
தன் குடும்பத்தையும் சகாக்களையும் இழந்த ஜேம்ஸ் ரீஸ், அந்தக் கொலைகளுக்கான காரணி யார் என்பதைக் கண்டறிவதுதான் அமேசான் ப்ரைமில் தொடராக வெளியாகியிருக்கும் The Terminal List-ன் கதை.



The Umbrella Academy - Season 3
`தி அம்ப்ரெல்லா அகாடமி'யைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் குடும்பம், டைம் டிராவல் மூலம் ஏற்படுத்திய குழப்பங்கள் காரணமாக, புதியதொரு டைம்லைனில் அவர்கள் இல்லாத ஒரு காலம் உருவாகி நிற்கிறது. அவர்களுக்குப் பதில், அவர்களின் தந்தை, வேறுசில சூப்பர் ஹீரோக்களைத் தத்தெடுத்து `தி ஸ்பேரோ அகாடமி' நடத்திவருகிறார். இந்த மாற்றங்களினால், உலகையே மெல்ல மெல்ல விழுங்கும் கருந்துளை ஒன்றும் நகரில் உருவாகிறது. அதிலிருந்து இந்த உலகம் காப்பாற்றப்பட்டதா என்பதே இந்த சீசனின் கதை. 10 எபிசோடுகள் நீளும் இந்த சீசனில் பெரும்பாலும் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யமே மேலிடுகிறது. `ஃபைவ்' கதாபாத்திரம் வழக்கம்போல அதிரடி என்றால், இந்த சீசனில் `வான்யா', `விக்டர்' என்று தன் பாலினத்தை ஆணாக மாற்றிக்கொள்கிறார். நிஜத்தில் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் எல்லியட் பேஜ் (எலன் பேஜ்) தன் பாலினத்தை மாற்றிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த சீசனில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய அலிசன் கதாபாத்திரத்தை வெறும் சுயநலவாதியாக இதில் சுருக்கியது நெருடல். இது நெட்ப்ளிக்ஸின் முக்கியமான தொடர்களில் ஒன்று.



Man vs. Bee
வீட்டுக்குள் இருக்கும் தேனீயைப் பிடிக்க வீட்டையே எரிக்கும் சம்பவம்தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த Man Vs Bee. மிஸ்டர் பீன், ஜானி இங்கிலீஷ் போன்ற கதாபாத்திரங்களின் மூலம் நம்மைச் சிரிக்க வைத்தவர் ரோவன் அட்கின்சன். அவர் நடித்திருக்கும் புதிய தொடர் தான் இது. எந்த வேலையுமில்லாமல் இருக்கும் ரோவன் அட்கின்சனுக்கு, தவறுதலாக ஒரு பெரும் பணக்காரரின் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு வருகிறது. அந்த மிகப்பெரிய வீட்டினைத் தனி ஆளாக ரோவன் பார்த்துக்கொள்வதைத் தடுக்கவே ஒரு தேனீயும் வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறது. `நான் ஈ' பட பாணியில் ரோவனும் தேனீயும் சண்டை போட்டுக்கொள்வது 9 எபிசோடுகளாக விரிகிறது. வீட்டிலிருக்கும் புதிய புதிய தொழில்நுட்பக் கருவிகளை வைத்துக்கொண்டு ரோவன் அடிக்கும் லூட்டி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகர மறுக்கிறது. மிஸ்டர் பீனின் ரசிகர்களுக்கு இந்தத் தொடரும் நிச்சயம் பிடிக்கலாம்.



The Man from Toronto
ஹாலிவுட்டின் Parody படங்கள் பார்ப்பவர்களுக்கு கெவின் ஹார்ட் மிகப் பரிச்சயம். ஸ்டேண்ட் அப் காமெடி பாலோ செய்பவர்களுக்கு அவர் இன்னமுமே நெருக்கம். அவரும் ஆக்ஷன் காமெடிப் படங்களுக்குப் பெயர்போன இயக்குநரான பேட்ரிக் ஹியூக்ஸும் சேர்ந்தால் வேறென்ன ஜானர் படம் எதிர்பார்க்க முடியும்? தன் மனைவியை சர்ப்ரைஸாக வெக்கேஷன் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார் கெவின் ஹார்ட். அங்கே அவரை உலகமே தேடும் ஒரு கான்ட்ராக்ட் கில்லர் எனத் தப்பாய் நினைத்து ஒரு கும்பல் கடத்திவிடுகிறது. இது நிஜ கில்லருக்குத் தெரியவர, அவர் கெவினைப் பயன்படுத்தித் தன் எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்க முயல்வதுதான் கதை. ஹிட்டா அப்படின்னா என்ன என சமீபகாலமாக கேட்கும் நெட்ப்ளிக்ஸிற்கு இந்தப் படமும் ஏமாற்றம் என்பதுதான் சோகம். அட்டகாசக் காமெடியை எதிர்பார்த்து வருபவர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகள் வைத்துச் சமாளிக்க முயன்றிருக்கிறார்கள். சும்மா ஜாலியாய் படம் பார்க்க நினைப்பவர்கள் இதைக் க்ளிக்கலாம்.



The Terminal List
தன் குடும்பத்தையும் சகாக்களையும் இழந்த ஜேம்ஸ் ரீஸ், அந்தக் கொலைகளுக்கான காரணி யார் என்பதைக் கண்டறிவதுதான் அமேசான் ப்ரைமில் தொடராக வெளியாகியிருக்கும் The Terminal List-ன் கதை. எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் ஒரு சதிகாரப் பணியில் நடக்கும் ஒரு விபரீதச் செயலால் தன் அணியினரை மொத்தமாக இழந்துவிடுகிறார் ஜேம்ஸ் ரீஸ். அதன்பின் தொடரும் மர்ம மரணங்களுக்கும், தன் அணியினர் இறந்துபோனதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக உணர்கிறார். ஆனால், ரீஸுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்னைகளினால் அவராவே இப்படி கற்பனை செய்துகொள்கிறார் என ரீஸின் சீனியர்கள் அவரை நம்ப வைக்கிறார்கள். ஆனாலும், அந்த மர்மங்களைக் கண்டுபிடித்தே தீருவேன் என ஜேம்ஸ் ரீஸ் கிளம்பி லிஸ்ட் போட்டுக்கொள்வதுதான் எட்டு எபிசோடுகளாக விரிகிறது. மார்வெல் சினிமாக்களில் காமெடி நடிராக வரும் கிறிஸ் பிராட்டுக்கு இதில் ஜேம்ஸ் ரீஸாக சீரியஸான வேடம். இரண்டு மணி நேர சினிமாவாக வேண்டிய கதை, இழுவையாகியிருக்கிறது.