பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படப்பிடிப்பு கோலார் தங்கவயல் பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தச் சமயத்தில் இரஞ்சித்திடமிருந்து அந்தப் படத்தின் அப்டேட் வெளிவரும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 'சார்பட்டா 2' அறிவிப்பு வந்திருக்கிறது.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்து வருகிறது. தினேஷ், கலையரசன் நடிப்பில் 'தண்டகாரண்யம்', தினேஷ், மாறன் நடிப்பில் 'ஜே.பேபி', குருசோமசுந்தரம் நடிப்பில் 'பாட்டில் ராதா', அசோக்செல்வன், சாந்தனு நடிப்பில் 'ப்ளூ ஸ்டார்', இவை தவிர 'தங்கலான்' படத்தையும் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில்தான் 'சார்பட்டா 2' அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி நடித்து வரும் 'தங்கலான்' படப்பிடிப்பு இம்மாத இறுதியுடன் நிறைவுபெறுகிறது. இதன் பின் பா.இரஞ்சித், கமல்ஹாசன் பட வேலைகளில் இறங்குவார் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கமல் அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளதால், இந்த இடைவெளியில் மற்றொரு படத்தை இயக்கிவிட நினைத்திருக்கிறார் பா.இரஞ்சித்.
வடசென்னையின் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட 'சார்பட்டா பரம்பரை' அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததுடன், மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. அதன் நாயகனான ஆர்யாவின் நடிப்பும் பேசப்பட்டது.

இந்நிலையில்தான் 'சார்பட்டா 2'க்கான எண்ணத்தை ஆர்யாவிடம் பகிர்ந்தார் ரஞ்சித். மகிழ்ச்சியான ஆர்யா, உடனே நடிக்கச் சம்மதித்து விட்டார்.
ஆர்யா இப்போது 'விருமன்' முத்தையா இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொக்டக்ஷன் வேலைகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் 'பையா 2' படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பிறகே 'சார்பட்டா 2'க்குள் வரவிருக்கிறார்.

'சார்பட்டா ரவுண்டு 2' அதே ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை அடைமொழியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா தவிர இதர நடிகர் - நடிகைகள் யாரும் இன்னமும் கமிட் செய்யப்படவில்லை. ஆனால், முதல் பாகத்தில் நடித்த பசுபதி, ஜான்விஜய், ஷபீர், சந்தோஷுடன் புதுமுகங்கள் பலரும் நடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். முதல் பாகம் பிரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.