சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

அனில் கபூரும் ஹர்ஷவர்தன் கபூரும் இணைந்து நடித்திருக்கும் நெட்ப்ளிக்ஸ் படம் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

The Worst Person in the World - Movie

ஓஸ்லோவில் மருத்துவ மாணவியாக இருக்கும் ஜூலியின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை அத்தியாயங்களின் வழி சொல்வதுதான் முபியில் வெளியாகியிருக்கும் The Worst Person in the World. மருத்துவ மாணவியான ஜூலி சைக்காலஜி படிக்கலாம் என ஆசைப்பட்டு , பின் புகைப்படக் கலைஞராகிப் பார்க்கலாம் எனத் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். தன்னைவிட 15 வயது மூத்தவரான அக்ஸெல் இல்மேனுடன் வாழவும் ஆயத்தமாகிறார். அக்ஸெலுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசை; ஜூலியோ ஒருவிதக் குழப்பத்தில் இருப்பதால், அதைத் தள்ளிப் போடுகிறார். இதற்கிடையே எய்விண்ட் மேல் ஜூலி காதல் வயப்படுகிறார். 30 வயதை நெருங்கும் ஜூலிக்கு தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் எத்தகைய மன உளைச்சல்களையும் மாற்றங்களையும் தருகின்றன என்பது தான் படத்தின் அடிநாதம். ஒரு சினிமாவை 12 பாகங்களாகப் பிரித்துக்கொண்டு அதற்கொரு முன்னுரை, முடிவுரை எல்லாம் வைத்து வித்தியாசமான திரைக்கதையால் இதை க்ளாஸிக் ஆக்கியிருக்கிறார் நார்வே இயக்குநரான ஜோசிம் டிரயர்.

OTT கார்னர்
OTT கார்னர்

Man of the Match - Movie

சமீபகாலமாக வித்தியாச முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளும் கன்னட சினிமாவின் பரீட்சார்த்த முயற்சி இது. அறிமுக இயக்குநர் ஒருவர் தன் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய ஒரு ஆடிஷன் நடத்துகிறார். பல்வேறு குடும்ப, பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் காம்பவுண்டுக்குள் நுழைவது தொடங்கி வெளியே போவதுவரை எல்லாவற்றையும் படக்குழு படம்பிடிக்க, அதன் தொடர்ச்சிதான் கதை. மறைந்த புனித் ராஜ்குமாரின் தயாரிப்பில், வெரைட்டியாய் படம் எடுக்கும் சத்ய ப்ரகாஷ் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் போகிறபோக்கில் சினிமாவின் வர்த்தக அரசியல், கேட்ஜெட்களின் கண்காணிப்பில் வாழும் இன்றைய சமுதாயம் என ஏகப்பட்ட விஷயங்களை நையாண்டி செய்து பயணிக்கிறது. ஒரே இடத்தில் ஆரம்பக் காட்சி முதல் இறுதிவரை நிகழ்வதால் படம் பார்க்க பொறுமை அவசியம். ஆனால் முடிந்தபின் இதுவரை பார்த்திடாத ஒரு அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

பயணிகள் கவனிக்கவும் - Movie

சுராஜ் வெஞ்சனமூடு, சௌபீன் சாகிர் நடித்த ‘விக்ருதி’ மலையாளப்படத்தின் ரீமேக், ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்.’ வளைகுடா நாட்டிலிருந்து இந்தியா வரும் கருணாகரனுக்கு வாழ்க்கையே ஃபேஸ்புக், இன்ஸ்டா, லைக்ஸ், ஷேர்ஸ், கமென்ட்ஸ்தான். இந்த ஆர்வக்கோளாறால் அவர் செய்யும் ஒரு காரியம், பேச்சு மற்றும் கேட்கும் சவால் உள்ள விதார்த் - லட்சுமிப்பிரியா குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிறது. கருணாகரனுக்கோ வந்த இடத்தில் காதலித்த பெண்ணுடனே திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் அவராலும் மகிழ்ச்சியாக வாழ முடியாத சூழல். இந்தப் பிரச்னைகளை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை. விதார்த்தின் நடிப்பு கவனிக்கவைக்கிறது. கருணாகரன் ஓகே என்றாலும் குற்றவுணர்வும் பதற்றமும் கொண்ட உடல்மொழியில் போதாமை தெரிகிறது. கருணாகரனின் காதலியாக வரும் மசூம் சங்கர் நன்றாக நடித்திருக்கிறார். நல்லுணர்வுத் திரைப்பட விரும்பிகள் பார்க்கக்கூடிய படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Thar - Movie

அனில் கபூரும் ஹர்ஷவர்தன் கபூரும் இணைந்து நடித்திருக்கும் நெட்ப்ளிக்ஸ் படம் இது. ராஜஸ்தானின் வெக்கையடிக்கும் பாலைவன குக்கிராமம் ஒன்றில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார் அனில் கபூர். அந்த கிராமத்தில் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்கின்றன. அதேசமயத்தில் நிகழ்கிறது ஹர்ஷவர்தன் கபூரின் வருகை. அவரின் நடவடிக்கைகள் கிராமத்து மக்களுக்கும் புதிராகவே இருக்க, அடுத்தடுத்து என்ன நிகழ்கின்றன என்பதுதான் கதை. பாலைவனப் பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் என்றவகையில் விறுவிறுப்பான படம். பாத்திமா சனா ஷேக், ஜிதேந்திர ஜோஷி, சதிஷ் கெளசிக் என திரையில் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் ஆண்களின் ஆணவத்தில் பலியாகும் பெண்கள் என்கிற வழக்கமான பழிவாங்கல் கதையாகவே இறுதியில் மாறிவிடுவதுதான் குறை. வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமே!