சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

திரைப்பட விழாக்களிலெல்லாம் பங்கேற்றுவிட்டு இப்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் த்ரில்லர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

SHE - (season - 2) - WEB SERIES

போதை மருந்து கும்பலைப் பிடிக்க அண்டர்கவரில் செல்லும் ஒரு பெண் கான்ஸ்டபிளுக்கு என்ன ஆகிறது என்பதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் SHE தொடரின் ஒன்லைன். மும்பை நகரில் போதை மருந்துகளை சப்ளை செய்யும் நாயக் யார் என்பதைக் கண்டுபிடிக்க பாலியல் தொழியாளியாக வேடமிடுகிறார் பூமிகா பர்தேசி. நாயக்கிலிருந்து பலர் பூமிகாவுக்காகக் காத்துக்கிடக்க, வீட்டிலோ வேறு மாதிரியான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார் பூமிகா. வீட்டுப் பிரச்னைகளைச் சமாளித்து காவல்துறைக்கு உதவினாரா அல்லது நாயக்குடன் சேர்ந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக டபுள் கேம் ஆடினாரா என்பதுதான் தொடர் சொல்லும் மீதிக்கதை. பூமிகாவாக அதிதி பொஹன்கர் துணிச்சலாகப் பல காட்சிகளில் நடித்திருக்கிறார். நாயக்காக நம்மூர் கிஷோர். முடிவு தெரிந்த பின்னரும் இழுத்துக்கொண்டே செல்லும் குடும்பக் காட்சிகள் தேவையற்ற கிளைக் கதைகள் மைனஸ். பாலியல் சார்ந்த காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் அதிகம் என்பதால் வயது வந்தோருக்கு மட்டுமே. தமிழ் டப்பிங்கும் உண்டு.

OTT கார்னர்
OTT கார்னர்

Fresh - Movie

திரைப்பட விழாக்களிலெல்லாம் பங்கேற்றுவிட்டு இப்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ஹாலிவுட் த்ரில்லர் இது. ஆதரவற்ற நோவா தனக்கான துணையைக் கண்டுபிடிக்க ஒரு டேட்டிங் செயலியைப் பயன்படுத்துகிறார். அதில் ஸ்டீவ் அறிமுகமாக இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. ஒருநாள் இருவருமாய் ட்ரிப் கிளம்புகிறார்கள். அந்தப் பயணத்தில் ஸ்டீவ் பற்றிய உண்மைகள் நோவாவுக்குத் தெரியவர, அதன்பின்னான திக்திக் நிமிடங்கள்தான் கதை. செபாஸ்டியன் ஸ்டான் - டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பலமும் இவர்கள் இருவரும்தான். வழக்கமான த்ரில்லராய் இல்லாமல் பின்கதை கொஞ்சம் வித்தியாசமாய் விரிவதில் அடங்கியிருக்கிறது விறுவிறுப்பு. ஒருகட்டத்தில் படம் மெதுவாய் நகர்வதுபோலத் தோன்றுவதுதான் மைனஸ். படம் ஸ்ட்ரிக்ட்டாய் வயது வந்தவர்களுக்கு மட்டுமே!

OTT கார்னர்
OTT கார்னர்

Centauro - Movie

2017-ல் வெளியான பிரெஞ்சுப் படமான Burn out-ஐ இப்போது ஸ்பெயின் மொழியில் ரீமேக் செய்து நெட்ப்ளிக்ஸில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பைக் ரேஸரான ராபாவுக்கு அவரின் முன்னாள் மனைவியால் ஒரு சிக்கல். அந்தப் பிரச்னையிலிருந்து அவரை மீட்கும் முயற்சியில் ராபாவும் ஒரு போதை மருந்து மாபியாவிடம் மாட்டிக்கொள்கிறார். வேறுவழியே இல்லாமல் அதே மாபியாவுக்காக ராபா வேலை பார்க்கத்தொடங்க அது `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்' கதையாகிறது. வழக்கமாய்ப் பார்த்துப் பழகிய டெம்ப்ளேட் என்பது படத்தின் மைனஸ். ஆனால் தொண்ணூறே நிமிடங்கள். அதில் பரபர பைக் ரேஸ், சண்டைக் காட்சிகள் என்பதால் ஒரு டீசன்ட்டான த்ரில்லராய் ஜஸ்ட் பாஸாகிறது. லாஜிக், கதை என எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Spiderhead - Movie

மனிதர்களைப் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறது `ஸ்பைடர்ஹெட்' சிறைச்சாலை. அங்கே குற்றவுணர்வில் தவிக்கும் ஒரு கைதி, காதலை உண்டாக்கும் மருந்து குறித்துத் தெரிந்துகொள்கிறான். அதேபோல அங்கே வெவ்வேறு வகை மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் நடப்பதையும் அறிந்துகொள்பவன், அங்கே இருக்கும் தலைமை ஆராய்ச்சியாளரின் உண்மையான நோக்கத்தையும் கண்டறிந்தானா என்பதே இந்த நெட்ப்ளிக்ஸ் படத்தின் கதை. CGI விஷயங்களுக்குப் பெயர்போன இயக்குநர் ஜோசப் கொசின்ஸ்கி, இதில் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, இரண்டாம் வாய்ப்புகள் குறித்தும், மனித உணர்வுகள் குறித்தும் கதையைக் கட்டமைத்திருக்கிறார். ஆனால், திரைக்கதைதான் திணறுகிறது. புரட்டிப்போடும் ட்விஸ்ட்களைக்கூட ஒருவித வெறுமையுடன் காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள். ஐடியாவாகப் புதிதாக இருந்தாலும், அதற்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் எந்தவிதப் புதுமையும் சேர்க்காமல் மெலோடிராமாவாகக் கொண்டு சென்றது மைனஸ்!