சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“மனைவியை இப்போ காதலிக்கிறேன்!”

மனைவியுடன் கோபி
பிரீமியம் ஸ்டோரி
News
மனைவியுடன் கோபி

சீமான் அண்ணனைத்தான் மிமிக்ரி பண்ணினேன். அவர் பேச்சை ஒன்பதாம் வகுப்பிலிருந்து கேட்டுக்கிட்டிருக்கேன். அரசியல் தலைவர்கள் பேச்சு என்றால் தனி ஸ்டைல் இருக்கும்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

நகைச்சுவை நையாண்டியுடன் அரசியல் பிரபலங்களைப் போல் மிமிக்ரி செய்தே பிரபலம் ஆனவர் `பரிதாபங்கள்' கோபி. குரல் மட்டுமல்ல, எந்த அரசியல்வாதியைப் போல் மிமிக்ரி செய்கிறாரோ அவர்களது உடல்மொழி, உருவம் என அப்படியே பிரதிபலிக்கும் இவரின் அரசியல் நையாண்டிகளுக்கு யூடியூபில் செம வரவேற்பு. சமீபத்தில் இவருக்குத் திருமணமானது. விகடன் தீபாவளி மலருக்காக அவரிடம் பேசினேன்.

``எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை. அப்பா பிள்ளப்பன், நூற்பாலையில் மேஸ்திரியா இருந்தார். அம்மா வாசுகி. ஒரே தங்கை. அவங்களுக்கும் மேரேஜ் ஆகிடுச்சி. ப்ளஸ் டூ வரை சிவகங்கையில் அரசுப்பள்ளியிலும், பொறியியல் படிப்பை திருச்சி ஜேஜே இன்ஜினீயரிங் காலேஜிலும் படித்தேன். அங்குள்ள ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி மூலம் சுதாகரின் நட்பு கிடைத்தது. அப்போதே, ஒன்றாக கல்ச்சுரல்ஸில் கலந்துகொள்வோம். அப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு யூடியூப், சினிமா எனத் தொடர்ந்துகொண்டிருக்கிறது'' என்றபடி பேச ஆரம்பித்தார்.

“மனைவியை இப்போ காதலிக்கிறேன்!”

``உங்கள் தனித்துவமே அரசியல் சட்டையர்தான். எதிர்ப்புகளால் நிறுத்திவிட்டது குரல்வளையை நெரிப்பதுபோல் இல்லையா?''

``நாங்க ஜாலிக்காக ஆரம்பிச்சாலும் கண்கொத்திப் பாம்பா அரசியல் நிகழ்வுகளைக் கவனிப்போம். ஆனால், இதைக் காமெடியா எடுத்துக்காம சீரியஸா பண்றோம்னு நினைச்சி நிறைய பேர் விமர்சிக்கிறாங்க. இன்னும் சொல்லப்போனா, தேர்தலில் இவங்களுக்குத்தான் ஓட்டு போடவேண்டும் என்று நாங்க சொல்ல நினைக்கிற அளவுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப ஓவரா போகுதேன்னுதான் விட்டுட்டோம். அதனால, இது குரல்வளை நெரிப்பெல்லாம் கிடையாது. எங்களோட முடிவுதான்.''

``முதன்முதலாக நீங்க மிமிக்ரி பண்ணுன அரசியல் தலைவர் யார்?''

``சீமான் அண்ணனைத்தான் மிமிக்ரி பண்ணினேன். அவர் பேச்சை ஒன்பதாம் வகுப்பிலிருந்து கேட்டுக்கிட்டிருக்கேன். அரசியல் தலைவர்கள் பேச்சு என்றால் தனி ஸ்டைல் இருக்கும். ஆனால், சீமான் அண்ணனுக்கு அப்படிக் கிடையாது. ரொம்ப எளிமையாக இருக்கும். ஈஸியாகப் பண்ணலாம் என்பதால் சீமான் அண்ணன் போலப் பேசினேன். நாம் தமிழர் கட்சியினர் `அண்ணன் உங்க நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பாரு'ன்னு சொல்லியிருக்காங்க.''

``அடுத்த படங்கள்?''

``இன்னும் வெளியில் சொல்லும் அளவிற்குப் படங்கள் பண்ணல. சுதாகர்கூட `உறியடி 2' பண்ணினான். சமூகக் கருத்துள்ள அந்த மாதிரி படம் பண்ணணும். எல்லோரும் சிரிச்சிட்டு வெளில வர்ற மாதிரியாவது காமெடி படம் பண்ணிடணும். அதுதான் இப்போதைக்கு என்னோட விருப்பம். இப்போ, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்துல நடிச்சிருக்கேன். அது சீக்கிரம் ரிலீஸ் ஆகிடும். இன்னொன்னு நாங்களே பண்ற படம். அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகிடும்.''

“மனைவியை இப்போ காதலிக்கிறேன்!”

``உங்க வாழ்க்கையில் நடந்த பரிதாப நிலை?’’

``ஒண்ணு லவ் செட்டாகணும். இல்லைன்னா அரேஞ்ச் மேரேஜ் செட்டாகணும். நான் ரெண்டுமே செட்டாகாமல் இருந்தேன். வீட்டுல பொண்ணு பார்க்கச் சொன்னா, மீடியாவுல இருக்கவுங்களுக்குக் கொடுக்கமாட்டோம்னு சொல்றாங்க. சரி... லவ் பண்ணலாம்னு போனா, `மீடியாக்காரங்க பல பேரை லவ் பண்ணிருப்பாங்க'ன்னு சொல்லிடுறாங்க. வாழ்க்கையில் லவ்வே இல்லைங்கிறதுதான், என்னோட பரிதாப நிலை. எல்லா 90ஸ் கிட்களோட பரிதாப நிலையும் இதுதானே!

ஒருவழியா, இப்போதான் திருமணம் முடிஞ்சது. மனைவி யமுனா நியூட்ரிஷியனிஸ்ட்டா இருக்காங்க. ரொம்ப அன்பானவங்க. நானாவது கோபப்படுவேன். ஆனா, அவங்க ரொம்ப பொறுமைசாலி. எனக்கு லவ் செட் ஆகலைன்னாலும், மனைவியை இப்போ காதலிக்கிறேன். பொண்ணு பார்த்தபிறகு மூணு மாசம் கேப் கிடைச்சது. அந்த இடைவெளியே ரெண்டு பேருக்கும் நல்ல புரிதலைக் கொடுத்துச்சு. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். இதுவும் ஒருமாதிரி நல்லாதான் இருக்கு.''

``தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?"

``டிரஸ்தான் நினைவுக்கு வரும். இப்போல்லாம் இந்த 2 கே கிட்ஸுக்கு தீபாவளின்னு இல்லை, எல்லாத்துக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்துடுறாங்க. ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை. தீபாவளிக்குத்தான் டிரஸ் கிடைக்கும். என்னோட பிறந்தநாள் நவம்பர் 19. தீபாவளியை ஒட்டியே வர்றதால ரெண்டு செட் டிரஸ் கிடைக்கும். அதனால, சின்ன வயசுல தீபாவளி எப்போ வரும்னு இருப்பேன்.''

``தலை தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?’’

``மனைவி ஊரான நிலக்கோட்டையில்தான் தீபாவளி கொண்டாடுறோம், கொடைக்கானல் அங்கிருந்து ரொம்பப் பக்கம். அதனால, அப்படியே கொடைக்கானலை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்துடலாம்னு இருக்கோம். கொடைக்கானல் போறதுதான் தலைதீபாவளியோட ஸ்பெஷல்.''