கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

நம்மூர் போலவே நார்வேயிலும் எக்கச்சக்க நாட்டுப்புறக் கதைகளுண்டு. அவற்றில் முக்கியமானவை Werewolf என்ற அமானுஷ்ய விலங்கு - மனிதன் கலவை இனம் குறித்த கதைகள்.

OTT கார்னர்
OTT கார்னர்

Class - Web Series

ஸ்பானிஷ் மொழியில் எக்கச்சக்க வரவேற்பைப் பெற்ற ‘எலைட்’ வெப்சீரிஸின் ரீமேக்தான், ஆஷிம் அலுவாலியா இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘Class.’ பணக்கார மாணவர்கள் படிக்கும் ஹைடெக் பள்ளியில் ஸ்காலர்ஷிப் மூலம் இடம் கிடைத்துப் படிக்க வருகிறார்கள் மூன்று ஏழை மாணவர்கள். முதலில் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பணக்கார மாணவர்கள் பின்பு நட்பாகிறார்கள். ஏழை நாயகனைக் காதலிக்கும் நாயகி அஞ்சலி சிவராமன் திடீரெனக் கொல்லப்படுகிறார். அவரைக் கொலை செய்தது யார் என்ற பதைபதைப்போடு தொடங்கி, 8 எபிசோடுகள் அந்தப் பரபரப்பைத் தக்கவைக்கும் முயற்சியே இந்த ‘Class.’ ஒரிஜினல் ‘எலைட்’டுக்கு நெருக்கமாக ரீமேக் பண்ணிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர். ஆண் மற்றும் பெண்களின் உணர்வு சார்ந்த பாலியல் உரிமைகளையும் பேசுகிறது இந்தத் தொடர். க்ளிஷே காட்சிகள் தவிர்த்து, இப்படியொரு இளமை ததும்பும் கதைக்குள் பட்டியலின மக்களும் சிறுபான்மையினரும் சாதி, மதவெறியால் சந்திக்கும் பாதிப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அடல்ட் காட்சிகள் உள்ளன என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமே இந்தத் தொடர்.

OTT கார்னர்
OTT கார்னர்

Lockwood & Co - Web Series

பேய்களின் அட்டகாசம் அதிகமாகிவிட்ட உலகில், பேய் ஓட்டும் ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றின் கதையாக விரிகிறது எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். டீன் ஏஜ் சிறுவர்கள் இருவர் நடத்தும் இந்தப் பேய் ஓட்டும் நிறுவனத்தில் புதிதாக பணிக்குச் சேர்கிறார், அதீத சக்திகள் நிரம்பிய லூசி என்ற பெண். பேய்களால் சிக்கித் தவிக்கும் உலகம் பற்றி இவர்கள் கண்டறியும் ரகசியங்களும், அதற்கான சாகசங்களும்தான் இதன் கதை. ரூபி ஸ்டோக்ஸ், கேமரூன் சேப்மேன், அலி ஹட்ஜி-ஹேஷ்மதி என மூவருமே தங்களின் கதாபாத்திரங்களைச் சிறந்த முறையில் உள்வாங்கிப் பிரதிபலித்திருக்கின்றனர். மாறிவிட்ட உலகம், பேய்களுக்கு பயந்து பின்பற்றப்படும் புதிய விதிமுறைகள், பேய் ஓட்டும் முறைக்கெனத் தனிப் படிப்புகள் என இதே பெயரில் வெளியான நாவலுக்குச் சிறப்பான முறையில் உயிர் கொடுத்திருக்கிறார் இந்த சீரிஸை உருவாக்கிய ஜோ கார்னிஷ். பேய்க்கதைதான் என்றாலும் அதை ஒரு டிடெக்டிவ் பாணியில் கொண்டு சென்றது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. மொத்தத்தில், இது ஒரு ஜாலி என்டர்டெயினர்!

OTT கார்னர்
OTT கார்னர்

True Spirit - Movie

12 வயதுச் சிறுமி ஜெசிக்கா தன்னந்தனியாக படகிலேயே கடலைச் சுற்றிவர ஆசைப்படுகிறார். ஆனால், அரசும் அக்கம் பக்கத்தினரும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். இதையெல்லாம் மீறி படகில் கடலைச் சுற்றி வந்தாளா, அவள் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதுதான் சரா ஸ்பில்லன் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘True Spirit.’ துணிச்சல் பெண் ஜெசிக்காவாக டேகன் கிராஃப்ட். அவரது கடலுலகில் நம்மையும் சேர்த்து அழைத்துச்செல்கிறார். அந்த உணர்வைக் கடத்துவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேனி ருஹ்மன். இது, ஒரு தன்னம்பிக்கைக் கதைதான். ஆனால், கடல் பயணம், ஜெசிக்கா குடும்பத்தினருடன் போனில் பேசுதல் போன்ற காட்சிகளே படம் முழுக்கத் தொடர்வதால் சில நிமிடங்களிலேயே அயர்ச்சி ஏற்படுகிறது. 12 வயதுச் சிறுமியாகக் காட்டப்படும் நாயகி டேகன் கிராஃப்ட் நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்டியிருக்கலாம். குறிப்பாக, புயலில் படகு கவிழ்ந்து ஆழ்கடலிலிருந்து படகு சீறிப்பாய்வதெல்லாம் ஓவர் சினிமாத்தனம். சாகச விரும்பிகளுக்கு மட்டும்!

OTT கார்னர்
OTT கார்னர்

Viking Wolf - Movie

நம்மூர் போலவே நார்வேயிலும் எக்கச்சக்க நாட்டுப்புறக் கதைகளுண்டு. அவற்றில் முக்கியமானவை Werewolf என்ற அமானுஷ்ய விலங்கு - மனிதன் கலவை இனம் குறித்த கதைகள். நார்வேயின் நிலப்பரப்பும் இக்கதைகளுக்குப் பொருத்தமாய் ஒத்திசைக்க, ஓநாய் மனிதனை மையமாய் வைத்து ஏராளமான கதைகளும் வெளியாகின. அதில் சமீபத்திய வரவு நெட்ப்ளிக்ஸின் ‘Viking Wolf’ படம். காவல்துறையில் வேலை பார்க்கும் பெண்ணுக்குத் தன் மகளால் ஒரு சிக்கல். பாசமா, பணியா என்கிற அவளின் இருமை மனநிலைதான் இந்தப் படத்தின் கதை. அந்த நிலப்பரப்புகளுக்கே உள்ள மாயத்தன்மை ஒளிப்பதிவிலும் காட்சியமைப்புகளிலும் வெளிப்பட்டிருப்பது ஒரு பிளஸ் என்றால், இதற்கு முன் பார்த்த பல சினிமாக்களின் சாயல் இருப்பது மைனஸ். யூகிக்க முடிந்த திரைக்கதை என்பதால் சுவாரஸ்யம் சிதைகிறது. திரில்லர் படம் பார்த்தே ஆகவேண்டும் என நினைப்பவர்களுக்கானது இது.