சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

Our Great National Parks
பிரீமியம் ஸ்டோரி
News
Our Great National Parks

ஒரு குற்றம் நடக்க, அதன் வேர், அது விரிக்கும் கிளைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஃபேமிலி த்ரில்லர் ‘குற்றம் குற்றமே

OTT கார்னர்
OTT கார்னர்

POLAR BEAR - (Documentary)

தனிமை விரும்பிகளான பனிக்கரடிகளின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சொல்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Polar Bear. வட துருவத்தில் மட்டுமே காணக்கூடிய விலங்குகளில் பனிக்கரடி முதன்மையானது. தன் தாயுடனும் சகோதரருடனும் வளரும் ஒரு பெண் பனிக்கரடி, எப்படி அந்தச் சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு சில ஆண்டுகளில் தனக்கான குடும்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் இந்த டாக்குமென்டரியின் கதை. African Cats, Chimpanzee, Penguins போன்ற பல டாக்குமென்டரிகளை இணைந்து இயக்கிய ஃபோதர்கில்லும், வில்சனும் Polar Bear-ஐ இயக்கியிருக்கிறார்கள். டாக்குமென்டரியின் மிகப்பெரிய பலம், ஹாரி கிரெக்சன் வில்லியம்ஸின் பின்னணி இசை. நாம் ஏற்படுத்தும் அத்தனை சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும், முதலில் பாதிப்புக்குள்ளாவது துருவங்கள்தான். பனிக்கரடிகளின் உலகம் மாறிக்கொண்டே வருகிறது. இனி அவற்றுக்கான தட்பவெப்ப நிலையுடன், தகுந்த உணவுகளுடன் ஒரு உலகம் இருக்குமா என்கிற கேள்வியுடன் முடிகிறது Polar Bear. பனிக்காடுகளை நேசிப்பவர்கள் பார்க்கவேண்டிய டாக்குமென்டரி இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Our Great National Parks - (Docuseries)

இயற்கையைப் பற்றி, சுற்றுச்சூழலைப் பற்றி ஏராளமான டாக்குசீரிஸ்கள் வந்துவிட்டன. அப்படியிருக்கையில் இதிலென்ன ஸ்பெஷல்? முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாதான். அவர் தொகுத்து வழங்க, பூமியிலிருக்கும் முக்கியமான தேசியப் பூங்காக்களைப் பற்றியும், இயற்கை சமநிலை தவறிடாமலிருக்க அவற்றின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் பேசுகிறது இந்தத் தொடர். சீரியஸான விஷயம் என்பதாலோ என்னவோ தன் வழக்கமான ஜாலி தொனியை விடுத்து சீரியஸாகவே உரையாடுகிறார் ஒபாமா. குளோபல் வார்மிங், நகரமயமாக்கல், எப்படி இனி இயற்கை வாழிடங்களோடு இயைந்து செயல்படலாம் என ஏராளமான தலைப்புகளைத் தொட்டுச் செல்கிறார்கள். ஏற்கெனவே பார்த்துப் பழகிய சில காட்சிகள் இருந்தாலும் கொஞ்சம் புதிய விஷயங்கள், அதையும் ஒபாமாவின் குரலில் கேட்பது, அசத்தலான ஒளிப்பதிவு போன்றவை இந்தத் தொடரை ரசிக்க வைக்கின்றன. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏதாவது தகவல் சொல்லும் நெட்ப்ளிக்ஸ் தொடர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

குற்றம் குற்றமே - (Movie)

ஒரு குற்றம் நடக்க, அதன் வேர், அது விரிக்கும் கிளைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஃபேமிலி த்ரில்லர் ‘குற்றம் குற்றமே.’ சுசீந்திரன் இயக்கிய இந்தத் திரைப்படம் நேரடியாகக் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகி சிலநாள்களிலேயே அமேசான் பிரைமுக்கு வந்துவிட்டது. ஜெய் மனைவி திவ்யா துரைசாமி தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் அது ஜெய்யும் அவர் அக்கா மகள் ஸ்மிருதி வெங்கட்டும் சேர்ந்து செய்த கொலை என்று சந்தேகப்படுகிறார் உறவினரும் காவல்துறை அதிகாரியுமான ஹரிஷ் உத்தமன். இதுகுறித்து களத்துக்கே நேரடியாக வந்து விசாரணை செய்கிறார் காவல்துறை உயரதிகாரியான, இயக்குநர் பாரதிராஜா. மிக நிதானமாக நகரும் படம் இறுதியில் சில மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. இருப்பதில் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு ஓகே. திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், பாரதிராஜாவுடன் ஒப்பிடும்போது ‘கொஞ்சம் நடித்தால்கூட குற்றமே’ என்று ஒரேமாதிரியான உணர்ச்சியுடன் படம் முழுக்க வருகிறார் ஜெய். ஆச்சர்யமாக மதுரை முத்துவுக்கு எதிர்பாராத வேடம். வேகமில்லாத கதையோட்டம், ஒரே இடத்தைச் சுற்றும் திரைக்கதை போன்ற பலவீனங்கள் இருந்தாலும் ‘ஒருமுறை பார்க்கலாம்’ படம்தான்.

OTT கார்னர்
OTT கார்னர்

Anatomy of a Scandal - (series)

பிரிட்டிஷ் எம்.பி ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் மீ டூ சம்பவம் தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் அனாட்டமி ஆஃப் ஏ ஸ்கேண்டல் தொடரின் கருப்பொருள். பிரதமரின் நெருங்கிய நண்பரும் எம்.பி-யுமான ஜேம்ஸ் ஒயிட்ஹௌவ்ஸ் தன் திருமணத்தைத் தாண்டி, இளைய பணியாள் ஒருவரிடம் உறவு வைத்திருக்க, அது மீடியாவின் பேசுபொருளாகிறது. இந்தத் தீயை ஆரம்பித்திலேயே ஜேம்ஸ் அணைக்க முயன்று, மனைவியிடம் எல்லாவற்றையும் தெரிவிக்கிறார். ஆனால், ஜேம்ஸ், அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவு கொண்டார் என வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல், ஓர் ஆண் தன் அதிகாரத்தினால் அத்துமீறுவதன் எல்லை என்பது என்ன என்னும் கேள்வியையும் முன்வைக்கிறது தொடர். மிகவும் முக்கியமான பேசுபொருளைக் கொண்ட தொடர், ஆனால் செயற்கையான வசனங்களாலும், காட்சி அமைப்புகளாலும் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது.