
‘உண்மை நடக்கும்... பொய் பறக்கும்!' - இதுதான் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகியிருக்கும் 8 எபிசோடுகளைக் கொண்ட ‘வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சீரிஸின் ஒன்லைன்.


Qala - Movie
ஒரு பெண் கலைத்துறையில் முன்னேறுவதற்காக, சாதிப்பதற்காக எதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் ‘Qala’ படத்தின் ஒன்லைன். அன்விதா தத் இயக்கத்தில், அனுஷ்கா சர்மா தயாரிப்பில் திரிப்தி டிம்ரி, ஸ்வஸ்திகா முகர்ஜி, பாபில் கான் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது இந்த இந்திப் படம். கனவு, லட்சியங்களைச் சுமந்துகொண்டு வலம்வரும் பாடகி கலாவாக திரிப்தி டிம்ரி. இந்த பீரியட் கதையில் பெண் என்பதாலேயே அவரின் முன்னெடுப்புகள் நசுக்கப்பட, அதை எதிர்த்துப் போராடும் காட்சிகளில் தன் தேர்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கனவு, ஏக்கம், நிராகரிப்பு, ஏமாற்றம், சதி, குற்ற உணர்வு எனப் பலதரப்பட்ட உணர்வுகளைக் கடத்தும் திரைக்கதை இதன் பலம். ஆனால், சாதிக்க விரும்பும் பெண்ணின் மீதே வெறுப்பு ஏற்படும் வகையில் பல காட்சிகள் திணிக்கப்பட்டது நெருடல். இசையே படத்தின் மூலதனம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கின்றன அமித் திரிவேதியின் இசைக்கருவிகள். மாறுபட்ட உணர்வினைக் கொடுத்தாலும் இந்த ‘Qala’ கொண்டாடப்பட வேண்டியவள்.


The Noel Diary - Movie
பிறக்கும்போதே அம்மாவால் கைவிடப்பட்ட மகளும், சிறுவயதில் தன்னை விட்டுச்சென்ற அப்பாவை வெறுத்து ஒதுக்கும் மகனும் ஒன்றாகச் சேர்ந்து முறையே தங்களின் தாய் மற்றும் தந்தையைத் தேடிச்செல்லும் பயணம்தான் இந்த ‘தி நோயல் டைரி.’ சார்லஸ் சையர் இயக்கத்தில் ஜஸ்டின் ஹார்ட்லி, பார்ரெட் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. தன் அம்மாவைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற சுயமரியாதை கொண்ட பெண்ணாக பார்ரெட் தாஸும், பெரிய பணக்கார எழுத்தாளராக இருந்தாலும் தன் அப்பாவைச் சந்திக்கவே கூடாது என்ற கோபத்தை வெளிப்படுத்துபவராக ஜஸ்டின் ஹார்ட்லியும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 70, 80களில் தமிழ் சினிமாவிலேயே அதிகம் அடித்துத் துவைக்கப்பட்ட கதைதான் என்றாலும் ‘பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்களா?’ என்கிற எதிர்பார்ப்பை தன் திரைக்கதை மூலம் கடத்துகிறார் இயக்குநர் சார்லஸ் சையர். யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் இந்த ஃபீல் குட் படத்தின் பெரும்பலம். ஒரு கோப்பைத் தேநீருடன் ரசிக்க வேண்டிய மழைக்கால சினிமா இது.


Freddy - Movie
இன்றைய தேதியில் தியேட்டர், ஓ.டி.டி இரண்டிலும் ஹிட்டடிக்கும் ஒரே பாலிவுட் ஸ்டார் கார்த்திக் ஆர்யன் மட்டுமே. த்ரில்லர், ஹாரர் காமெடி, ரொமான்டிக் காமெடி என மினிமம் கேரன்டி ஜானர்களில் மேக்ஸிமம் சக்சஸ் ரேட் வைத்திருக்கும் அவரின் லேட்டஸ்ட் வரவு, ‘ஃப்ரெடி.’ பல் மருத்துவரான ஃப்ரெடி, தன் பேஷன்ட் கைனாஸ் இரானி மேல் காதலில் விழுகிறார். கைனாஸோ ஏற்கெனவே திருமணமானவர். அவரின் கோபக்காரக் கணவனைப் போட்டுத்தள்ளினால் கைனாஸுக்கும் விடுதலை, தன் காதலும் ஈடேறும் என நினைக்கும் ஃப்ரெடி அதற்கு ஸ்கெட்ச் போட, அது அவரை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதுதான் கதை. படம் யூகிக்க முடிந்த ட்விஸ்ட்களையே கொண்டிருந்தாலும் தன் ஆன் ஸ்க்ரீன் மேஜிக்கினால் அதைச் சரிக்கட்டுகிறார் கார்த்திக் ஆர்யன். கதாநாயகி ரோலுக்கு ஆல்யாவும் பொருத்தம். என்ன, இரண்டாம் பாதியில் கொஞ்சமும் மெனக்கெடாமல் தேமேவெனக் கதையைக் கொண்டுபோய் சொதப்பியிருக்கிறார்கள். அதனாலேயே ஒரு சராசரி த்ரில்லராய் தேங்கிப்போய்விடுகிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த ‘ஃப்ரெடி.’


வதந்தி - Series
‘உண்மை நடக்கும்... பொய் பறக்கும்!' - இதுதான் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகியிருக்கும் 8 எபிசோடுகளைக் கொண்ட ‘வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சீரிஸின் ஒன்லைன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சினிமாவின் தரத்தோடு தயாரித்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவர் ஒரு ஹீரோயின் என மீடியாக்களில் செய்திகள் வருகின்றன. ஆனால், இறந்தவராகச் சொல்லப்பட்ட அந்தப் பெண் இறக்கவில்லை எனப் பின்னர் தெரிய வருகிறது. அப்படியென்றால் இறந்தது யார்? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அடுக்கடுக்காய் மர்ம முடிச்சுகள் விழுவதும் மெல்ல அவை அவிழ்வதுமாய் விசாரணை நீ...ள்...கி..ற..து! க்ளோசப் காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யா உணர்ச்சிகளைக் காட்டும் விதம் அபாரம். வெலோனியாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு இந்த சீரிஸ் அருமையான விசிட்டிங் கார்டு. முதல் இரண்டு எபிசோடுகளுக்குப் பிறகு திரைக்கதையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும் ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. கொஞ்சம் பொறுமையைச் சோதித்தாலும் த்ரில்லர் விரும்பிகளுக்கான ட்ரீட் இது!