
யாருமற்ற சிறிய தீவு. அதன் கலங்கரை விளக்கத்தின் பொறுப்பாளர் பீட்டர். அவரின் மகள் நீமோ. சிறுமி நீமோவுக்குப் பீட்டர் பல கதைகளைச் சொல்வார்.


Mickey: The Story of a Mouse - Documentary
மிக்கி மவுஸ்... 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கலாசார அடையாளம். அமெரிக்கா தொட்டு உலகின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடைந்த கற்பனைக் கதாபாத்திரம். மிக்கியின் நூற்றாண்டை நாம் நெருங்கும் நேரத்தில், அது கடந்துவந்த பாதையை ஒன்றரை மணிநேர ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில். கடனில் தத்தளித்த வால்ட் டிஸ்னியின் கடைசி நம்பிக்கையாக இருந்து கைகொடுத்துக் காப்பாற்றிய அந்த மூன்று வட்டங்களாலான முகம், இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பிரசார ஊதுகுழலாக, வியட்நாம் போரின்போது கலகக்குரலாக, இனவெறி, பாலினப் பாகுபாடு போன்றவற்றில் பிற்போக்குத்தனத்தின் துருப்புச்சீட்டாக, இப்போது அரசியல் தெளிவு காரணமாக அனைவரையும் அரவணைக்கும் உருவமாக... எப்படியெல்லாம் காலச்சக்கரத்தால் மாறி மாறிப் பந்தாடப்பட்டது என்பதை விறுவிறுவெனச் சொல்லிச் செல்கிறார்கள். பால்யத்தின் ஏதோவொரு புள்ளியில் நாம் அனைவரும் ரசித்த அந்த எலியை மீண்டும் சந்திக்கும் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் இது.


Wonder Women - Movie
கர்ப்பகாலப் பயிற்சி மையத்தில், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் சந்தித்துக்கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் சோனி லைவ்வில் வெளியாகியுள்ள ‘வொண்டர் வுமன்’ படத்தின் கதை. பார்வதி, நித்யா மேனன், பத்மபிரியா, நதியா எனப் பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தாலும் தன் கதாபாத்திர வரைவாலும் உணர்வுபூர்வமான நடிப்பாலும் சபாஷ் போட வைக்கிறார், ஜெயாவாக நடித்திருக்கும் அம்ருதா சுபாஷ். நிறைமாத கர்ப்பிணியாக பார்வதியும் கவனம் ஈர்க்கிறார். மற்றபடி நித்யா மேனன், பத்மபிரியா, நதியா தங்களின் வழக்கமான பாணியிலேயே நடித்துள்ளனர். வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாசாரங்கள் என்றாலும் பெண்கள் சந்திப்பது ஒரே பிரச்னைதான் என்பதை ஆழமான உரையாடல்கள் மூலம் எடுத்துரைக்கிறார் இயக்குநர் அஞ்சலி மேனன். ஆனால், படம் நெடுக உரையாடல்களே நிரம்பியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல, கர்ப்பகாலத்துக்கான பயிற்சி மையம் என்ற களத்தில் நிகழ்வதால், அனைவருக்குமான படமாக இல்லாமல், ஒருவித மேல்தட்டுத் தன்மையைத் தன்மீது பூசிக்கொள்கிறது.


Slumberland - Movie
யாருமற்ற சிறிய தீவு. அதன் கலங்கரை விளக்கத்தின் பொறுப்பாளர் பீட்டர். அவரின் மகள் நீமோ. சிறுமி நீமோவுக்குப் பீட்டர் பல கதைகளைச் சொல்வார். திடீரென ஒருநாள் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் பீட்டர் இறந்துவிட, நீமோ பரிதவிக்கிறாள். நீமோவைத் துயரிலிருந்து மீட்க நகருக்கு அழைத்துச் செல்கிறார் அவரின் மாமா பிலிப். பிரமாண்ட நகரம், பள்ளி நண்பர்கள், மாமாவின் பாசம் என எதனுடனும் நீமோவால் ஒன்றமுடியவில்லை. தனிமையே ஆட்கொள்கிறது. இந்தச் சூழலில், அவளின் கனவில் ‘Slumberland’ என்ற புதியதொரு உலகைக் காண்கிறாள். கனவுலகத்தில் தன் தந்தையைச் சந்திக்க முடிந்ததா, அதனால் நிஜவுலகில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதே இந்த நெட்ப்ளிக்ஸ் படத்தின் கதை. சிறுமி நீமோவாக வரும் மெர்லோ பார்க்லி, பிலிப்பாக வரும் ஜேசன் மோமோவா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கனவுலகத்தின் வழியே தனிமை, பிரிவு, உறவு என மனித உணர்வுகளை, மலைக்க வைக்கும் விஷுவல்ஸ் மூலமாகக் கடத்தியிருக்கிறார்கள். காமிக்ஸ் ஒன்றை எடுத்து, குழந்தைகளை மட்டும் குதூகலப்படுத்தும் ஃபேன்டஸி சாகசப் படமாக மாற்றியிருக்கிறார்கள்.

Christmas With You - Movie
நியூயார்க்கின் பிரபல பாடகி, தாயை இழந்து தந்தையின் ஆதரவில் வசித்துவரும் தன் ரசிகையின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது வீட்டிற்கு வருகிறார். ரசிகையின் தந்தைக்கும் பாடகிக்கும் இசையின் மூலம் நட்பு ஏற்படுகிறது. பாடகிக்கு ஏற்கெனவே காதலரும் இருக்க, அடுத்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் ‘Christmas With You’ படத்தின் கதை. கேப்ரில்லா டக்லியாவினி இயக்கத்தில், அய்மி கார்சியா, ஃப்ரெடி பிரின்ஸ் ஜூனியர், டேஜா மோனிக் குரூஸ் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது படம். பாடகியாக அய்மி கார்சியா எக்ஸ்பிரஷன்களில் மட்டுமல்ல, நடனத்திலும் நம்மை ஈர்க்கிறார். தந்தையாக ஃப்ரெடி பிரின்ஸ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். இவர்களைவிட படம் முடியும்வரை குறுகுறு பார்வையாலும் பேச்சாலும் நடனத்தாலும் நம்மை ஆட்கொள்வது மகளாக நடித்துள்ள டேஜா மோனிக் குரூஸ்தான். முதல் காட்சியிலிருந்தே அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகித்துவிடலாம். அந்த அளவிற்கு பலவீனமான திரைக்கதை. ஆனால், நியூயார்க்கின் குளிர்காலப் பனிக்காகவும், ஒரு நல்லுணர்வுப் படம் என்பதாலும் இதைக் கொண்டாடலாம்.