சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

Zee5 தளத்திற்காக பிரத்யேகமாக உருவாகியிருக்கும் தமிழ்ப்படம். நாயகி பிரியா பவானிசங்கருக்குப் பத்திரிகையாளராவதுதான் கனவு.

OTT கார்னர்
OTT கார்னர்

Atrangi Re - MOVIE

கட்டாய ‘கலாட்டா கல்யாணம்’ செய்துகொண்ட விசுவுக்கு (தனுஷ்) தன் மனைவி ரின்கு (சாரா அலி கான்) மீது நிஜமாகவே காதல் வந்துவிட, ரின்குவோ அவளின் காதலன் சஜ்ஜாத் அலி கானுக்காக (அக்‌ஷய் குமார்) கசிந்து உருக, இறுதியில் யாரின் காதல் கைகூடியது என்பதுதான் இந்த பாலிவுட் முக்கோணக் காதல் கதையின் ஒன்லைன். சூறாவளிப் பொண்ணு சாரா, அடக்கமான பையன் தனுஷ், மந்திர ஜாலக்காரன் அக்‌ஷய் என மூன்று முக்கியக் கதாபாத்திரங்களுக்குமே ரகளையான ரோல். அதிலும் தனுஷுக்கு அவர் தமிழில் சர்வசாதாரணமாகச் செய்யும் பாத்திரம்தான் என்பதால் இங்கும் அசத்தியிருக்கிறார். அக்‌ஷய் குமாரும் எந்தக் குறையுமின்றி நடித்திருப்பதால், இவர்கள் இருவரின் முன்னால் சாரா அலி கான் ஈடுகொடுக்க முடியாமல் சில இடங்களில் தடுமாறியிருக்கிறார். எமோஷனல் முக்கோணக் காதல் கதையில், அந்த உளவியல் கோணம் புதிது என்றாலும், அதைக் கையாண்ட விதத்தில் இன்னமும் கொஞ்சம் முதிர்ச்சி இருந்திருக்கலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் மேஜிக்கிற்கு உதவியிருக்கின்றன. குறிப்பாக தனுஷே பாடியிருக்கும் ‘லிட்டில் லிட்டில்’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் ஹைக்கூ கவிதை! டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழிலும் வெளியாகியிருக்கும் இந்தப் படம் ஒரு வீக்கெண்டுக்கான ட்ரீட்தான்!

OTT கார்னர்
OTT கார்னர்

MinnaL Murali - MOVIE

வெவ்வேறு சூழ்நிலைகளால், சோகத்தில் வாடிப்போயிருக்கும் இருவர்மீது மின்னல் பாய்கிறது. இருவருக்கும் சக்திகள் கிடைக்கின்றன. யார் என்ன வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், என்னவாக மாறுகிறார்கள் என்பதுதான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் மலையாள சினிமாவான ‘மின்னல் முரளி’யின் கதை. சூப்பர் ஹீரோ சினிமாவாக இருந்தாலும், மலையாளம் என்பதால் சற்று மெதுவாகவே கதை நகர்கிறது. மின்னல் முரளி டோவினோ தாமஸாக இருந்தாலும், நடிப்பில் அப்ளாஸ் அள்ளுவது எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் குரு சோமசுந்தரம்தான். பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். சூப்பர் ஹீரோக்கள் என்றாலே அதற்கேற்ற உடையுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல், கைலியுடன் சுற்றுவது, சோளக்காட்டு பொம்மையை முகமூடியாய்ப் பயன்படுத்துவது என ஒரு இந்தியத் திரைப்படத்தில் சிறந்த சூப்பர் ஹீரோ படமாக உருவாகியிருக்கிறது மின்னல் முரளி. அதே சமயம், இன்னமும் சூப்பர் ஹீரோ படத்தில்கூட, வில்லனைத் தமிழனாக முன்னிறுத்துவது, மனநலம் பாதிக்கப்பட்டவரின் மகனை மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காட்டுவது என அபத்த விஷமங்களுக்கும் குறைவில்லை. இந்த நெருடல்களைத் தாண்டி, சூப்பர் ஹீரோ படமாக மின்னல் முரளி உங்களைக் கவரலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Blood Money - MOVIE

Zee5 தளத்திற்காக பிரத்யேகமாக உருவாகியிருக்கும் தமிழ்ப்படம். நாயகி பிரியா பவானிசங்கருக்குப் பத்திரிகையாளராவதுதான் கனவு. அவர் கனவு மெய்ப்படும் நாளில் குவைத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தூக்கிலிடப்படப்போவதாகச் செய்தி வெளியாக, அந்த வழக்கை ஆராய்ந்து அவ்விருவரையும் காப்பாற்ற முயற்சி செய்கிறார். அவரின் முயற்சிகள் பலனளித்ததா என்பதே கதை. விறுவிறு த்ரில்லராக உருவாகவேண்டிய படத்தில் தந்தை - மகள் சென்டிமென்ட்டை இயக்குநர் சர்ஜுன் சேர்க்க, த்ரில்லராகவும் இல்லாமல், உணர்ச்சிகளும் ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர எஞ்சியவற்றில் கடத்தப்படாமல் சட்டென முடிகிறது படம். சில இடங்களில் ஒளிப்பதிவே கதை சொல்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பரபர த்ரில்லராக மாறியிருக்கவேண்டிய கதை ஒரு சராசரி சென்டிமென்ட் த்ரில்லராகத் தடம் மாறுகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Hawkeye - SERIES

