சினிமா
தொடர்கள்
Published:Updated:

பரோல் - சினிமா விமர்சனம்

பரோல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பரோல் - சினிமா விமர்சனம்

அண்ணன் கரிகாலனாக லிங்கா, தம்பி கோவலனாக ஆர்.எஸ்.கார்த்திக் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நம் மனதில் பதிகிறார்கள்

சிறுவயதிலிருந்தே முட்டி மோதிக் கொள்ளும் அண்ணன் தம்பி இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் ‘பரோல்.'

அண்ணன் கரிகாலன் சிறுவயதிலேயே குற்றவாளியாகச் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று, அங்கேயும் மூன்று கொலைகள் செய்கிறான். அங்கிருந்து வருபவன், சூழ்நிலைகளால் கூலிப்படைக் கொலைகாரனாக மாறுகிறான். இருந்தும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் கரிகாலனைப் பார்த்து தம்பி கோவலன் பொறாமைப்படுகிறான். ஒரு கட்டத்தில் அம்மா இறந்துவிட, இறுதிச்சடங்குகள் செய்ய, விருப்பமே இல்லாமல் அண்ணனை பரோலில் எடுக்க முயல்கிறான் கோவலன். அதில் அவன் வெற்றி பெற்றானா, அண்ணனும் தம்பியும் அன்பால் இணைந்தார்களா என்பதை வித்தியாசமான கதைசொல்லலில் முன்வைத்திருக்கிறது படம்.

பரோல் - சினிமா விமர்சனம்

அண்ணன் கரிகாலனாக லிங்கா, தம்பி கோவலனாக ஆர்.எஸ்.கார்த்திக் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நம் மனதில் பதிகிறார்கள். சிறுவயதில் சந்திக்கும் பிரச்னை, அம்மாவின் பாசம், காதலும் அது தரும் துயரமும் என கரிகாலனின் பாத்திரப் பயணத்தை அறிந்து, சிறப்பாக அதைக் கையாண்டிருக்கிறார் லிங்கா. கோவலனாக ஆர்.எஸ்.கார்த்திக், அம்மா தனக்காகச் செய்து வைத்த கடைசி சாப்பாட்டைச் சாப்பிடும் காட்சியில் கலங்கடிக்கிறார். வழக்கறிஞராக வரும் வினோதினி வைத்தியநாதன், இவருடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றத்தில் நிகழ்த்தும் டிராமா, சுவாரஸ்ய கலாட்டா. கல்பிகா, மோனிஷா என இரு நாயகிகளின் பாத்திரங்களும் கதையினூடே பின்னிப் பிணைந்திருப்பது ஆரோக்கியம். பாசமிகு அம்மாவாக ஜானகி சுரேஷ், ராவாக மது அருந்துவது, இளைய மகனுடன் சண்டை போட்டுவிட்டு மூத்த மகனுக்காகக் கருணை மனு கொடுக்கச் செல்வது என முதிர்ச்சியான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வழக்கமான அண்ணன் - தம்பி ஈகோ சண்டைதான் ஒன்லைன். ஆனால், அத்தியாயங்களாகப் பிரித்துக் கதை சொல்வது, பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக், இருவேறு கதாபாத்திரங்களின் பார்வையில் ஒரே சம்பவத்தைச் சொல்வது எனத் திரைக்கதைக்கு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் துவாரக் ராஜா. வசனங்களும் அதற்குப் பக்கபலம். ராஜ்குமார் அமலின் பின்னணி இசை, பரபரக் காட்சிகளுக்கு டென்ஷன் கூட்டுகிறது. மகேஷ் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு வடசென்னையின் இயல்பை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. முனீஸின் எடிட்டிங் சிக்கலான திரைக்கதையைப் புரியும்படி தொகுத்திருக்கிறது.

பரோல் - சினிமா விமர்சனம்

கதை அந்த இரு சகோதரர்களின் உலகம் தாண்டி, அதற்கான பின்னணியைப் பற்றியோ, அந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியின் வாழ்வியல், அரசியல் பற்றியோ பேசாதது நெருடல். வடசென்னை என்றாலே வன்முறைதான் என்ற தமிழ் சினிமா பிம்பத்தை இந்தப் படமுமே தூக்கிப்பிடிக்கிறது. ஏராளமான வன்முறைக் காட்சிகளும் கலாசார அதிர்ச்சியளிக்கும் சித்திரிப்புகளும் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன என்பதால் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் படம் பார்க்கும் எண்ணத்தைத் தவிர்க்கலாம்.

இருந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை வழியே ஒரு யதார்த்தமான கதையைச் சொல்லும் வகையில் கவனம் பெறுகிறது ‘பரோல்.'