சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

Better call saul - season 6
பிரீமியம் ஸ்டோரி
News
Better call saul - season 6

ஒரு மந்திரவாதியால் தவறாகச் சிறை பிடிக்கப்படும் கனவுகளின் கடவுளான மார்ஃபியஸ் (சேண்ட்மேன்), பல ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெறுகிறான்

OTT கார்னர்
OTT கார்னர்

Better call saul - season 6

உலகின் மிகச்சிறந்த தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘பிரேக்கிங் பேட்' தொடரின் ஸ்பின்-ஆஃப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸின் இந்த ‘பெட்டர் கால் சால்.' அந்தத் தொடரில் வரும் கிரிமினல் லாயர் சால் குட்மேனின் வாழ்க்கைப் பயணமே இந்தத் தொடர். இந்தக் கதை வழி பிரேக்கிங் பேட் கதையின் முன்கதையும் சொன்னது ‘பெட்டர் கால் சால்.' அதன் இறுதி சீசனும் இப்போது நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக நாம் ‘பிரேக்கிங் பேட்' தொடரில் பார்த்த எந்த அறமும் இல்லாத, பணத்துக்காக எதுவும் செய்யும் லாயராக சால் குட்மேன் கதாபாத்திரம் ஏற்கெனவே மாறிவிட்டது. இதன் விளைவுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த இறுதி சீசன். ‘பிரேக்கிங் பேட்' சம்பவங்களுக்குப் பிறகான சால் குட்மேனின் நிலையையும் சொல்கிறது. ‘பிரேக்கிங் பேட்' போலவே முக்கிய கதாபாத்திரங்களுக்கு மிகச்சிறப்பாக முடிவுரை எழுதியிருக்கிறது இந்த இறுதி சீசன். முக்கிய ‘பிரேக்கிங் பேட்' கதாபாத்திரங்களின் கேமியோக்களும் அர்த்தமுள்ளதாகவே இருப்பது கூடுதல் சிறப்பு.

OTT கார்னர்
OTT கார்னர்

PeaceMaker - Series

பட்டாம்பூச்சிகளின் வழி பூமியைக் கைப்பற்ற வரும் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து பீஸ்மேக்கர் எப்படி பூமியைக் காப்பாற்றுகிறார் என்பதே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் பீஸ்மேக்கர் தொடரின் ஒன்லைன். ‘சூசைட் ஸ்குவாட் 2’ படத்தில் வரும் பீஸ்மேக்கர் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு நீள ஆக்‌ஷன் காமெடித் தொடர் எனத் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கன். அமைதியை நிலைநாட்ட யாரையும் கொல்லலாம் என நினைக்கும் பீஸ்மேக்கர் கதாபாத்திரத்தின் குடும்பம், முன்கதை, அவன் பிரச்னைகள் ஆகியவற்றை அலசுகிறது இந்தத் தொடர். பீஸ்மேக்கராக ஜான் சீனாவும், விஜிலண்டியாக பிரட்டி ஸ்டிரோமாவும் அசத்தியிருக்கிறார்கள். வரிக்கு வரி நக்கல் நையாண்டி என விஜிலன்டி கதாபாத்திரத்துக்கு வேறு வடிவம் கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கன். டிசி காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களில் யாரையும் மிச்சம் வைக்காமல் எல்லோரின் காலையும் வாருகிறார் பீஸ்மேக்கர். இப்படியொரு ரகளையான தொடர் பார்த்து சில காலம் ஆயிற்று. வன்முறையும் வசவுச் சொற்களும் அதீதம் என்பதால் வயது வந்தோருக்கு மட்டும். டெட்பூல், சூசைட் ஸ்குவாட் மாதிரியான நகைச்சுவைப் பட விரும்பிகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Sandman - Series

ஒரு மந்திரவாதியால் தவறாகச் சிறை பிடிக்கப்படும் கனவுகளின் கடவுளான மார்ஃபியஸ் (சேண்ட்மேன்), பல ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெறுகிறான். அழிந்துவிட்ட தன் சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்க, காணாமல்போன தனது மந்திரப் பொருள்களைத் தேடி அலைகிறான். அதற்காக அவன் செய்யும் சாகசங்களும் சந்திக்கும் நபர்களுமே இந்த 'தி சேண்ட்மேன்.' நீல் கைமென் எழுதிய DC காமிக்ஸ் கதையை 10 எபிசோடுகள் கொண்ட சீரிஸாக மாற்றியிருக்கின்றனர். கூடுதலாக 2 பார்ட்டுகள் கொண்ட ஒரு ஸ்பெஷல் எபிசோடு போனஸ்! மார்ஃபியஸ் பாத்திரத்துக்குச் சிறப்பாக உயிர் கொடுத்திருக்கிறார் டாம் ஸ்டுர்ரிட்ஜ். தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் டெக்னிக்கல் விஷயங்களில் வாரி இறைத்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ். ஆனால், திரைக்கதைதான் தொடக்கம் முதலே இலக்கற்றுப் பயணிக்கிறது. மெதுவாக நகரும் கதை, பக்கம் பக்கமான தத்துவார்த்த வசனங்கள் சற்றே சோதிக்கலாம். இந்தக் கதை ஜஸ்டிஸ் லீக், ஸ்வாம்ப் திங்க், டூம் பேட்ரோல் என மற்ற DC காமிக்ஸ் கதைகளோடு தொடர்புடையது என்றாலும் சேண்ட்மேனின் சாகசங்கள் மட்டுமே இதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.

OTT கார்னர்
OTT கார்னர்

The Indian Matchmaking - season 2 - Series

சீமா ஆன்ட்டி - நெட்ப்ளிக்ஸே எதிர்பார்க்காத பரபரப்பைத் தன் சீரிஸ் மூலம் அள்ளித் தந்தவர். ஆனால் அனைத்துமே நெகட்டிவ் பப்ளிசிட்டி என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். திருமணத் தரகரான சீமா, மும்பை தொடங்கி அமெரிக்கா வரை பறந்து பறந்து வரன் பார்ப்பவர். அவரிடம் பெண்/மாப்பிள்ளை கேட்டு வரும் மனிதர்களின் கதையையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் காட்டும் ரியாலிட்டி ஷோதான் இது. போன சீசனே, ‘பயங்கர பிற்போக்குத்தனம்' எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த எதிர்மறை விமர்சனங்களையே மைலேஜாக வைத்து அடுத்த சீசனை இறக்கிவிட்டிருக்கிறார்கள். உருவகேலி, ‘பொண்ணுங்கன்னா அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்' என இந்த சீசனிலும் பிற்போக்குத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை. பிரியங்கா - நிக் ஜோனாஸ் திருமணம் வரையிலும் சர்வசாதாரணமாய் கமென்ட் அடிப்பதெல்லாம் அபத்தம். போக, சீமா இரண்டு சீசன்களிலும் சேர்த்து ஒரு திருமணம்கூட நடத்திவைக்கவில்லை என்பதுதான் காமெடி.