
பிரபல நடிகை ஒருவர் மாயமாக, அவரின் கடந்த காலத்தையும், அவரைத் தேடும் படலத்தையும் நான் லீனியராகச் சொல்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Fame Game.


Downfall: The Case Against Boeing - Documentary
சாலைப் போக்குவரத்தைவிடவும் பாதுகாப்பானதாக விமானப் போக்குவரத்தை உலகம் பார்க்கத்தொடங்கியிருக்க, 2019-ல் ஐந்து மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோர விமான விபத்துகளில் 346 பேர் பலியாகினர். தொழில் போட்டி எப்படி இந்த விபத்துகளுக்குக் காரணமானது, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை சரியில்லை என்றால் எந்த மாதிரியான விளைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் எனப் பல விஷயங்களை அலசும் ஆவணப்படம்தான் Downfall: The Case Against Boeing. அமெரிக்காவின் பிரபல ஆவணப்பட இயக்குநரான ரோரி கென்னடியின் படைப்பு இது. போயிங் முன்னாள் ஊழியர்கள், மறைந்த விமானிகளின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள், துறைசார் நிபுணர்கள் எனப் பலரின் குரல்களைப் பதிவுசெய்கிறது. தொழில்நுட்பக் கோளாறை மட்டும் விளக்காமல் போயிங்கின் பேராசை, அரசு தரப்பின் அலட்சியம் என விபத்தின் காரணங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்த ஆவணப்படம்.


The Fame Game - Series
பிரபல நடிகை ஒருவர் மாயமாக, அவரின் கடந்த காலத்தையும், அவரைத் தேடும் படலத்தையும் நான் லீனியராகச் சொல்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Fame Game. பகட்டான ரீல் வாழ்க்கை X வன்முறைகள் சூழ்ந்த ரியல் வாழ்க்கை என பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் அனாமிகாவுக்கு இரு முகங்கள். நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பில் பிரபல நடிகை மாதுரி தீட்சித்தே நடித்திருப்பதால் அந்தக் காட்சிகளை இன்னும் எளிதாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. அனாமிகாவைப் போலவே நடிகையாகத் துடிக்கும் அனாமிகாவின் மகள்; தன் பாலியல் பிரச்னைகளிலிருந்து மீளத் துடிக்கும் அனாமிகாவின் மகன்; அனாமிகாவின் பால்ய காதலர் என பலரின் கதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் இத்தொடர் டப் செய்யப்பட்டிருக்கிறது.


The Pirates: The Last Royal Treasure - Movie
கடற்கொள்ளையர்கள், கத்திச்சண்டை, ஏழு கடல் ஏழுமலை தாண்டி மறைந்திருக்கும் புதையல்... யாருக்குத்தான் பிடிக்காது இப்படியான படங்கள்? ஹாலிவுட் ஏராளமாய் கல்லா கட்டிய பைரேட்ஸ் ஜானரில் இப்போது கொரியாவின் முறை. போர் காரணமாக நாட்டின் செல்வங்களை எல்லாம் கப்பலில் ஏற்றி அதை எங்கோ மறைத்துவைத்து விடுகிறார் ஒரு தளபதி. அதைப் பல்வேறு குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கண்டுபிடிப்பது தான் கதை. காமெடி, ஆக்ஷன், ட்விஸ்ட் என ஹிட் படத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் இருப்பதால் குடும்பத்தோடு ஜாலியாய் பார்க்கலாம் என்கிற பட்டியலில் சுலபமாக வந்து அமர்ந்துவிடுகிறது இந்தப்படம். 2014-ல் வெளியான Pirates படத்தின் சீக்வெல்தான் என்றாலும் இரண்டும் தொடர்பில்லாத கதைகள் என்பதால் முந்தைய பாகத்தைப் பார்த்தேயாக வேண்டிய கட்டாயமில்லை. நெட்ப்ளிக்ஸ் தளத்தின் ரேட்டிங்கில் பல தினங்களாக டாப் டென்னில் இருக்கும் இது ஒரு ஜாலியான வீக்கெண்ட் வாட்ச்.


The Adam Project - Movie
டைம் டிராவல் செய்த தன் மனைவி காணாமல் போய்விட, அவளைத் தேடி இறந்த காலத்துக்குச் செல்கிறான் 40 வயதான ஆடம் ரீட். அங்கே இருக்கும் 12 வயது ஆடமுடன் இணைந்து இந்த சீனியர் ஆடம் செய்யும் சாகசங்கள்தான் கதை. ஆடமாக ரியான் ரெனால்ட்ஸ், எப்போதும் போல ‘அவராகவே’ திரையில் தோன்றி அதகளம் செய்திருக்கிறார். போதாக்குறைக்கு அவரின் 12 வயது வெர்ஷனாக நடித்திருக்கும் வாக்கர் ஸ்கோபெல்லும் ரியானை அப்படியே பிரதியெடுத்திருக்கிறார். விஞ்ஞானி அப்பாவாக ‘ஹல்க்’ புகழ் மார்க் ரஃபலோ அப்ளாஸ் அள்ளுகிறார். ஜோயி சல்டானா, கேத்ரீன் கீனர், ஜெனிஃபர் கார்னர் எனப் பெண் பாத்திரங்களும் கதையில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். டைம் டிராவல், இறந்த காலம், ஒருவரின் இரண்டு வெர்ஷன்கள் என்றவுடன் ஏதோ நோலன் படம் போலக் குழப்பியடிப்பார்களோ என நினைத்தால் அதற்கு மாறாக எளிமையாக விளக்கியிருக்கிறார் இயக்குநர் ஷான் லெவி. லாஜிக் தேவையில்லை, கொஞ்சம் மேஜிக் மட்டும் போதும் என்பவர்கள் தாராளமாக இந்த ஃபீல் குட் சினிமாவை ரசிக்கலாம். நெட்ப்ளிக்ஸில் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியிருக்கிறது.