சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

‘நாம் சந்திக்கும் நிஜம் என்பது மிகவும் மோசமாக இருப்பதால், அதிலிருந்து நம் கவனத்தை திசைதிருப்ப சினிமா உதவுகிறது.’

Harry Potter 20th Anniversary: Return to Hogwarts - Documentary

OTT கார்னர்
OTT கார்னர்

‘ஹாரிபாட்டர்’ முதல் பாகம் வெளியாகி 20 வருடங்கள் முடிந்துவிட்டதையொட்டி, அப்படத்தொடர் குறித்து உருவாகியிருக்கும் டாக்குமென்ட்ரி இது. ஹெச்பிஓ மேக்ஸ் தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படம், இந்தியாவில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. எட்டு பாகங்களையும் இயக்கிய இயக்குநர்கள், டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் என மூன்று முன்னணி பாத்திரங்கள் தொடங்கி படத்தொடரில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் தலைகாட்டியிருக்கிறார்கள். பிளாட்பார்ம் 9 3/4 தொடங்கி, ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் அறைகள், செட்கள் என அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஹாரிபாட்டர், ஹெர்மாய்னி, ரான் கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன்கள் தொடங்கி, எம்மா வாட்சனுக்கு வில்லன் நடிகர் டாம் ஃபெல்டனின் மேலிருந்த க்ரஷ், டேனியலுக்கு ஹெலெனாவின் மேலிருந்த க்ரஷ் எனப் பல ரகசியங்களைப் போட்டு உடைத்திருக்கிறார்கள். இந்த மாய உலகத்தை உருவாக்கிய எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் மட்டும் மிஸ்ஸிங். அவருடைய பழைய பேட்டி ஒன்றை இடையிடையே புகுத்திச் சமாளித்திருக்கிறார்கள். ‘பாட்டர்ஹெட்ஸ்’ மிஸ் பண்ணக்கூடாத முக்கியமான படைப்பு.

OTT கார்னர்
OTT கார்னர்

The lost daughter - Movie

பெண்கள் மட்டுமே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற சமூகக் கட்டமைப்பில் வாழும் இரண்டு பெண்களைச் சுற்றி நடக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The lost daughter. மகளைத் தொலைத்துவிட்டு தேடும் நீனா என்னும் பெண்ணை சந்திக்கிறார் லீடா. அதன்பின் அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளின் வழி தாய்மை என்னும் பொறுப்பு எப்படி சுமையாக மாறுகிறது என கதையை கட்டமைக்கிறார் இயக்குநர் மேகி க்ளையன்ஹால். ஒலிவியா கோல்மேன், டகோட்டா ஜான்சன் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். மீண்டும் ஆஸ்கார் ரேஸில் இத்திரைப்படம் மூலம் வரவிருக்கிறார் ஒலிவியா. வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றிருக்கும் The lost daughter, தாய்மை குறித்துப் பொது சமூகம் பேச மறுத்த விஷயங்களைப் பேசுகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

The HAND of GOD - Movie

‘நாம் சந்திக்கும் நிஜம் என்பது மிகவும் மோசமாக இருப்பதால், அதிலிருந்து நம் கவனத்தை திசைதிருப்ப சினிமா உதவுகிறது.’ நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The hand of God படத்தில் வரும் வசனம் இது. பவ்லோ சோரெண்டினோ இயக்கியிருக்கும் இந்த இத்தாலிய மொழித் திரைப்படத்தில் ஒரு இளைஞனுக்கு எப்படி சினிமா இயக்குநராகும் வாய்ப்பு கைகூடியது என கதை விரிகிறது. சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த பல விஷயங்களை ஒரு சுயசரிதையாக வேறொரு கதாபாத்திரத்தின் மீதேற்றி இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாவ்லோ சோரெண்டினோ. கதைக்குள் எப்படி மரடோனாவும், நேப்பிள்ஸும் வருகிறார்கள், இந்தக் கதைக்கு எப்படி The hand of God என்னும் மரடோனாவின் புகழ்பெற்ற சொற்றொடர் சரியான தேர்வாக இருக்கிறது போன்றவற்றை ரசிக்கும்படி சேர்த்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பலம் அதன் ஒளிப்பதிவு. இந்த ஆண்டு ஆஸ்கருக்கான அயல்மொழி பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியிருக்கும் இந்தப் படம், சினிமா ஆர்வலர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஒன்று.

OTT கார்னர்
OTT கார்னர்

The Rescue - Documentary

2018-ல் தாய்லாந்தின் தாம் லுயாங் குகைக்குள் மாட்டிக்கொண்ட 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்து கோச்சையும் எப்படி மனிதம் தன் விடாமுயற்சியால் மீட்டது என்பதை விரிவாகப் பேசும் ஹாட்ஸ்டார் ஆவணப்படம் இது. முதலில் ஆழ்குகை சாகச ஆய்வாளர்களின் கதை பற்றிப் பேசுவது போல இருந்தாலும் போகப் போக அவர்களின் உளவியல், உலகிலிருந்து தனித்திருக்க விரும்பும் அவர்களின் இயல்பே எப்படி இதுபோன்ற பணிகளுக்கு உதவுகிறது என்பதையும் கனெக்ட் செய்யும் இடம் சுவாரசியம். இதற்கு முன்னரும் சில ஆவணப்படங்கள் இந்த முயற்சியைப் பற்றி வெளிவந்திருந்தாலும் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின், அவர்கள் குடும்பங்களின் பேட்டிகள், உலகமெங்குமிருந்து வாஞ்சையாக நீண்ட உதவிக்கரங்கள் என அனைத்தையும் அலசிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் படம். பார்த்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு நொடியிலோ, இல்லை எல்லாம் முடிந்த பின் ஒலிக்கும் அந்தப் பாடலிலோ நிச்சயம், ‘அத்தனைக்கும் பின்னும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்கிற வரிக்கேற்ப நமக்கு சிலிர்ப்பது நிச்சயம்.