சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

சண்டைக்கோழிகளுக்குள் ஈகோ யுத்தத்தைத் தாண்டிக் காதல் மலர்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Our Beloved Summer

இனி பார்க்கவே கூடாதெனப் பிரிந்த இருவரை விதி மீண்டும் இணைக்கிறது. சீரிஸுக்குள் டாக்குமென்டரி என வித்தியாசமான பாணியில் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது கொரியத் தொடரான Our Beloved Summer. ஒரே வகுப்பின் டாப் மற்றும் வொர்ஸ்ட் ஸ்டூடன்ட்டை அருகருகே அமர்த்தி, அவர்களின் ஒவ்வொரு அசைவையும் டாக்குமென்டரியாகப் படம்பிடிக்கிறார் இயக்குநர் ஒருவர். இப்படி அமர்த்தப்பட்டவர்கள் சண்டைக்கோழிகளாகவே வளர்ந்து பிரிகிறார்கள். இவர்களை வைத்தே 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே போன்று டாக்குமென்டரி எடுக்க படக்குழு இருவரையும் சம்மதிக்க வைக்கிறது.

சண்டைக்கோழிகளுக்குள் ஈகோ யுத்தத்தைத் தாண்டிக் காதல் மலர்கிறது. கொரியர்களின் ரொமான்ஸ்தான் தற்போது உலகெங்கும் கொண்டாடப்படுவதால், இந்த சீரிஸுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். டீன்களின் ஹிட்லிஸ்ட்டில் தற்போது நம்பர் ஒன் `our beloved summer’தான்.

OTT கார்னர்
OTT கார்னர்

The tinder Swindler

ஒரு ஸ்வைப்பில் எல்லாவற்றையும் முடிவு செய்யும் டேட்டிங் உலகில், அதில் நடந்த ஒரு மோசடி பற்றிச் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Tinder Swindler. டிண்டர் எக்ஸ்பெர்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் சிசிலியின் குரலில் ஆரம்பிக்கிறது இந்த டாக்குமென்டரி. நட்சத்திர ஹோட்டல் உணவு, பிரைவேட் ஜெட் பயணம் என ஒரே நாளில் அடுத்தடுத்த ஆச்சர்யங்களை சிசிலியின் முன் அள்ளி வீசியிருக்கிறார் அந்த நபர். நமக்குச் சந்தேகம் என்றால் எங்கே செல்வோம், கூகுள்தானே. கூகுள், இன்ஸ்டா என எல்லா இடங்களிலும் அவரைப் பற்றி நம்பத்தகுந்த விஷயங்களே நிரம்பி வழிய, சிசிலியும் நம்பிச் செல்கிறார். தன்னையொரு வைர வியாபாரியின் மகன் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஷிமன் ஹயுத் சொன்னதில் எதுவுமே உண்மை கிடையாது. டாக்குமென்டரியில் வரும் மூன்று பெண்களுமே ஷிமன் வைத்துச் சென்ற கடன்களை இன்று வரையிலும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு குற்றச்சாட்டுகள், சில நாடுகளில் சிறைவாசம் என இருந்த ஷிமனின் அக்கவுன்ட்டை இந்த டாக்குமென்டரி வெளியானபின்தான் நீக்கியிருக்கிறது டிண்டர் என்பதுதான் இந்த டாக்குமென்டரியைவிட அதிர்ச்சி தரும் செய்தி.

OTT கார்னர்
OTT கார்னர்

I am georgina

க்றிஸ்டியானோ ரொனால்டோ - ஸ்போர்ட்ஸ் உலகில் கொண்டாடியோ, விமர்சிக்கப்பட்டோ தொடர்ந்து உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் பெயர். பாப்பரஸிகள் தொடங்கி உலகின் முன்னணி மீடியா நிறுவனங்கள் வரை இவரை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கின்றன. இத்தனை வெளிச்சமும் அவரின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸ்ஸின் வாழ்க்கை முறையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதைப் பேசும் நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி சீரிஸே ‘I am Georgina’. சராசரி விற்பனைப் பிரதிநிதியாய் இருந்து சூப்பர்ஸ்டாரின் இணையராக மாறியது தொடங்கி குழந்தைகள், தான் செய்துவரும் தொண்டுகள், க்றிஸுடனான காதல் என ஏராளமாக அவர் பகிர்ந்தாலும் பிரதானமாய் சீரிஸில் வெளிப்படுவது அவரின் ஆடம்பர லைப்ஸ்டைல்தான். பார்ப்பவர்களால் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியாத இந்த வாழ்க்கையே சீரிஸுக்கு ஒரு செயற்கைத்தன்மையையும் தந்துவிடுகிறது. ஆங்காங்கே ரொனால்டோவும் தலைகாட்டுவது மட்டும் பிளஸ். ரொனால்டோவின் பர்சனல் பக்கங்களை கொஞ்சமாய்த் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மட்டும் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Looop Lapeta

உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியப் படமான ‘ரன் லோலா ரன்’னின் அதிகாரபூர்வ ரீமேக்காக நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ‘லூப் லபேட்டா.’ பணத்தை இழந்த காதலுனுக்காக ஓடி, ஓடிப் பணத்தைத் தயார் செய்ய முயலும் காதலிக்கு அதற்காக மூன்று வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை. இதில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் டாப்ஸிக்கு, கணவன் சத்தியவானைக் காக்கும் சாவித்திரி வேடம். பதற்றம், தெளிவு, சமயோசிதம், கோபம், ஆற்றாமை என எல்லாமும் அவரிடம் சரிவர வெளிப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு விதமாகச் சிரிப்பை வைத்திருக்கும் தஹிர் ராஜ் பாசின் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார். படத்தின் பெரும்பலம் யாஷ் கண்ணாவின் ஒளிப்பதிவும், பிரியங் பிரேம் குமாரின் படத்தொகுப்பும். அவையே படத்தை வித்தியாசமான அனுபவமாக மாற்றியிருக்கின்றன. ரீமேக் என்றதும் அப்படியே எடுக்காமல், கதையிலும் கதை மாந்தர்களிலும் நிறைய மாற்றங்களைப் புகுத்தியிருக்கிறார்கள். ஜெர்மன் கதையை கோவா தெருக்களில் புகுத்தியதெல்லாம் சரிதான். ஆனால், கலை இயக்கத்திலிருந்து, கதாபாத்திரங்களின் அதீதமான முகபாவங்கள் வரை பல இடங்கள் நமக்கு அந்நியப்பட்டு நிற்கின்றன. இருந்தாலும் இந்த டைம் லூப் கதை ஒரு ரகளையான, ரசனையான டிராமா!