சினிமா
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

பழைய கற்கால பனியுகக் காலத்தில் இருக்கும் பாலூட்டிகளின் வாழ்க்கையை காமெடியாய்ச் சொல்லும் கதைகள்தான் ஐஸ் ஏஜ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Death on the Nile - Movie

தேனிலவுக்குச் சென்ற இணையர்களில், மணப்பெண் மர்மமான முறையில் கொல்லப்பட, யார் அந்தக் கொலையைச் செய்தது என்னும் பரபர த்ரில்லர்தான் ஹாட்ஸ்டாரில் இருக்கும் Death on the Nile திரைப்படம். அகதா கிறிஸ்டியின் நாவலை மையமாகக் கொண்டு 2017-ல் Murder on the Orient Express எடுத்த அதே குழு, ஹெர்கூல் பொய்ரோ கதாபாத்திரத்தை வைத்து அதன் அடுத்த பாகத்தை எடுத்திருக்கிறது. நிம்மதியாக நாள்களைக் கழிக்கலாம் என நைலுக்கு செல்பவருக்கு, லின்னி தன் உயிருக்கு ஆபத்தென அவரைப் பாதுகாக்கச் சொல்கிறார். அதை மீறியும் அவர் கொல்லப்படுகிறார். சந்தேகக்கூண்டில் வழக்கம் போல, கதையில் இருக்கும் எல்லா மாந்தர்களும் நிறுத்தப்படுகிறார்கள். யார் அந்தக் கொலையாளி என்பதை முடிந்த அளவு சுவாரஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், நடிகர்களின் விண்டேஜ் லுக்கும், கென்னத் பிராநாவின் நடிப்பும் இந்தப் படத்தை ரசிக்க வைத்துவிடுகின்றன.

OTT கார்னர்
OTT கார்னர்

Ice Age: Scrat Tales - Movie

பழைய கற்கால பனியுகக் காலத்தில் இருக்கும் பாலூட்டிகளின் வாழ்க்கையை காமெடியாய்ச் சொல்லும் கதைகள்தான் ஐஸ் ஏஜ். 20 வருடங்களாக வரும் இத்தகைய படங்களின் வரிசையில் தற்போது ஹாட்ஸ்டாரில் Ice Age: Scrat Tales என்னும் பெயரில் ஆறு குறும்படங்களை வெளியிட்டிருக்கிறது வால்ட் டிஸ்னி. ஸ்க்ரேட் என்னும் அணிலின் கண்ணுக்கு மிகப்பெரிய பொக்கிஷமான அகார்ன் தட்டுப்படுகிறது. ஆனால், அதை குட்டி ஸ்க்ரேட் வைத்திருக்கிறது. அதனிடமிருந்து அந்த அகார்னை சாமர்த்தியமாகப் பிடுங்குவதுதான் இந்தக் குறும்படங்களின் குட்டிக் கதைகள். எல்லாமே மூன்று நிமிடங்கள்தான். டி.வி-யை ஆன் செய்துவிட்டு, சோஃபாவில் கேஷுவலாக உட்காருவதற்குள் ஒரு எபிசோடு முடிந்துவிடும் என்பதால் சட்டெனப் பார்த்துவிடவும். சிறிதாக இருந்தாலும் ஒவ்வொன்றும் காமெடியில் அட்டகாசமாக இருக்கிறது. ஐஸ் ஏஜ் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத சீரிஸ் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Dasvi - Movie

ஹரித் பிரதேஷ் என்ற கற்பனை மாநிலத்தின் முதலமைச்சர் கங்கா ராம் சௌத்ரி ஒரு ஊழல் வழக்கில் மாட்டிக்கொள்ள, நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார். அவரின் மனைவி இடைக்கால முதல்வராகப் பதவியேற்கிறார். ஜெயிலில் புதிய கண்காணிப்பாளராக வேலைக்கு வரும் ஜோதி தேஸ்வால், சௌத்ரி அனுபவிக்கும் சலுகைகளை ரத்து செய்வதோடு, அவர் 10ம் வகுப்பைக்கூட முடிக்காதது குறித்து அவமானப்படுத்துகிறார். வெளியே சௌத்ரியின் மனைவியும் நிரந்தர முதல்வராவதற்குக் காய் நகர்த்துகிறார். அத்தனை சவால்களையும் சௌத்ரி எப்படி முறியடிக்கிறார், கல்வியின் அவசியத்தை அவர் உணர்ந்தாரா என்பதே கதை. ‘லாஜிக்கைப் பார்க்காதீங்க, என்டர்டெயின்மென்ட்டைப் பாருங்க’ என்ற மோடில் சௌத்ரியாக அலப்பறை செய்கிறார் அபிஷேக் பச்சன். சமீபமாக இவரின் ஸ்க்ரிப்ட் தேர்வுகள் சுவாரஸ்யமாக இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஜோதியாக யாமி கௌதமிற்கும் வெயிட்டான ரோல். காமெடி டிராமாவாகக் களைகட்டும் படம், அபிஷேக் சிறையிலிருந்து வெளியே வந்ததும் சற்றே தடம் மாறிய ஃபீல். ஜாலி கேலி டிராமா, சீரியஸ் மெசேஜ் படம் என இரு குதிரைச் சவாரி சரியாகப் பொருந்திப் போகவில்லை. நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Choose or Die - Movie

வித்தியாசமான வீடியோ கேம் படங்களை நாம் பார்த்திருப்போம். நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Choose or Die ஒரு வித்தியாசமான interactive வீடியோ கேம் ஹாரர் திரைப்படம். படத்தில் பின்னணி இரைச்சலும் (ஆம், இசை அல்ல) வன்முறையும் சற்று அதிகம் என்பதால் எல்லோருக்கும் உகந்தது அல்ல. வயதான ஒரு நபருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒன்று மனைவியின் காதுகள் அல்லது மகனின் நாக்கு. இவற்றில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் மரணம். இந்தக் கொடூரமான விளையாட்டு வேறொரு சமயத்தில் இளைஞர்கள் ஐஸாக், கய்லாவுக்குக் கிடைக்கிறது. கய்லாவின் அம்மாவைக் காப்பாற்ற இந்த விளையாட்டை ஆடிப் பார்க்கலாம் எனத் துணிந்து இறங்குகிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ‘செக்ஸ் எஜுகேஷன்’ புகழ் அஸா பட்டர்ஃபீல்டு நடித்திருக்கிறார் என்பதுதான் படத்துக்கான ஆர்வத்தை எல்லோரிடமும் தூண்டியது. ஆனால், முதன்மைக் கதாபாத்திரம் என்னவோ கய்லாவாக வரும் ஐயோலா ஈவன்ஸுக்குத்தான். க்ளைமாக்ஸ் அளவுக்கு எல்லாக் காட்சிகளையுமே சுவாரஸ்யமாக யோசித்திருந்தால் வன்முறையைக் கடந்தும் ஈர்த்திருக்கும்.