மார்வெல் யுனிவர்ஸின் அடுத்த மினி சீரிஸான ‘ஹாக் ஐ’ (Hawk-Eye) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கேப்டன் அமெரிக்கா தவிர்த்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு அவெஞ்சருக்குமே ஒரு கறுப்புப் பக்கம் இருக்கும். இந்தத் தொடரில் கிளின்ட் பார்டனின் அந்தப் பக்கங்கள் புரட்டப்பட்டிருக்கின்றன. 6 எபிசோடுகள் கொண்ட இந்த மினி தொடர், மார்வெல் யுனிவர்ஸுக்கான எதிர்காலக் கதாபாத்திரங்கள் சிலவற்றை அறிமுகம் செய்திருக்கிறது. பிளாக் விடோவில், நடாஷாவின் தங்கையாக வந்த எலீனா, கிளின்ட்டின் பார்ட்னராக கேட் என இரண்டு கேரக்டர்கள் மார்வெலின் அடுத்த கட்டப் பாய்ச்சலில் இறங்கியுள்ளன. மார்வெல் யுனிவர்ஸ் படம் / தொடர்களிலேயே வேகம் குறைவாகப் பயணிப்பது ஹாக் ஐ-யின் இந்த அம்புகள்தான். ஆனால், பிரதான கதாபாத்திரத்தின் சூழ்நிலைக்கும் நிலைமைக்கும் அது தேவைப்படுகிறது. கிறிஸ்துமஸ் சமயத்தில் நடப்பது போன்ற திரைக்கதை அமைப்பிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும், விடுமுறை சமயத்தில் குழந்தைகளைக் கவர முயன்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Witcher - SERIES

நெட்ஃப்ளிக்ஸின் கேம் ஆஃப் த்ரோன்ஸாக 2019-ல் வெளிவந்தது ‘தி விட்சர்’ தொடர். ராஜ்ஜியங்கள், ஆரூடங்கள், மாயாஜாலம் என அதற்கான அனைத்து மூலப்பொருள்களும் விட்சரின் உலகத்தில் உண்டு. ஆனால், ஏனோ நேரடியாகக் கதை சொல்லாமல் முன் பின் செல்லும் திரைக்கதையால் மக்களைக் குழப்பியது முதல் சீசன். இருந்தும் கதாபாத்திரங்களும் அந்த உலகமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன. இப்போது இரண்டாவது சீசனும் வந்துவிட்டது. இம்முறை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்க்கோட்டில் கதை சொல்லியிருக்கிறார்கள். ‘கல்லுக்குள் ஈரம்’ விட்சராக ‘சூப்பர்மேன்’ நாயகன் ஹென்றி கெவில் இந்த சீசனிலும் கவர்கிறார். இந்த சீசனில் இளவரசி சிரில்லாவுக்கு விட்சருக்கு இணையான கதாபாத்திரம். இந்தச் சிறிய வயதில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ப்ரேயா ஆலன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு மான்ஸ்டரை வேட்டையாடுகிறார் விட்சர். VFX, சண்டைப்பயிற்சி என இந்தக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்கள். முதல் சீசன் வெளிவந்தபோது ‘Toss a coin to your witcher’ பாடல் செம ஹிட். அந்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துகிறது ‘Burn Butcher Burn’ பாடல். ஏழு சீசன் தொடராக விட்சரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஒருபுறம் ராஜ்ஜியங்களின் சூழ்ச்சி, மறுபுறம் மான்ஸ்டர்களின் அட்டகாசம், இதற்கு இடையில் மாயாஜாலம் என அடுத்த சீசனுக்காகக் காத்திருக்க வைக்கிறது தி விட்சர் சீசன் 2.

OTT கார்னர்
OTT கார்னர்

Don't Look Up - MOVIE

Comet ஒன்று ஆறு மாதகாலத்தில் பூமியைத் தாக்கி மொத்தமாய் பூமியை அழிக்க இருக்கிறது. இதை இருவர் கண்டுபிடிக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் நக்கல் கதையான Don’t Look Up-ன் ஒன்லைன். டிகாப்ரியோ, ஜெனிஃபர் லாரென்ஸ், மெரில் ஸ்டிரீப், மார்க் ரைலான்ஸ், டிமோதி, அரியானா கிராண்டு எனப் படம் முழுக்கவே செலிபிரிட்டிகளால் நிறைந்திருக்கிறது. அந்த காமெட்டைத் தடுக்க வேண்டும் என டிகாப்ரியோ குழு முயல, அமெரிக்க அதிபர் மெரிலும், டெக் பணக்காரரான ரைலான்ஸும் அந்தக் கல்லில் இருக்கும் தாதுக்கள் உலகத்துக்குத் தேவையென நம்புகிறார்கள். உலகம் அழியும் அதே நாளில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உலகம் அழிவதாக ஹாலிவுட் படம் ஒன்று வெளியாவதாக விளம்பரங்கள் வருகின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பைப் பல சமயம் நக்கல் அடித்திருக்கும் ஸ்டிரீப்புக்கு இதில் அதுவே வேடம். இன்னும் ரகளையாகச் செய்திருக்கிறார். உலகம் அழியவிருக்கும் பீதியில் இருக்கும் நபராக டிகாப்ரியோ வழக்கம்போல் அசத்தல். காமெடியாகவே எடுத்துச் செல்வதா, எமோஷனலாக மாற்றுவதா என்கிற குழப்பத்தில் திரைக்கதை சற்று சறுக்கிவிடுகிறது. என்னதான் நையாண்டிக் கதையாக இருந்தாலும், உலகம் அழியும் அந்தக் காட்சிகள் ஏனோ ஒருவித மென்சோகத்தை வரவழைத்துவிடுகின்றன.