முதலில் பரபரப்பாக `கபாலி' படத்தை இயக்கினார், பா.இரஞ்சித். அடுத்து அவரே எதிர்பார்க்காதபோது `காலா' படத்தை டைரக்ஷன் செய்யும் வாய்ப்பை ரஜினி கொடுத்தபோது, ரஜினி ரசிகர்கள் இரஞ்சித்தை அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்டனர். இடையில் ' பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

இந்தப் படத்துக்காக உலக நாடுகள் முழுக்கச் சென்று விருதுகளை அள்ளிக் குவித்தார். வடநாடு சென்று பிரமாண்டமாக ஒரு இந்தி படத்தை இயக்கப்போகிறார் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கதை, திரைக்கதை ஸ்கிரிப்ட் விவாதம் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருப்பதாகப் பேசிக்கொண்டனர். இப்போது 3 ஹீரோக்கள் நடிக்கும் நேரடி தமிழ்ப்படத்தை ரஞ்சித் இயக்கப் போகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
ஏற்கெனவே 'மெட்ராஸ்', `கபாலி' படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் `போஸ்டர்' நந்து. ஜெய், அஞ்சலி நடித்து வெளிவந்த `பலூன்' படத்தைத் தயாரித்த நந்து, அடுத்து பா.இரஞ்சித் இயக்கப் போகிற மல்டி ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகிறார்.
முதலில் ஆர்யா, சத்யராஜை ஒப்பந்தம் செய்துவிட்ட ரஞ்சித் அடுத்ததாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 'பாகுபலி' புகழ் ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். விரைவில் தொடக்கவிழா நடத்தி டைட்டிலை அறிவித்துவிட்டுப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகிறார், பா.இரஞ்சித்.

ராஜராஜ சோழன், சமூகநீதி போன்றவற்றை பரபரப்பாகப் பேசிவரும் பா.இரஞ்சித் இயக்கும் அடுத்த படம் என்ன மாதிரி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.