
‘The Terror Live’ கொரியன் படத்தின் இந்தி ரீமேக்காக நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் இது.
Kanakam kaamini kalaham - Movie


சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியிருக்கும் நிவின் பாலியின் படம். ‘தான் ஒரு மகாநடிகன்’ என நம்பிக்கொண்டிருக்கும் ஒருவருக்கும், சின்னத்திரை நடிகையான அவரின் மனைவிக்குமான ஈகோ மோதலைக் காமெடியாகச் சொல்லும் கதை இது. வித்தியாசமான கேரக்டர்கள் - அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது, அதன்வழியே நடக்கும் காமெடி என ரொம்ப மெனக்கெடாமல் எளிதாகச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். அது சில இடங்களில் சக்சஸ், சில இடங்களில் மிஸ்! நிவினுக்கு இயல்பாகவே ‘மாட்டிக்கொண்டு முழிக்கும்’ காமெடி எல்லாம் கைவந்த கலை. ஆனால் அவரையும் தாண்டி மிளிர்கிறார் கதாநாயகி கிரேஸ் ஆண்டனி. வினய் போர்ட், வின்சி அலோசியஸ், ஜாபர் இடுக்கி என ஒவ்வொருவரும் தனித்தனியே நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படமாக சில இடங்களில் சலிப்புத் தட்டுவது மட்டும்தான் குறை. ஹாட்ஸ்டாரில் பார்த்து டைம்பாஸ் செய்யலாம்!
Dhamaka - Movie


‘The Terror Live’ கொரியன் படத்தின் இந்தி ரீமேக்காக நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் இது. புகழ்பெற்ற செய்தித் தொகுப்பாளராக இருந்து பின் ஆர்.ஜேவாகப் பணியிறக்கம் செய்யப்பட்ட ஹீரோவுக்கு ஒரு போன்கால் வருகிறது. அதை அவர் அசட்டையாய் டீல் செய்ய, நகரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. வேறுவழியே இல்லாமல் அவர் லைவ்வில் குண்டு வைத்தவரோடு பேசி பிரச்னையை முடிக்கப் பார்ப்பதுதான் கதை. சர்ச்சைகளில் மட்டுமே சமீபகாலமாக அடிபட்டுவந்த கார்த்திக் ஆர்யனுக்கு தன் திறனைக் காட்ட நல்ல வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். வட இந்திய ஊடகங்கள் செய்தியை உருவாக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக நின்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் மாத்வனி. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சினிமாத்தனங்கள்தான் இயல்பைக் குலைக்கின்றன. த்ரில்லர் விரும்பிகளுக்கான வீக்கெண்ட் வாட்ச் இது.
Churuli - Movie


ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், காத்திருப்புகளுக்குப் பிறகு SonyLiv-ல் வெளியாகியிருக்கிறது லிஜோ ஜோஸ் பெலிசேரியின் ‘சுருளி.’ திருமேனி எனும் மாந்த்ரீகர், பெருமாடன் என்னும் தீய சக்தியைப் பிடிக்கக் காட்டிற்குச் செல்கிறார். பெருமாடன் அவரை திசைதிருப்பி முடிவே இல்லாத காலச் சுழற்சியில் சிக்க வைக்கிறது. இந்தப் புராணக் கதையின் நவீன வடிவத்தை மாயச்சக்கரமாக அபாரமான மேக்கிங் வழியே சொல்கிறார் இயக்குநர். லிஜோவின் ஆஸ்தான நடிகரான செம்பன் வினோத், கூடவே வினய் போர்ட், ஜோஜு ஜார்ஜ், செளபின் ஷஹிர், ஜாபர் இடுக்கி என கேரள சினிமாவின் அதி திறமை வாய்ந்த அத்தனை கலைஞர்களும் இதில் மிரட்டுகிறார்கள். உணவை லிஜோ கண்கள் வழியே பார்ப்பதே தனி சுகம். இந்தப் படத்தில் சாராயமும் பன்றிக்கறியும். யார் திருமேனி, யார் மாடன் என நமக்குள் கேள்விகளை எழுப்பி விடைதேட வைக்கும் புத்திசாலித்தனமான கதை சொல்லல். ஒளிப்பதிவு வழக்கம்போல வேற ரகம். படம் நெடுக வரும் கெட்ட வார்த்தைகள் மண்ணின் இயல்பா, திணிப்பா என சந்தேகம் எழுகிறது. கண்டிப்பாக படம் 18 வயதைத் தாண்டியவர்களுக்கு மட்டுமே!
Bruised - Movie


எக்ஸ்மென், ஜேம்ஸ்பாண்ட் புகழ் ஹாலே பெர்ரி முதல்முறையாக இயக்கி நடித்து நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம். ஹாலிவுட்டில் மட்டுமல்ல, நம்மூரிலும் பார்த்துப் பழகிய கதைதான். சராசரி வாழ்க்கையைத் தன்பாட்டுக்கு வாழ்ந்துவருகிறார் ஹாலே பெர்ரி. ஆனால் அவருக்கு பாட்ஷா பாய் போல ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது. ஒருகாலத்தில் புகழ்பெற்ற எம்.எம்.ஏ வீரர் அவர். சண்டையே வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் அவரை அடுத்தடுத்த நிகழ்வுகள் களத்திற்கு அழைத்துவர, அப்புறமென்ன... அதேதான். ‘ராக்கி’ முதல் ‘மில்லியன் டாலர் பேபி’ வரை நிறைய படங்களின் கலவையாக உருவாகியிருக்கும் இதில் தன் பங்கிற்கு தாய்ப்பாசத்தைச் சேர்த்திருக்கிறார் ஹாலே பெர்ரி. ஆனால் அதனாலேயே இது சண்டைப்படமாகவும் இல்லாமல், ஒரு வீராங்கனையின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசும் படமாகவும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கிறது. க்ளைமாக்ஸில் வரும் 20 நிமிட சண்டைக்காட்சி மட்டுமே படத்தின் ப்ளஸ்.