சினிமா
பேட்டிகள்
Published:Updated:

OTT கார்னர்

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்ஸி

எமோஷனல் காட்சிகள் நிறைந்த அனிமேஷன் படங்களில் இந்த ஆண்டுக்கான நல்வரவு, சோனி பிக்சர்ஸ் நெட்பிளிக்ஸில் வெளியிட்டிருக்கும் விவோ.

ரேஷ்மி ராக்கெட் - MOVIE

இந்திய விளையாட்டு வீராங்கனைகள்மீது நிகழ்த்தப்படும் ஒரு மிகப்பெரிய வன்முறை குறித்துப் பேசி கவனம் ஈர்த்திருக்கிறது ஜீ5-ல் வெளியாகியிருக்கும் ‘ரேஷ்மி ராக்கெட்.’ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் தடகள வீராங்கனை ரேஷ்மிக்குத் திடீரென பாலின சோதனைகள் நடத்தப்படுகின்றன. மீடியாவும், இந்திய விளையாட்டு ஆணையமும் இணைந்து ரேஷ்மியை ஒன்றுமில்லாமல் செய்கிறது. சாந்தி சௌந்திரராஜன், துத்தி சந்த் என நம் சமகாலத்தில் பார்த்து வியந்த ஆளுமைகளின் மனப் பிரச்னைகளைக் கண் முன் கொண்டுவருகிறார் ரேஷ்மியான டாப்ஸி. டாப்ஸியின் கணவராக பிரியன்ஷூ, வழக்கறிஞராக அபிஷேக் பேனர்ஜி ஸ்மார்ட் சாய்ஸ். அமித் திரிவேதியின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். இந்த சோதனை எவ்வளவு தவறானது என்பதைப் பற்றிய விவாதமாக எழாமல், இதைத் தனிப்பட்ட இருவரின் போட்டியாக மாற்றியதில் சறுக்கிறது ரேஷ்மி ராக்கெட். இங்கு பேசப்பட வேண்டிய முக்கியமானதொரு விஷயத்தைப் பேசியதாலும், டாப்ஸியின் நடிப்பாலும், சமூகத்துக்கான படமாக மாறுகிறது ரேஷ்மி ராக்கெட்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

விவோ - MOVIE

எமோஷனல் காட்சிகள் நிறைந்த அனிமேஷன் படங்களில் இந்த ஆண்டுக்கான நல்வரவு, சோனி பிக்சர்ஸ் நெட்பிளிக்ஸில் வெளியிட்டிருக்கும் விவோ. க்யூபாவில் ஆண்டிரெஸ் ஹெர்னாண்டஸ் என்பவர் தன்னுடைய கிங்கஜோ என்கிற பிராணியுடன் இசை நிகழ்ச்சி நடத்திவருகிறார். தன் பால்ய கால தோழியான மார்ட்டா இசையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க, மார்ட்டாவை மனதில் வைத்து எழுதிய பாடலைப் பாடிக் காட்ட விழைகிறார் ஆண்டிரெஸ். ஆனால், சூழல் வேறுமாதிரி நகர, மொத்தப் பொறுப்பும் விவோ என்கிற கிங்கஜோவுக்கு வருகிறது. அந்தப் பாடலை மார்ட்டாவிடம் கொண்டு சேர்க்கிறதா கிங்கஜோ என்பதாக நகர்கிறது கதை. விவோவுக்கு உதவும் மனிதர்கள், வில்லன்கள், விலங்குகள் என எமோஷனல் கதைக்குள் சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். பாடல்களை எழுதிய லின் மேனுவல் மிரண்டா தான் விவோவுக்குக் குரலுதவியும் நல்கியிருக்கிறார். பாடல்கள் ததும்பத் ததும்ப வெளியாகியிருக்கும் விவோ, அனிமேஷன் விரும்பிகளுக்கான நல்லதொரு தேர்வாக இருக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

The Chestnut Man - SERIES

ஐரோப்பாவின் நார்டிக் நிலப்பரப்புகளுக்கு இயல்பாகவே ஒரு மாயத்தன்மை உண்டு. பனி படியும் காடுகளும் தூர தூர வீடுகளுமாய் த்ரில்லர், ஹாரர் ஜானர்களுக்கு அப்படியே செட்டாகும் என்பதால் அங்கிருந்து வரும் படங்களும் சீரிஸும் தரமானவையாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு இது. டென்மார்க்கில் அடுத்தடுத்து சில பெண்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கருகே செஸ்ட்நட்களால் செய்யப்படும் சிறிய மனித உருவம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றை க்ளூவை வைத்து போலீஸ், சீரியல் கில்லரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியைப் பரபர த்ரில்லராக மாற்றியிருக்கிறார்கள். ‘The Mist’ சீரிஸில் நடித்த டேனிகா க்யூரிக்தான் இதில் முதன்மைக் கதாபாத்திரம். சலிக்கச் சலிக்க சீரியல் கில்லர் படங்கள், தொடர்கள் வரும் நேரத்தில் அதை முடிந்த அளவிற்கு வித்தியாசமாய் விறுவிறுப்பாய்க் காட்டியதற்காகவே நெட்ப்ளிக்ஸின் இந்தத் தொடரை நிச்சயம் பார்க்கலாம். ஆறே எபிசோடுகள்தான். ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக் கடவது.

