
கல்லூரிப் பேராசிரியர் ஜேக் க்ளேட்னியின் குடும்பத்தைப் புரட்டிப் போடுகிறது அந்தச் சம்பவம். ஒரு விபத்தால் நச்சுப் புகை நகரம் முழுவதும் கருமேகமாகச் சூழ, உயிரைக் காத்துக்கொள்ள ஓடுகிறது அந்தக் குடும்பம்.


Aar Ya Paar - Series
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பண்ணும் அராஜகத்தைக் கண்டு வெகுண்டெழும் ஒன்மேன் ஆர்மியின் கதை. இந்திய நிலப்பரப்பின் பெருவனத்தை எப்படியெல்லாம் தங்கள் சுயலாபத்துக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அழிக்கின்றன, அப்படிச் செய்யும்போது அதன் பூர்வகுடிகள் என்னவாக மாறுகிறார்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவந்திருக்கும் ‘ஆர் யா பார்.' சத்தீஸ்கரின் நகர்ப்புற வளர்ச்சிக்குப் பின் புதைந்திருக்கும் சோகத்தையும், அரக்க மனம் கொண்ட கார்ப்பரேட்களின் லாபவெறி அரசியலையும் ஆக்ஷன் டிராமாவாக 8 எபிசோடுகளில் பதிவு செய்திருக்கிறது இந்த சீரிஸ். கதை நாயகனாக ஆதிவாசி இளைஞன் சர்ஜூ பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலின் மகன் ஆதித்யா ராவல். பெரிய பிசினஸ்மேனாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. தான் ஏற்றுக்கொண்ட பாத்திரமாய் மாறியிருக்கிறார் பத்ரலேகா. நீளம் குறைவு என்பது ப்ளஸ். ஆனால், கொஞ்சம் ஆக்ஷனைக் குறைத்து யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் மைல்கல் சீரிஸாக மாறியிருக்கும் இந்த ‘ஆர் யா பார்.'


Bardo, False Chronicle of a Handful of Truths - Movie
தனது புதிய ஆவணப்படத்துக்காக அமெரிக்க அரசின் உயரிய விருது ஒன்று தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை அறிகிறார் மெக்சிகோ பத்திரிகையாளர் சில்வேரியோ காமா. தன் சொந்த நாட்டை விடுத்து 20 ஆண்டுக்காலமாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அவருக்கு மனதளவில் இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கூடவே இருத்தல் குறித்தான தன் ஐயங்களும் சேர்ந்துகொள்ள, கனவுலகில் நிகழும் நிஜங்களும் நிஜ உலகில் நிகழும் கனவுகளுமாக விரிகிறது இந்த நெட்ப்ளிக்ஸ் சினிமா. ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு இயக்கியிருக்கும் படம். மெக்சிகன் அகதிகளின் குடிபெயர்வு, அமெரிக்காவில் வாழும் மெக்சிகர்களின் எண்ணவோட்டம் என அவருக்கு நெருக்கமான கதைக்களம். பிரமிக்க வைக்கும் சிங்கிள் ஷாட் காட்சிகள், அதற்குத் துணைநிற்கும் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என டெக்னிகலாக மலைக்க வைக்கிறது இப்படம். நிதானமாக நகரும் கதை, குழப்பத்தை ஏற்படுத்தும் கதைக்களம் என்றாலும் சினிமா எனும் காட்சி மொழி தரும் அதிசயத்தை அனுபவிக்க பேர்டோவை நிச்சயம் காணலாம். ஸ்ட்ரிக்ட்லி 18+.


Taaza Khabar - Series
கட்டணக் கழிப்பறையில் வேலை பார்க்கும் ஒரு சாமானியனுக்கு, அவன் உபயோகிக்கும் பாடாவதி செல்போன் மூலம் கொஞ்சம் வித்தியாசமான சூப்பர் பவர் கிடைத்தால்? சுவாரஸ்யமான இந்த ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு ஜென் Z தலைமுறைக்காக இந்த ஃபேன்டஸி வெப்சீரிஸைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹிமங் கவுர். வடக்கில் பிரபலமான யூடியூபர் புவன் பாம் ஹீரோவாக நடித்தது இந்தத் தொடருக்குப் பெரிய ப்ளஸ். வில்லனாக ஜே.டி.சக்ரவர்த்தியும் இந்தக் கதையில் இருக்கிறார், ஆனால் அது வழக்கமான பாத்திரம் என்பதுதான் சோகம். புவனுக்கும் நாயகி ஷில்பா பில்கோன்கருக்குமான வித்தியாசமான காதல் எபிசோடு ரசிக்க வைக்கிறது. சூப்பர் பவர் வந்தபிறகு புவன் செய்யும் வேலைகள் தொடக்கத்தில் ‘அட!' போடவைக்கும் அளவு சுவாரஸ்யமாக இருந்தாலும் போகப்போக அலுப்பை மட்டுமே தருகிறது திரைக்கதை. அதிகம் கழுத்தைச் சுளுக்கிக் கொள்ளாத ட்விஸ்ட்டுகள்தான் மைனஸ். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடரை புவனின் நடிப்புக்காகவும், வித்தியாசமான மேக்கிங்கிற்காகவும் மட்டும் பார்க்கலாம்.


White Noise - Movie
கல்லூரிப் பேராசிரியர் ஜேக் க்ளேட்னியின் குடும்பத்தைப் புரட்டிப் போடுகிறது அந்தச் சம்பவம். ஒரு விபத்தால் நச்சுப் புகை நகரம் முழுவதும் கருமேகமாகச் சூழ, உயிரைக் காத்துக்கொள்ள ஓடுகிறது அந்தக் குடும்பம். அதிலிருந்து தப்பி இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் பேராசிரியரையும் அவர் மனைவியையும் நெருக்குகின்றன மனப் பிரச்னைகள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? மிகை நடிப்பை அள்ளித் தெளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்டு ஒரு அவல நகைச்சுவை டிராமாவைத் தந்திருக்கிறார் இயக்குநர் நோவா பவும்பேச். ஆடம் டிரைவர், க்ரேட்டா கெர்விக் இருவரும் முதல் பரிசை வாங்க நினைக்கும் குழந்தைகள் போலப் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆபத்திலிருந்து மீள்வதை மட்டுமே படமாக எடுக்காமல் அதற்கு முன்னும் பின்னும் அழுத்தமான கதைக்களம் அமைத்தது பாராட்டுக்குரியது. ஆனால், ஒரு ஜானருக்குள் அடங்காமல் கதை பயணிப்பது, அடிஷனல் ஷீட் வாங்கி வசனங்கள் நீளமாக உதிர்க்கப்படுவது போன்றவை மைனஸ். வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும் ஏற்ற ட்ரீட் இந்த நெட்ப்ளிக்ஸ் சினிமா!