சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“சிவகாசியில தீபாவளி கொண்டாடப் போறேன்!”

மனைவியுடன் சுதாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
மனைவியுடன் சுதாகர்

சென்னைக்கு 130 ரூபாய் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்பா, அம்மா வருமானத்துலதான் வாழ்ந்துட்டிருந்தேன். முன்பைவிட இப்போது நல்லா இருக்கேன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

யூடியூப் சேனல் மூலம் அரசியல், சமூகப் பிரச்னைகளை நையாண்டியுடன் கூறி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டிருப்பவர் `பரிதாபங்கள்’ சுதாகர். தமிழ் சினிமாவில் நடிகராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் சுதாகருக்கு தற்போதுதான் திருமணம் ஆனது. தலைதீபாவளி கொண்டாடப்போகும் புதுமாப்பிள்ளை சுதாகரிடம் பேசினேன்…

``பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டிதான் என்னோட சொந்த ஊர். அப்பா ஜெயராமன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அம்மா செல்வமணி. ஒரே அண்ணன் ராகவன். நான் பொறியாளர் ஆகணும்ங்குற கனவுல அப்பா என்னை புரொடக்‌ஷன் இன்ஜினீயரிங் படிக்கவெச்சாரு. நான், ரொம்ப சுமாராகப் படிக்கும் மாணவன். இன்ஜினீயரிங்ல பிரகாசமான எதிர்காலம் இல்லைங்குறது எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. மணிவண்ணன் சாரோட பொலிட்டிகல் சட்டையர்தனம், வடிவேலு சாரின் வெடிக்க வைக்குற சிரிப்புக்கு நான் ரசிகன். இவங்க ரெண்டு பேரோட காமெடியைத்தான் அதிகமா ரசிச்சுப் பார்த்துக்கிட்டே இருப்பேன். வடிவேலு சார் உடல்மொழியாலயே சிரிக்கவைப்பாரு. அவரைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அதேமாதிரி காமெடி வந்துடுச்சு'' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சுதாகர்.

“சிவகாசியில தீபாவளி கொண்டாடப் போறேன்!”

``அரசியல் நையாண்டி செய்து வீடியோக்கள் வெளியிடும்போது மிரட்டல்கள் வந்திருக்கிறதா?''

``வந்திருக்காவா... நெறைய வந்துக்கிட்டே இருக்கு. அதனால நம்மைச் சுத்தியிருக்கிறவங்க வாழ்க்கையும் பாதிக்கப்படும்னு அரசியல் நையாண்டியையே விட்டுட்டோம். சிலர் ரசிக்கிறாங்க. சிலர் கண்டிக்கிறாங்க. அரசியல் கட்சிகளின் தலைவர்கள்கூட நகைச்சுவையாய் எடுத்துக்கிட்டுக் கடந்து போயிடுறாங்க. ஆனா, அவர்களின் தொண்டர்கள்தான் சென்சிட்டிவ் ஆகிடுறாங்க. ஒரு தரப்பை நையாண்டி செஞ்சா, எதிர்த் தரப்பு அந்த வீடியோவைப் பரப்புது. எதிர்த்தரப்பைக் கிண்டலடிச்சா இந்தத் தரப்பு வீடியோவை ஷேர் பண்ணுது. இப்படி, மாறி மாறி ஷேர் பண்ணிக்குவாங்க. இவங்க ரெண்டு தரப்போட சண்டைகளால் நாங்க நடுவுல பந்தாடப்படுறோம். அதனாலதான், வேணாம்னு விட்டுட்டோம். அதேநேரம், தமிழச்சி தங்கபாண்டியன், அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலின் எல்லாம் நாங்க பண்ணின அரசியல் நையாண்டி வீடியோக்களை ரசிச்சதா சொன்னாங்க. அதை எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமா எடுத்துக்கிறோம்.''

``யூடியூப் நடத்துவதால் சவால்கள் என்ன? புதிதாக வரக்கூடியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?''

``இயல்பிலேயே காமெடி சென்ஸ் இருக்கிறதால எங்களுக்கு ஷோ பண்றதுல எந்த சவாலும் இல்லை. நடக்கும் நிகழ்வுகளைக் கவனிப்போம். அதுல, கொஞ்சம் கற்பனைகளை மிக்ஸ் பண்ணிப்போம். அதுவே, சுவாரஸ்யமாகிவிடும். இப்போ, ஏகப்பட்ட பேர் யூடியூப் சேனல் தொடங்கியிருக்காங்க. தனித்துவமா செய்தால்தான் பார்வையாளர்களை இம்ப்ரஸ் செய்யமுடியும். பொறுமை ரொம்ப முக்கியம். நாம போடுற வீடியோக்கள் சரியா போகலைன்னா, இதைப் பண்ணுங்க, அதைப் பண்ணுங்கன்னு டைவர்ட் பண்ணுவாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது. நாம எந்த நோக்கத்தோடு வந்தோம். நமக்கு என்ன தெரியும், அதுல பெட்டரா என்ன செய்யமுடியும்னுதான் கவனம் செலுத்தணும். 100 வீடியோக்களுக்குப் பிறகுகூட ஹிட் ஆகலாம். அதுவரைக்கும் பொறுமை வேணும்.''

