலி எப்படித் தன் பூங்காவை மரங்களைக் கொண்டு அழகுபடுத்தினார் என்பதை அப்படியே பதிவு செய்கிறது முபியில் வெளியாகியிருக்கும் Taming the garden டாக்குமென்டரி. புதிதாகச் செடிகளை நட்டு, அவை மரமாக காலத்திடம் காத்து நிற்பதற்குப் பதில், இவானிஷ்விலி கண்டுபிடித்ததுதான் இந்த மரங்களை நடும் பணி. இவானிஷ்விலியின் கூலிகள் உள்ளூர் மக்களிடம் இயற்கைக்கு விலைபேச ஆரம்பிக்கிறார்கள். 15 மீட்டர்கள் வரை மண்ணுக்குள் நீண்டு செல்லும் வேர்களுடன் அப்படியே அந்த மரங்கள் மண்ணிலிருந்து பிடுங்கப்படுகின்றன. இந்த மரங்கள் எடுத்துச் செல்ல பாதைகள் உருவாக்கப்படுகின்றன. மரங்கள் குறித்துப் பெரிய பற்று அந்த மக்களிடம் இல்லாமல்போனாலும், எல்லோரின் கரங்களிலும் குருதி படிந்திருப்பதை பணம் வாங்கிய பின்னர் உணரத் தொடங்குகிறார்கள் அவர்கள். இங்கு ஒரு காடு இருந்தது என்று சொல்லக்கூசுகின்ற கதையொன்று நிச்சயம் அந்த மண்ணை விட்டு அகலாமல் காற்றில் நிலைபெற்று இருக்கும். இயற்கை ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய முக்கியமானதொரு டாக்குமென்டரி.

OTT கார்னர்
OTT கார்னர்

நரை எழுதும் சுயசரிதை - Movie

‘ஜெய்பீம்’ மூலம் புகழ்பெற்ற நடிகர் மணிகண்டன் பத்தாண்டுகளுக்கு முன் இயக்கி, தற்போது சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘நரை எழுதும் சுயசரிதை.’ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் டெல்லி கணேஷ், கணினி மயம் காரணமாகக் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பப்படுகிறார். 40 ஆண்டுகளாக அவர் வாழ்ந்த உலகம் அவர் காலுக்கடியில் நழுவ, அந்தச் சூழலை எதிர்கொள்ளாமல் திணறும் சூழலில்தான் எதிர்பாராத கணத்தில் மணிகண்டனைச் சந்திக்கிறார். கிராமத்தில் இருந்து சென்னை வந்து வேலைக்காக முயலும் மணிகண்டனுக்கு, நேர்முகத்தேர்வுக்குச் செல்வதற்குக்கூட நல்ல உடையில்லை. வேலை தேடும் இளைஞனுக்கும் ஓய்விலிருந்து வேலையற்ற வாழ்க்கையின் வெறுமையில் புழுங்கும் முதியவருக்குமான நட்பை தலைப்பைப் போலவே கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார் மணிகண்டன். வீட்டில் சொல்லப்படும் சின்னச்சின்ன வேலைகள்கூடத் தன்னை அவமானப்படுத்துவதாய் நினைக்கும் ரிட்டயர்டு வாழ்க்கையின் மனநிலையை அவ்வளவு அழகாய்ப் பிரதிபலித்திருக்கிறார் டெல்லி கணேஷ். விளிம்புநிலையும் வெறுமையும் நிறைந்த பாத்திரத்தில் வழக்கம்போல் பொருந்துகிறார் மணிகண்டன். பத்தாண்டுகளுக்கு முந்தைய காலம் பல காட்சிகளில் தெரிவதும் ஆங்காங்கே தேக்கும் நாடகத்தன்மையும் பலவீனம் என்றாலும், மனம் ஒன்றி ரசிப்பதற்கான நல்லுணர்வுத் திரைப்படம்.