சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Never have i ever
பிரீமியம் ஸ்டோரி
News
Never have i ever

‘எப்போது தொடர வேண்டும் எனத் தெரிந்திருப்பதை விட எப்போது நிறுத்தவேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும்'

OTT கார்னர்

Never have i ever - Series

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தேவி விஷ்வகுமாரின் அமெரிக்க பள்ளி நாட்குறிப்புகளே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் Never Have i ever. தந்தையை இழந்த தேவிக்கு பள்ளித் தோழிகளும், அம்மாவும்தான் எல்லாமுமாய் இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட எளிதில் உடைந்துவிடக்கூடிய தேவி, தன் வாழ்வின் ஒவ்வொரு முதல் தருணத்தையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சீசனுக்கு பத்து எபிசோடுகள் என விரித்து கதை சொல்லியிருக்கிறார்கள். மூன்றாவது சீசனில் தேவிக்கும் பேக்ஸ்டனுக்குமான காதல், பிரிவு, மற்றுமொரு காதல் ஆகியவற்றைப் பேசியிருக்கிறார்கள். தேவியின் வாழ்க்கையோடு, தேவியின் நண்பன் பென், காதலன் பேக்ஸ்டன் என சிலரின் வாழ்க்கையும், கதைக்குள் கிளைக்கதையாக சொல்லப்படும். தேவியாக தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே இந்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கி வைத்திருக்கிறார், அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழீழ கனடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ்க் குடும்பம் என்பதால் ஆங்காங்கே வீட்டில் நிகழும் காட்சிகளில் மட்டும் தமிழ் வார்த்தைகள் வந்து விழும். மற்றபடி தொடர் முழுக்க ஆங்கிலம்தான். ஒரு பள்ளிப் பெண்ணின் எண்ண ஓட்டங்களை சரியாகக் கணித்து இதைத் திறம்பட எழுதியிருக்கிறார் மைண்டி காலிங். இக்கால இளசுகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, இந்தத் தொடரைப் பார்க்கலாம். அடுத்து ஆண்டு வெளியாகவுள்ள நான்காவது சீசனே இறுதி என அறிவித்துள்ளனர்.

OTT கார்னர்

Flight/Risk - Documentary

போயிங் விமானங்கள் என்றால் சமரசமில்லாத பாதுகாப்பு என்பதே அர்த்தமாக இருந்தது. ஆனால் மாறிவரும் வணிகச்சூழல் எப்படி அந்த நிறுவனத்தை ‘பணம் மட்டுமே குறிக்கோள்' என்ற நிலைக்குத் தள்ளியது என்பதை விளக்கும் அதிர்ச்சியூட்டும் அமேசான் ப்ரைம் ஆவணப்படம் இது. போட்டியாளரான ‘ஏர்பஸ்' நிறுவனத்தை சமாளிக்க அவசரக் கோலத்தில் ‘737 மேக்ஸ்' மாடலை உருவாக்குகிறது போயிங். கடைநிலை ஊழியர்கள் சிலர், இதன் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எச்சரித்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. விளைவு, இரண்டு மேக்ஸ் விமானங்கள் ஐந்து மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி 346 பேர் பலியாகினர். சட்ட நிபுணர்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் போயிங் நிறுவனத்தை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்த, அதன் விளைவுகளைப் பேசுகிறது இந்த ஆவணப்படம். ‘விமானப் போக்குவரத்தே அனைத்திலும் பாதுகாப்பானது' எனக் கருதும் சாமானியனுக்கு, அதன்பின்னால் இருக்கும் கார்ப்பரேட் அலட்சியத்தையும் வணிக அரசியலையும் முகத்திலறைந்து சொல்கிறது இந்தப் படம்.

OTT கார்னர்

Broad Peak - Movie

‘எப்போது தொடர வேண்டும் எனத் தெரிந்திருப்பதை விட எப்போது நிறுத்தவேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும்' - உலகெங்கிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் வாசகம் இது. போலந்து நாட்டின் மலையேற்ற முன்னோடிகளில் ஒருவர் மாச்சே பெர்பெக்கா. Eight-thousander எனப்படும் உலகத்தின் அத்தனை 8,000 மீட்டருக்கும் மேற்பட்ட சிகரங்களையும் ஏறவேண்டும் என்பது அவரின் குறிக்கோள். அதற்காக 80களில் அவரும் அவர் குழுவும் முயற்சிகள் எடுக்க, அதன் ஒருபகுதியாக 1988-ல் ‘Broad Peak' சிகரத்தில் ஏறுகிறார் மாச்சே. வெற்றிகரமாய் அந்தப் பயணத்தை முடித்துவிட்டு கீழே வருபவருக்கு ‘அவர் சென்றது நிஜ உச்சி இல்லை. மோசமான பருவநிலை காரணமாக அவர் தவறுதலாக கணித்துவிட்டார்' என்கிற அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் குற்றவுணர்ச்சியோடு வாழ்பவர் சரியாய் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே சிகரத்தை ஏற முயற்சிக்கிறார். அவர் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சொல்லும் நெட்ப்ளிக்ஸ் பயோபிக் படம்தான் இது. தொடக்கத்தில் உணர்ச்சிமயமாக இருந்தாலும், இறுதியில் சரியாய் முற்றுப் பெறாத உணர்வைத் தருகிறது இந்தப் படம். மலையேற்ற விரும்பிகளுக்கான படம் இது.

OTT கார்னர்

Goodnight Mommy - Movie

இரட்டைச் சகோதரர்களான சிறுவர்கள் எலியாஸும் லூகஸும் தங்களின் தாய் வீட்டுக்குப் பல நாள்களுக்குப் பிறகு வருகின்றனர். முகம் முழுக்க பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டு சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் தாயார். ஆனால், நடக்கும் சம்பவங்களால் முகமூடிக்குப் பின்னால் இருப்பது நிஜமாகவே தங்களின் தாய்தானா என்ற சந்தேகம் சிறுவர்களுக்கு வருகிறது. அதைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் செய்யும் முயற்சிகளும், அதன் பிறகு வரும் ட்விஸ்ட்களும்தான் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்த ‘குட்நைட் மாம்மி'. 2014-ல் இதே பெயரில் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆஸ்திரியாவின் ஹாரர் படத்தை ஹாலிவுட் சில மாற்றங்களுடன் ரீமேக் செய்திருக்கிறது. புகழ்பெற்ற நடிகை நவோமி வாட்ஸ் தாய் பாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நிஜத்திலும் இரட்டையர்களான கேமரூன் மற்றும் நிகோலஸ் க்ரோவெட்டி தங்களின் பிரமாதமான நடிப்பால் பரபரப்பைக் கூட்ட முயற்சி செய்திருக்கின்றனர். பின்னணி இசை சாதாரண காட்சிகளுக்கும் திகில் சாயம் பூசுவதற்கு முயன்றிருக்கிறது. ஆனால், ஹாரர் காட்சிகள் பெரிதாக இல்லாமல், ஒரு குடும்ப டிராமாவாக கதையை நகர்த்தியது ஏமாற்றமே!