“சிவகாசியில தீபாவளி கொண்டாடப் போறேன்!”

``படம் எடுத்தீங்களே, என்னாச்சு?''

``காமெடி ப்ளஸ் ஃபேமிலி டிராமாவா உருவாகிக்கிட்டிருக்கு. அடுத்த வருடம் படம் ரிலீஸ் ஆகிடும்.''

``உங்க திறமை மூலமா பொருளாதார ரீதியா முன்னேற்றம் அடைஞ்சிட்டதா நினைக்கிறீங்களா?''

``சென்னைக்கு 130 ரூபாய் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்பா, அம்மா வருமானத்துலதான் வாழ்ந்துட்டிருந்தேன். முன்பைவிட இப்போது நல்லா இருக்கேன். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, அம்மாவுக்கு வருடா வருடம் ஏதாவது வாங்கிக்கொடுத்துடுவேன். அவங்க ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டதால தங்கச்செயின் வாங்கிக்கொடுத்தேன். உடம்புக்கு முடியாததால பஸ்ல போக முடியல. அதனால, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கார் வாங்கிக் கொடுத்திருக்கேன்.''

``கோபிக்கும் உங்களுக்குமான நட்பு... சினிமாவுலகூட ரெண்டு பேரும் சேர்ந்தே நடிக்கிறீங்களே, சென்டிமென்ட்டா?''

``கோபி ரொம்ப நேர்மையானவன். எதுவா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா வெளிப்படையா சொல்லிடுவான். திருமணத்துக்கு முன்னாடி நானும் அவனும் ஒண்ணா தங்கியிருந்தோம். இப்போ, ஒரே அப்பார்ட்மென்ட்ல இருக்கோம். கல்யாணம் ஆகிட்டா ஃப்ரெண்ட்ஸ்கூட நேரம் செலவழிக்க முடியாதுன்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு அப்படிக் கிடையாது. அவன் ஃபர்ஸ்ட் ஃப்ளோர். நான் ஆறாவது ஃப்ளோர். ஏதாவது, டக்குன்னு பேசிக்கணும்னாலும் உடனே பார்த்துக்குவோம். அதனால, நான் மிஸ் பண்ணல.

அதேபோல, நாங்கள் `ஜாம்பி’ மாதிரி தனியாவும் படங்கள் பண்ணியிருக்கோம். இப்ப ஒண்ணா நடிக்கிற வாய்ப்பு வந்தாதான் ஏத்துக்கிறோம். தனியா வர்ற வாய்ப்புகளைத் தவிர்த்துடுறோம். எல்லோரும் `நல்லா பண்றீங்க. ரெண்டு பேரும் பிரியாம இப்படியே இருங்க'ன்னு சொல்றதும் ஒரு காரணம்.''

``காதல் திருமணம் பண்ணியிருக்கீங்க. உங்கள் காதல் கதை பற்றிச் சொல்லுங்க?''

``என் மனைவி லட்சுமி குமாரியை நண்பர் மூலமாகத்தான் தெரியும். அவங்க, ஆர்க்கிடெக்ட். எனக்கு வரையுறதுல ஆர்வம் அதிகம். எந்த வீட்டைப் பார்த்தாலும் அப்படியே வரைஞ்சுடுவேன். மனைவிக்கும் எனக்கும் வரையுறது பற்றிப் பேசியே நட்பு வந்துடுச்சு. உடனே, மேரேஜ் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டேன். எங்க அப்பா ஒத்துக்கிட்டா பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுக்குள்ள, என்னைத் தகுதிப்படுத்திக்கிட்டு வந்தேன். ஒரு கட்டத்துல அவங்க அப்பாவும் ஒத்துக்கிட்டார்.''

``தலைதீபாவளியை எப்படிக் கொண்டாடப் போறீங்க?''

``சிவகாசிதான் என் மனைவியோட சொந்த ஊரு. முன்கூட்டியே பட்டாசெல்லாம் வாங்கி வெச்சிடுறேன் மாப்ளன்னு சொல்லிட்டாரு மாமனார். அதனால, கறி விருந்தோட பட்டாசு வெடிச்சு சிவகாசியில கொண்டாடப்போறேன். இதுக்கு முன்னாடி தீபாவளிகளின்போது போன்லதான் பேசிக்கிட்டிருப்போம். இந்தத் தடவை, மனைவிகூட தீபாவளி. அதனால, இந்த வருட தீபாவளி ரொம்ப ஸ்பெஷல்.''