சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

நிஜமான க்ரைம் சம்பவங்கள், சீரியல் கில்லர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படைப்புகள் சுவாரஸ்யம் என்பதைத் தாண்டி, பேரதிர்ச்சியைத் தருவதாகவும் இருக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

Appan - Movie

படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர்கள், அவர்களைக் கவனிக்கத் தவறும் குடும்பம் என்றே பல சினிமாக்கள் வந்துள்ள சூழலில் முற்றிலும் எதிர்த்திசையில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம், மஜு இயக்கத்தில் சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள ‘அப்பன்.' கால்கள் செயலிழந்து முடங்கிய நிலையிலும் அதிகாரத்தாலும் வசைகளாலும் தன் குடும்பத்தையே ஆட்டிப்படைக்கும் தகப்பன், அறம் சிறிதுமற்ற அவரின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஊர், எல்லா முரண்களுடனும் அந்த மனிதரைப் பாதுகாக்கும் குடும்பம் என்று சிறுகதைத்தன்மையும் பிளாக் ஹியூமரும் இணைந்து படம் முழுதும் இழையோடுகின்றன. சில நிமிடங்களிலேயே யாராலும் வெறுக்கப்படக்கூடிய ஒருவராக, படுக்கையிலிருந்தபடி அதிகாரம் செய்பவராக அதகளப்படுத்தியிருக்கிறார் அலென்சியர் லே லோபஸ். அன்பு - வெறுப்பு என்னும் இருகரைகளில் தத்தளிக்கும் மன உணர்வுகளை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார் படத்தைத் தயாரித்து நடித்திருக்கும் சன்னி வெயின். என்னதான் ஆங்காங்கே நகைச்சுவை மிளிர்கிறது என்றாலும் அதிகம் பொறுமையைக் கோரக்கூடிய படம். ஆனால், தந்தைமையின் புனிதத்தை உடைப்பதிலும் மனித மன நுட்பங்களின் பரிணாமத்தைச் சித்திரிப்பதிலும் மிக முக்கியமான சினிமா.

OTT கார்னர்
OTT கார்னர்

38 at the Garden - Short/Documentary

‘கை மேல் காசு, கலர்ஃபுல்லான வாழ்க்கை' என்கிற அமெரிக்கக் கனவெல்லாம் அங்கேயே பல நூறு ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் வாழ்ந்து வருபவர்களுக்கானது. ஆசியாவிலிருந்து கிளம்பிப் போய் அங்கே செட்டிலாகிறவர்களுக்கு நிறவெறி கொண்ட அச்சமூகத்தில் பிழைத்திருப்பதே பெரும்பாடெனும்போது கனவெல்லாம் எங்கே காண? ‘கோழைகள்', ‘கோப்புகளோடு குப்பை கொட்டவே பிறந்தவர்கள்' என ஏகப்பட்ட முன் தீர்மானங்களோடு அணுகப்பட்ட ஆசிய அமெரிக்கர்கள் அனைவருக்குமான பொது வெளிச்சமாய் இருந்தார் என்.பி.ஏ. சூப்பர்ஸ்டார் ஜெர்மி லின். Linsanity - என்.பி.ஏ-வின் தீவிர ரசிகர்கள் ஜெர்மி லின்னின் ஆட்டத்தை இப்படித்தான் அழைக்கிறார்கள்! உடல்தகுதியில், கள சாதுரியத்தில் ஆசிய மக்கள் அமெரிக்கர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களில்லை எனக் கூடைப்பந்து கோர்ட்டில் லின் நிரூபித்துக்கொண்டே செல்ல, தலைநிமிர்ந்தது ஒரு பெருங்கூட்டம். விளையாட்டின்வழி லின் நிகழ்த்திக்காட்டிய அந்தக் கலாசார மாற்றத்தைச் சிலிர்க்கும் வகையில் சித்திரிக்கிறது இந்த ஹாட்ஸ்டார் ஆவணப்படம். கூடவே, ‘கொரோனாவுக்கு மொத்த ஆசிய மக்களும்தான் காரணம்’ என்கிற அமெரிக்கப் பிற்போக்குப் பொதுப்புத்தியையும் விமர்சிக்கிறது. கூடைப்பந்து பற்றிய ஆவணப்படத்தில் கோஃபி பிரையன்ட் இல்லாமலா? அவரோடு லின் மோதி வென்ற ஆட்டம்தான் இதன் முக்கிய ஹைலைட்டே.

OTT கார்னர்
OTT கார்னர்

Frozen Planet II - Documentary Series

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும், அப்படி ஒன்று நடக்கவே இல்லை என மறுக்கும் சிலரும் இருக்கவே இருக்கின்றனர். முறைப்படுத்தப்படாத நவீன மனித வாழ்வினால் இயற்கையும் பிற உயிரினங்களும் என்ன மாதிரியான இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கின்றன என்பதை மிகவும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது பிபிசி-யின் வைல்டுலைஃப் டாக்குமென்டரி சீரிஸ் ‘Frozen Planet 2'. பிரபல இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவின் வர்ணனையில் வடதுருவத்தில் இருக்கும் ஆர்க்டிக் தொடங்கி தென்துருவத்தில் இருக்கும் அன்டார்ட்டிகா வரை பனிப்பிரதேசங்களில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையையும், புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாகக் கரைகின்றன என்பதையும் இதுவரை பார்த்திடாத வகையில் படம்பிடித்திருக்கிறது படக்குழு. இந்தப் பூமியின் அழகையும் அது சந்திக்கும் ஆபத்துகளையும் ஒருசேரப் பதிவுசெய்யும் இந்தத் தொடரை இந்தியாவில் சோனி லைவ் ஓ.டி.டி-யில் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Good Nurse - Movie

நிஜமான க்ரைம் சம்பவங்கள், சீரியல் கில்லர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படைப்புகள் சுவாரஸ்யம் என்பதைத் தாண்டி, பேரதிர்ச்சியைத் தருவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘தி குட் நர்ஸ்.' ஏமி லோரன் என்ற நர்ஸ், தன்னுடன் பணிபுரியும் சார்லி கல்லன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பல நோயாளிகளைக் கொன்றவர் என்பதைக் கண்டறிகிறார். 2 மாகாணங்கள், 9 மருத்துவமனைகள் என மொத்தம் 16 ஆண்டுகள் வேலை பார்த்த கல்லன், எங்குமே அதுவரை தான் செய்த கொலைகளுக்காகச் சிக்கவில்லை என்பதுதான் அதிலுள்ள பெரிய அதிர்ச்சி. சார்லி கல்லனாக எடி ரெட்மெயின், ஏமியாக ஜெஸ்ஸிகா சேஸ்டைன் இருவருமே சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். குறிப்பாக இதயப் பிரச்னையுடன் இந்தப் பிரச்னையையும் அணுகும் ஜெஸ்ஸிகாவின் நடிப்பு, இறுதிக்காட்சியில் அவருக்கும் எடிக்குமான அந்த உரையாடல் கிளாஸ் சினிமாவுக்கான இலக்கணம். ஸ்லோபேர்ன் க்ரைம் டிராமா என்பதால் நிச்சயம் பொறுமை அவசியம். இறுதியில் 29 கொலைகள் செய்திருப்பதாகக் கல்லன் ஒப்புக்கொண்டதாகவும், அவர் நிஜமாகவே செய்த கொலைகள் 400-ஐ தாண்டும் என்றும் கார்டு போடும்போது நமக்குமே ஒரு கணம் இதயம் நின்று துடிக்கிறது.