சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

Mockumentary படமா, இல்லை த்ரில்லர் சினிமாவா, இல்லை கருத்து சொல்லும் கதையா என நமக்குள் எக்கச்சக்க கேள்விகளை எழுப்பி இது அத்தனையாகவும் கண்முன் விரிந்து அசரடிக்கிறது

OTT கார்னர்
OTT கார்னர்

Aavasavyuham - Movie

கேரள சினிமாக் கலைஞர்கள் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதே இல்லை. இந்த முறை சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆவாஷவியூகம்' படத்தின் மூலம் நம்மை வியப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். Mockumentary படமா, இல்லை த்ரில்லர் சினிமாவா, இல்லை கருத்து சொல்லும் கதையா என நமக்குள் எக்கச்சக்க கேள்விகளை எழுப்பி இது அத்தனையாகவும் கண்முன் விரிந்து அசரடிக்கிறது. நிஜத்தில் கேரள சதுப்புநிலக் காடுகளை மையம்கொண்டு நடக்கும் போராட்டத்தைத் திரைக்குக் கடத்தி, கொஞ்சம் சர்ரியலிஸம் கலந்து தத்துவம் பேசி, நம்மை யோசிக்க வைத்து குற்றவுணர்வுக்கு உள்ளாக்கி விடைகொடுக்கிறது படம். படத்தில் நடித்திருப்பவர்களில் அனேகம் பேர் புதுமுகங்கள். இயக்குநர் க்ரிஷாந்த் ஆர்.கே-வுக்கும் இது இரண்டாவது படம்தான். ஆனாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அத்தனை ஏரியாக்களிலும் பர்ஸ்ட் ரேங்க் வாங்குகிறது படம். த்ரில்லர், மெசேஜ் சொல்லும் படங்கள், வித்தியாச முயற்சியை ரசிப்பவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

The Flight Attendant - Series

`பிக் பேங்க் தியரி' புகழ் கேலி குவோகோவ் நாயகியாக நடிக்க, டார்க் காமெடி த்ரில்லரான ‘The Flight Attendant தொடர் இரண்டு சீசன்களாக அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. விமானப் பணிப்பெண்ணான கேலி, பாங்காக் செல்லும்போது விமானப் பயணி ஒருவருடன் நெருக்கமாகிறாள். அவருடனே இரவைக் கழிப்பவள், மறுநாள் காலையில் படுக்கையில் அவர் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். ஒரு பக்கம் போலீஸ் இவரைத் துரத்த, இன்னொரு பக்கம் நடந்த உண்மையைக் கண்டறியப் போராடுகிறாள். இரண்டாவது சீசனில், தன்னைப் போலவே இருக்கும் ஒரு பெண் கொலை செய்வதை அறிந்து, அவளைக் கண்டறிய முற்படுகிறாள். சாதாரணத் துப்பறியும் கதையாகத் தெரிந்தாலும், படமாக்கிய விதம் மற்றும் படத்தொகுப்பில் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். திரையை மூன்று, நான்காகப் பிரித்து, வெவ்வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களை ஒன்றாகக் காட்டுவது, ஒரே காட்சியை வெவ்வேறு கோணங்களில் காட்டுவது என அதகளம் செய்திருக்கிறார்கள். அழுது கொண்டே சிரிப்பது, சிரித்துக்கொண்டே அழுவது, மதுவுக்கு அடிமையாகித் திரிவது எனக் கேலியின் நடிப்பும் பிரமாதம். பக்கா பொழுதுபோக்கு சீரிஸ்!

OTT கார்னர்
OTT கார்னர்

DARLINGS - Movie

குடும்ப வன்முறை என்பதற்கு ஓர் ஆண் என்ன காரணம் சொல்லி சமாளித்தாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு மனதைக் கல்லாக்கி சகித்துக்கொண்டு வாழாமல் திருப்பி அடித்துவிட்டுக் கிளம்பி வாருங்கள் என்பதை நக்கலும் நையாண்டியும் கலந்து சொல்லியிருக்கிறது நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘டார்லிங்ஸ்.’ காதல் திருமணம் செய்திருந்தாலும், தினமும் குடித்துவிட்டு ஆலியா பட்டை அடித்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும் என்கிற அளவுக்கு குடும்ப வன்முறையில் ஆணாதிக்கம் மிக்கவராக மாறிவிடுகிறார் அவரின் காதலர் விஜய் வர்மா. சந்தேகப் பிராணி என்பது கூடுதல் தகுதி. எல்லாம் ஒருகட்டத்தில் எல்லை மீறிப் போக, எப்படி ஆலியா தன் தாய் ஷெவாலி ஷாவுடன் இணைந்து விஜய்யைப் பழி வாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை. ஷெவாலி ஷா, ரோஷன் மாத்யூ, விஜய் வர்மா, ஆலியா பட் என படத்தின் நான்கு முக்கியத் தூண்களுமே வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் திடுக்கிட வைத்தாலும், ஆலியா பட் பழிவாங்கும் காட்சிகள் அதைக் கொஞ்சம் ஈடு செய்துவிடுகின்றன. குடும்ப வன்முறை தவறு என்பதை எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்துவிட்டு அவல நகைச்சுவையிலாவது மெசேஜ் சொல்லிப் பார்க்கலாம் என இறங்கியிருக்கிறது பாலிவுட். லாஜிக் இல்லாத, ஜாலியான, அதே சமயம் பலர் பார்த்துத் திருந்த வேண்டியதொரு சினிமா.

OTT கார்னர்
OTT கார்னர்

Kung Fu Panda: The Dragon Knight - Series

களவாடப்பட்ட கான்ட்லட்டை குங்ஃபூ பாண்டா எப்படி மீட்கிறது என்பதுதான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் Kung Fu Panda: The Dragon Knight தொடரின் ஒன்லைன். உலகப்புகழ்பெற்ற போ என்கிற குங்ஃபூ பாண்டா அக்கடாவென சாப்பிட உட்கார, ஒரு கும்பல் அந்தக் கிராமத்தின் சக்திவாய்ந்த கான்ட்லட்டைத் திருட வருகிறது. தடுக்கிறேன் பேர்வழி என அவர்களைத் தப்பிக்கவிட்டு, ஊரையும் நிர்மூலமாக்கிவிடுகிறார் போ. அதன்பின் போ எப்படித் தன் இழந்த பெருமையை மீட்டார், போவின் இந்தப் பயணத்தில் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதாகத் தொடர் விரிகிறது. திரைப்படம், வெப் சீரிஸ் என மாறி மாறி வரும் குங்ஃபூ பாண்டா வரிசையில், இந்தப் பாகத்திற்குத் திரைப்படங்களில் குரலுதவி தந்த ஜேக் பிளாக் பேசியிருக்கிறார் என்பது கூடுதல் பிளஸ். அதனாலேயே திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. ஆனால், கதையே இல்லாமல் தானோஸிடமிருந்த கான்ட்லட்டைக் களவாடியது போல, ஒரு விஷயத்தை வைத்து முறுக்கு பிழிந்திருக்கிறார்கள். சாகசங்களும் சுவாரஸ்யமாக இல்லை. குங்ஃபூ பாண்டா விரும்பிகள் தாராளமாய்ப் பார்க்கலாம்.