OTT கார்னர்
OTT கார்னர்

House of Secrets: The Burari Deaths - DOCUMENTARY SERIES

2018-ம் ஆண்டு டெல்லியிலுள்ள புராரியில் ஒரு வீட்டில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அப்போது மீடியா, சமூக வலைதளங்கள் எனப் பரபரப்பைக் கிளப்பிய இந்த வழக்கின் பின்னணியை, அந்த மரணங்களுக்கான காரணங் களை அலசுகிறது நெட் பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த டாக்குமென்ட்ரி சீரிஸ். முதல் எபிசோடு, அந்த உடல்கள் எப்படிக் கண்டெடுக்கப்பட்டன, அப்போது காவல்துறையும் மீடியாவும் என்னவெல்லாம் செய்தன என்பதை விளக்குகிறது. இரண்டாவது எபிசோடு, இந்த வழக்கின் முக்கிய ஆவணங் களான டைரிகள் பற்றிப் பேசுகிறது. கடைசி எபிசோடு, இந்த மரணங் களுக்கான முக்கியக் காரணமென்ன, இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து விவாதிக்கிறது. இறந்த குடும்பத்தின் சொந்தங்கள், இந்த வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் எனப் பலரின் கருத்துகளை முன்னிறுத்தி உண்மையைத் தேடியிருக்கிறார்கள். சில சித்திரிக்கப்பட்ட காட்சிகள், ரெக்கார்டு செய்யப்பட்ட பழைய புட்டேஜ், பேட்டிகள் எனப் பரபரப்புடனே விரியும் தொடருக்குப் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள் ஏ.ஆர்.ரஹ்மான் - குதுப் இ கிரிபா டீம். ஒரே விஷயத்தைப் பலரும் திரும்பத் திரும்பச் சொல்வதும், சித்திரிக்கப்பட்ட காட்சிகளில் புலப்படும் மிகு புனைவும் மைனஸ்! பதைபதைக்க வைக்கும் காட்சிகள், தற்கொலை, இறப்பு குறித்தான விவாதங்கள் இடம்பெறுவதால் இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்த்துவிடுவது நல்லது.

OTT கார்னர்
OTT கார்னர்

வினோதய சித்தம் - MOVIE

‘அவன் நேரம் நல்லாருக்கு, என் நேரம் சரியில்ல’ என எதற்கெடுத்தாலும் நேரத்தின் மீது பழிபோடும் மனிதர்களில் ஒருவருக்கு நேரமே மனித உருவம் எடுத்துவந்து வாழக் கற்றுக்கொடுத்தால்... இப்படி சுவாரசிய ஒன்லைனை ஜீ5-ல் படமாகக் கொண்டு வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ‘தானில்லாவிட்டால் உலகச் சுழற்சியே நின்றுபோய்விடும்’ ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்படும் தம்பி ராமையாவிற்கு, ‘ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது’ எனப் புரியவைக்க ஒரு ஆட்டம் ஆடுகிறார் சமுத்திரக்கனி. அதன் விளைவுகளே கதை. வித்தியாசமான ஒன்லைன் என்றாலும் அதில் பார்த்துப் பழகிய சென்டிமென்ட், வசனங்கள் என நகர்வது அலுப்பு. கருக்கலைப்பு குறித்த வசனங்கள், காதல் திருமணம் / லிவ் இன் குறித்த ஒப்பீடுகளில் எல்லாம் பழைமைவாதம் தெறிக்கிறது. ‘தன்னிடம்தான் மொத்தக் கன்ட்ரோலும் இருக்கிறது’ எனச் சொல்லிக் கொள்ளும் சமுத்திரக்கனியைத் தாண்டி தம்பி ராமையாவால் ஒருவரை ஏமாற்ற முடிகிறதென்றால் அப்போது சமுத்திரக்கனியின் பவர்தான் என்ன எனக் கேள்விகளும் எழாமல் இல்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

என்றாவது ஒருநாள் - MOVIE

விவசாய சினிமாக்கள் சீசனில் புதுவரவு வெற்றி துரைசாமி இயக்கி `ஜீ 5’ தளத்தில் வெளியாகியிருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படம். வழக்கம்போல் விவசாயிகளின் துயரங்களைப் பேசும் சினிமாதான் இது என்றாலும், மற்ற சினிமாக்களிலிருந்து இந்தப் படம் வேறுபடுவதன் காரணம் நம்பகத்தன்மை. வெறுமனே உணர்ச்சியூட்டும் வசனங்கள், செயற்கையான காட்சிகள் என்றில்லாமல் உண்மையிலேயே விவசாயிகளின் பிரச்னைகள் என்ன என்பதை விரிவான, அசலான காட்சிகளாக முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. விதார்த் வானம் பொய்க்கும் பூமியின் சம்சாரியாகவே மாறியிருக்கிறார். கணவரை இழந்து கடன் தொல்லைகளால் அல்லல்பட்டு, கூலிவேலைக்குப் போகும் பெண்ணாக ரம்யா நம்பீசனும், குழந்தைத் தொழிலாளராக மாறும் குடும்பப்பொறுப்புணர்ந்த சிறுவனாக ராகவனும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். நம்பகத்தன்மையே படத்தின் பலம் என்றபோதும் அதுவே பலவீனமாகவும் மாறி ஆவணப்பட சாயலைக் கொண்டுவந்துவிடுகிறது. சோகத்தை இசைக்கிறேன் என்ற பெயரில் என்.ஆர்.ரகுநந்தனின் இசை மிகையுணர்வை ஏற்படுத்துகிறது.