சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

செயற்கைக் கருத்தரிப்பு என்கிற பெயரில் மருத்துவர் ஒருவர் செய்த அதிகார துஷ்பிரயோகத்தை மையப்படுத்தியதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Our Father டாக்குமென்டரி.

OTT கார்னர்
OTT கார்னர்

THE GETAWAY KING - MOVIE

நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டுகள். அதற்காகச் சிறையிலடைக்கப்பட்டபோது 29 முறை தப்பித்தது என போலந்து கிரிமினல் நஜ்ம்ரோட்ஸ்கியின் கதை உலகப் புகழ்பெற்றது. அவரின் வாழ்க்கையைத் தழுவி வெளியாகியிருக்கும் நெட்ப்ளிக்ஸ் படம் இது. 80களின் ஐரோப்பாவைக் கண்முன் நிறுத்தியது தொடங்கி பக்காவான காஸ்ட்டிங் வரை நிறைய உழைத்திருக்கிறது படக்குழு. கிரிமினலே என்றாலும் நஜ்ம்ரோட்ஸிக்கு போலந்தில் 'ராபின் ஹூட்' இமேஜ் இருந்ததால் படத்தையும் சீரியஸாக எடுத்துச் செல்லாமல் காமெடி ரூட்டில் நகர்த்தியிருக்கிறார்கள். ஹீரோவாக நடித்திருக்கும் டேவிட் ஓக்ரோட்னிக்தான் படத்தின் பெரும்பலம். நிஜத்தில் பலராலும் ஆச்சரியமாய்ப் பார்க்கப்பட்ட நஜ்ம்ரோட்ஸ்கியின் புத்திசாலித்தனம் படத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் வெளிப்படுவதுதான் மைனஸ். ஐரோப்பியப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் நிச்சயம் இதை வீக் எண்டில் பார்த்துக் களிக்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

THE PERFECT PAIRING - MOVIE

கொஞ்சநாள்களாக ரொமான்டிக் காமெடி என்கிற பெயரில் மொக்கைப் படங்களாக எடுத்துச் சூடுபோட்டுக்கொண்ட நெட்ப்ளிக்ஸ் ஒருவழியாக இந்தப் படம் மூலம் ஓரளவிற்கு ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறது. ஒயின் பிராண்ட்களை புரமோட் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் லோலா ஒருகட்டத்தில் அங்கிருந்து வெளியேறி சொந்தமாய் நிறுவனம் தொடங்குகிறார். அவரின் தற்போதைய தேவையெல்லாம் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஒயின் நிறுவனத்தின் பிசினஸ் டீல் மட்டுமே! அதைப் பெற ஆஸ்திரேலியா செல்லும் அவர் காதலில் விழுந்து டீலிலும் வெற்றிபெறுவதுதான் கதை. ரொமான்டிக் காமெடி படங்களுக்கே உரிய அதே ‘கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல்’ டெம்ப்ளேட்தான். லோலாவாக நடித்திருக்கும் விக்டோரியா ஜஸ்டிஸின் நடிப்பு ரசிக்கவைக்கிறது. ஒரு ஃபீல்குட் காதல் படம் பார்க்க நினைப்பவர்களின் சாய்ஸ் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

OUR FATHER - DOCUMENTARY

செயற்கைக் கருத்தரிப்பு என்கிற பெயரில் மருத்துவர் ஒருவர் செய்த அதிகார துஷ்பிரயோகத்தை மையப்படுத்தியதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Our Father டாக்குமென்டரி. தன் குடும்பத்தில் இருப்பவர்களைவிட தன் கருவிழியின் நிறம், முடியின் நிறம் என எல்லாமே மாறுபட்டு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறார் ஒரு பெண். DNA சோதனையில் வீட்டில் இருப்பவர் தன் நிஜ அப்பா இல்லையெனத் தெரியவருகிறது. அந்த நகரத்தில் இருக்கும் டான் க்ளீன் என்னும் மருத்துவர் முறைகேடாக செயற்கைக் கருத்தரிப்பில் சில விஷயங்களைச் செய்திருக்கிறார் என்பதைக் கண்டறிகிறார். அடுத்த சில ஆண்டுகளில், அதே நகரத்தைச் சேர்ந்த 93 நபர்கள் இந்தப் பெண்ணைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மருத்துவர் ஏன் இப்படிச் செய்தார் என்பதாக நீள்கிறது இந்த டாக்குமென்டரி பாதிக்கப்பட்டவர்களின் எமோஷனல் பக்கங்களை இன்னும் கரிசனத்துடன் அணுகியிருக்கலாம் என்பது மட்டுமே குறை.

OTT கார்னர்
OTT கார்னர்

PANCHAYAT - WEB SERIES

ஒரு கிராமப் பஞ்சாயத்தில் நடக்கும் விஷயங்கள்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘பஞ்சாயத்’ தொடரின் ஒன்லைன். முதல் சீசனில் வேண்டா வெறுப்பாக பஞ்சாயத்து அதிகாரி வேலைக்கு வரும் அபிஷேக் திரிபாதிக்கு இந்த சீசன் ஓரளவுக்கு எல்லாம் பழகிவிடுகிறது. ஆனாலும் புதுப்புதுப் பிரச்னைகள் இல்லாமலில்லை. அதிக சம்பளம் வாங்கும் நண்பர்கள், புதிதாகக் குடைச்சல் கொடுக்கும் எம்.எல்.ஏ, கிராமத்துக் குடும்பம் என தொடர் இந்த சீசனிலும் விறுவிறுப்பாகச் செல்கிறது. கிராமத்தில் இருக்கும் வெள்ளந்தியான எளிய மனிதர்களின் செயல்கள்தான் இந்தத் தொடரின் பெரும்பலம். மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் வேறு மாநிலத்தில் நிகழ்வதுபோலக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வட இந்திய கிராமங்கள் ஒப்பீட்டளவில் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்பதை அழுத்தமாக நிரூபணம் செய்கிறது இந்தப் பஞ்சாயத்.