
வாட் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கும், அவர்களை வெல்லத் துடிக்கும் பாய்ஸ் குழுவுக்குமான யுத்தமே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘தி பாய்ஸ்’ தொடரின் ஒன்லைன்.


Hus tle (Movie)
ஆடம் சாண்ட்லர் - 90களில் தன் காமெடி நடிப்பால் புகழ்பெறத் தொடங்கிய இவருக்கு இன்று உலகம் முழுக்க ரசிகர்களுண்டு. இருபதாண்டுகள் தொடர்ந்து பல்வேறுவிதமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டதாலோ என்னவோ, கடந்த சில ஆண்டுகளாய் சீரியஸ் ரோல்களிலும் வெளுத்துவாங்குகிறார். அதில் லேட்டஸ்ட் வரவு நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ‘Hustle.’ அமெரிக்கர்களுக்கு பேஸ்கட்பால் லீக்கான என்.பி.ஏ நம்மூர் ஐ.பி.எல் போல. அதில் பிலடெல்பியா அணிக்காக இளம் வீரர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆடம் சாண்ட்லரிடம். தேடிச் சல்லடை போட்டு ஸ்பெயினில் இருந்து ஓர் இளைஞனை அவர் கொண்டுவந்து அணி நிர்வாகம் முன் நிறுத்தினால் ‘அந்த இளைஞனால் முடியும்’ என்பதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆடமும் அந்த இளைஞனுமாகச் சேர்ந்து அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்குவதுதான் கதை. ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிராமா டெம்ப்ளேட் படம்தான் என்றாலும், ஆடம் சாண்ட்லரின் நடிப்பு நம்மைப் படத்திற்குள் கட்டிப்போடுகிறது. நிஜ என்.பி.ஏ வீரர்களே நடித்திருப்பதால் விளையாட்டுக் காட்சிகள் அனைத்திலும் நிஜம் தெறிக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஜானர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒரு ஃபீல் குட் சினிமா பார்க்க விரும்பும் எல்லாருக்குமே ஏற்ற படம் இது.


The Boys (Series)
வாட் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கும், அவர்களை வெல்லத் துடிக்கும் பாய்ஸ் குழுவுக்குமான யுத்தமே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘தி பாய்ஸ்’ தொடரின் ஒன்லைன். வாட் நிறுவன சூப்பர் ஹீரோக்கள் செய்யும் அத்துமீறல்களைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. ஆனால், அதுவும் வாட் நிறுவனத்தின் உள்ளடி வேலைதான் என்பது பின்னர் தெரிய வருகிறது. சாமான்யர்களான பாய்ஸுக்கும் சூப்பர் பவர் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதாக இந்த மூன்றாவது சீசன் எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்கள், அரசியல் தலைவர்கள், மீடியாக்கள் என எல்லோரையும் துவம்சம் செய்வதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் எடுக்கப்பட்ட சீரிஸ். நக்கல், நையாண்டி எல்லாம் ஓ.டி.டி உலகிற்குக்கூட அடுத்த லெவல் என சர்வ நிச்சயமாய்ச் சொல்லலாம். அதீத வன்முறையும், ஆங்காங்கே வரும் அருவருக்கத்தக்க காட்சிகளும்தான் இதை எல்லோருக்குமான தொடராக இல்லாமல் வயது வந்தோருக்கான தொடராக மாற்றிவிடுகிறது.


Escaype Live (Series)
‘Escaype Live’ என்ற டிக்டாக் பாணியிலான ஆப், மூன்று கோடி ரூபாய் பரிசுடன் இந்தியர்களுக்கான ஒரு மெகா ‘டேலன்ட்’ போட்டியை அறிவிக்கிறது. தங்களின் திறமைகளைக் காட்டி 6 சாமானியர்கள் இதில் சாதிக்கத் துடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைவரை செல்கிறார்கள், விளையாட்டை அறிவித்த நிறுவனம் தங்கள் வர்த்தகத்துக்காக எந்த எல்லைவரை செல்கிறது என்பதைப் பரபர திருப்பங்களுடன் சொல்கிறது 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர். பழைமைவாதியாக வரும் சித்தார்த், நடக்கும் கூத்துகளுக்கு இறுக்கமான முகத்தைக் காண்பித்தே ஸ்கோர் செய்கிறார். டான்ஸ் ராணியாக வரும் சிறுமி ஆட்யா ஷர்மா, தன்னைப் பெண்ணாக உணரும் ரோஹித் சந்தேலின் பாத்திரத்துக்குப் பக்கபலமாக நிற்கும் ஸ்வேதா திரிபாதி, பணத்துக்காக ‘ஃபெட்டிஷ் கேர்ள்’ வேடம் ஏற்கும் பிலபிதா ஆகியோர் சிறந்ததொரு நடிப்பை வழங்கியிருக்கின்றனர். மேற்கத்திய ‘பிளாக்மிரர்’ பாணியில், சமூக வலைதளங்களின் ப்ளஸ், மைனஸை அலச நினைத்திருக்கிறது இந்தத் தொடர். ஆனால், மைனஸ் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. நல்லதொரு ஸ்க்ரிப்ட் பிடித்தவர்கள் மேக்கிங்கிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தத் தொடரைத் தமிழிலும் ரசிக்கலாம்.


Called to the wild (Series)
மனிதன் நாடோடியாய்ப் பயணம் தொடங்கிய காலத்தில் அவனுக்கு முதலில் நண்பனானது நாய்தான். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த நட்பை மையமாய் வைத்து வெளியாகியிருக்கும் ஹாட்ஸ்டார் சீரிஸ்தான் இது. மூன்று மனிதர்கள் தாங்கள் வளர்க்கும் நாயோடு மூன்று டீமாக சென்று அமெரிக்காவின் கரடுமுரடான ‘மெய்ன்’ காட்டுப் பகுதியில் பத்து நாள்கள் தங்கவேண்டும். உணவு, தங்குமிடம் போன்றவற்றைக் காட்டிலிருந்தே உருவாக்கிக் கொள்ளவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் வேட்டையாடுதல் கூடாது. இதில் எந்தெந்த அணிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே புள்ளிகள். இறுதியில் அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். மொத்தமே மூன்று எபிசோடுகள், எபிசோடிற்கு மூன்று அணிகள் என்பதால் பத்து நாள்களையும் விறுவிறுவெனக் காட்டிச் செல்கிறார்கள். அதனால் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் நான்குகால் நண்பர்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த மறுக்கிறார்கள். குழந்தைகள், குடும்பங்கள் ஜாலியாய் ஒரு சீரிஸ் பார்க்கவேண்டுமென்றால் இதை க்ளிக் செய்யலாம்.