தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Glass Onion - A Knives Out Mystery - Movie
பிரீமியம் ஸ்டோரி
News
Glass Onion - A Knives Out Mystery - Movie

ஏழை, பணக்காரர் வித்தியாசமில்லாமல் கொரோனா ஊரடங்கின்போது எதிர்கொண்ட பிரச்னைகள்தான் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் ஜீ5-ல் வெளியாகியிருக்கும் ‘India lockdown' படத்தின் ஒன்லைன்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Elephant Whisperers - Documentary

முதுமலை யானைகள் முகாமுக்குக் கொண்டுவரப்படும் ரகு–அம்மு என்ற இரு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப் போல பேரன்பை ஊட்டி வளர்க்கும் பொம்மன்–பெல்லி தம்பதியின் வாழ்வில் நடக்கும் உண்மைச் சம்பவங்கள்தான், கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Elephant Whisperers' ஆவணக் குறும்படம். யானைக்கன்றுகளின் சுட்டித்தனமும் பாசப்பிணைப்பும் நெகிழ வைக்கின்றன. புலியால் கணவரைப் பறிகொடுத்த பெல்லியின் மறுமணமும் க்யூட். பொதுவாக யானைப்பாகன்கள் என்றால் ஆண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இதில், யானையை வளர்க்கும் பெல்லியையும் ஆவணப்படுத்தியது அருமை. பசுங்காடுகளையும் காட்டுயிர்களையும் தத்ரூபமாகக் காட்டியுள்ள கரண் தப்லியால், கார்த்திகி கான்சால்வஸ், க்ரிஷ் மஹிஜா, ஆனந்த் பன்சாலின் ஒளிப்பதிவு அட்டகாசம். பார்வையாளர்களைக் குழந்தைகளாக மாற்றிவிடும் பொம்மன், பெல்லி, ரகு, அம்மு ஆகியோரின் உலகத்தில் தாராளமாக வாழ்ந்துவிட்டு வரலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Glass Onion - A Knives Out Mystery - Movie

2019-ல் வெளியான ‘Knives Out' படத்தின் இரண்டாம் பாகம். துப்பறிவாளராக உலா வரும் டேனியல் க்ரைக்கின் பெனாய்ட் பிளாங்க் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றுமொரு மர்மக் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரியான் ஜான்சன். புகழ்பெற்ற டெக் ஜாம்பவான் மைல்ஸ் பிரான் தன் நெருங்கிய நண்பர்களைத் தனக்குச் சொந்தமான தனித்தீவுக்கு விருந்தாளிகளாக அழைக்கிறார். அந்தக் குழுவில் பெனாய்ட் பிளாங்க் இருக்க, கொண்டாட்டங்களில் ஒருவர் இறந்துபோகிறார். கருத்து வேறுபாடுகள், பகையுணர்வு என எல்லோருக்கும் ஒரு மறுபக்கம் இருக்க, கொலையாளியை பெனாய்ட் கண்டறிந்தாரா என்பதே நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இதன் கதை. டேனியல் க்ரைக், எட்வர்ட் நோர்ட்டன், ஜேனல் மோனே தொடங்கி டேவ் பட்டிஸ்டா வரை அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இன்னமும் படம் நீண்டிருக்கலாமே என ஏக்கம் கொள்ளவைக்கும் அளவுக்குச் சுவாரஸ்ய திரைக்கதை. கடைசியில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்று என்றாலும், அதுதான் படத்தை ஒரு சாதாரண டிராமாவாக மாற்றியிருக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

India Lockdown - Movie

ஏழை, பணக்காரர் வித்தியாசமில்லாமல் கொரோனா ஊரடங்கின்போது எதிர்கொண்ட பிரச்னைகள்தான் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் ஜீ5-ல் வெளியாகியிருக்கும் ‘India lockdown' படத்தின் ஒன்லைன். ஹைதராபாத்தில் வசிக்கும் கர்ப்பிணி மகளைப் பார்க்க மும்பையிலிருந்து பாசத்தோடு பயணிக்கும் தந்தை, சாலையோரத்தில் உணவு விற்பனை செய்யும் புலம்பெயர் தொழிலாளி, இளம் காதலர்கள், ஒரு பாலியல் தொழிலாளி என நான்கு பேரின் வாழ்வியல் வழியாக கொரோனா லாக்டௌன் துயரங்களைக் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். பிரகாஷ் பெலவாடி, அஹானா கும்ரா, ஸ்வேதா பாசு எனப் பலர் நடித்திருந்தாலும் அழுத்தமான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் புலம்பெயர் தொழிலாளியாக வரும் பிரதீக் பப்பர். சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் துயரங்களையும் இந்த லாக்டௌன் சினிமாவில் இணைத்ததற்குப் பாராட்டுகள். ஆனால், அவர்களின் வலி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதவாறு மேம்போக்காகக் கையாளப்பட்டிருப்பது மைனஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Fall - Series

சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ஒரு ஃபேமிலி த்ரில்லர் சிரீஸ் ‘Fall.' அஞ்சலி, எஸ்.பி.பி.சரண், தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்கியராஜ், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப் என்று ஒரு நட்சத்திரக்கூட்டமே நடித்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் சென்டரை நிர்வகிக்கும் அஞ்சலி திடீரென்று ஒருநாள் அந்த சென்டரின் மாடியிலிருந்து கீழே விழுகிறார். தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவாகிறது. இன்னொருபுறம் அஞ்சலியின் காதலனும் தொழிலதிபருமான சந்தோஷ் பிரதாப், ஸ்போர்ட்ஸ் சென்டர் அமைந்துள்ள நிலத்தைத் தந்திரமாக விலைக்கு வாங்க முயல்கிறார். அஞ்சலிக்கு நடந்தது விபத்தா, தற்கொலை முயற்சியா, கொலைச்சதியா என்பதை தலையைச் சுற்றிச் சொல்லியிருக்கிறார்கள். கோமாவிலிருந்து மீண்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தேடலை வெளிக்காட்டுவதில் அஞ்சலி நன்றாக நடித்திருக்கிறார். பாத்திர வடிவமைப்பில் சொதப்பலும், நம்பகத்தன்மையற்ற திரைக்கதையும் இந்த வெப்சீரிஸையே டைட்டிலுக்கு ஏற்றாற்போல் வீழ்த்திவிடுகிறது.