Published:Updated:

பத்து தல - சினிமா விமர்சனம்

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ராவடி', ‘ஒசரட்டும் பத்து தல' பாடல்கள் ஹைவோல்டேஜ். ஆனால், பின்னணி இசையில் அவரின் முத்திரை மிஸ்ஸிங்.

தனக்கெனத் தனி சாம்ராஜ்யம் அமைத்து ஆண்டுகொண்டிருக்கும் ராவணனின் கோட்டைக்குள் காக்கிச் சட்டைக் கறுப்பு ஆடு ஒன்று நுழைந்தால் என்னவாகும் என்பதே இந்த ‘பத்து தல.'

தமிழக முதலமைச்சரான சந்தோஷ் பிரதாப் கடத்தப்பட்டுக் காணாமல்போகிறார். இது தொடர்பாக மணல் மாஃபியாவில் ஈடுபட்டுத் தனி சாம்ராஜ்யம் அமைத்திருக்கும் ஏ.ஜி.ஆர் எனப்படும் ஏ.ஜி.ராவணன்மீது சந்தேகம் வலுக்கிறது. உண்மையைக் கண்டறிய ஏ.ஜி.ஆரின் கோட்டைக்குள் அடியாளாக நுழைகிறார் காவல் அதிகாரி கௌதம் கார்த்திக். முதலமைச்சருக்கு என்னவானது என்பதை அவர் கண்டறிந்தாரா, ஏ.ஜி.ஆரின் உண்மையான நோக்கம் என்ன, இவையெல்லாம்தான் இந்தப் படம்.

கன்னட சினிமாவான ‘மஃப்டி'யைக் கொஞ்சம் மாற்றங்களுடன் தமிழில் இறக்கியிருக்கிறார் இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா. ஏ.ஜி.ஆராக சிலம்பரசன். இரண்டாம் பாதியில்தான் அவரின் பாத்திரமே கதைக்குள் வருகிறது என்றாலும் அதன்பிறகு இந்தப் ‘பத்து தல'யைத் தாங்கிப் பிடிக்கும் சிங்கிள் தல அவர்தான். கிட்டத்தட்ட கதையின் நாயகனாகவே கௌதம் கார்த்திக். ஸ்டன்ட் காட்சிகளில் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்திருப்பவர், கொஞ்சம் முகபாவங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தாசில்தாராக வரும் பிரியா பவானிசங்கரும் முதியோர் இல்ல நிர்வாகியாக மனுஷ்ய புத்திரனும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பத்து தல - சினிமா விமர்சனம்
பத்து தல - சினிமா விமர்சனம்

கௌதம் மேனன், கௌதம் மேனனாகவே திரையை ஆக்கிரமிக்கும் மற்றொரு படம் இது. பிரதான வில்லனான அவரின் நடிப்பில் எந்த மிரட்டலும் இல்லை. சிம்புவின் தங்கையாக வரும் அனு சித்தாரா, குழந்தை நட்சத்திரமாக வரும் ஹர்ஷிதா படத்தின் சென்டிமென்ட் பக்கங்களை நிரப்பியிருக்கின்றனர். எண்ணற்ற அடியாள் பாத்திரங்கள் இருந்தாலும் ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ராவடி', ‘ஒசரட்டும் பத்து தல' பாடல்கள் ஹைவோல்டேஜ். ஆனால், பின்னணி இசையில் அவரின் முத்திரை மிஸ்ஸிங். ஃபருக் ஜே.பாஷாவின் கேமரா மணல் குவாரிகளின் புழுதியையும், ஏ.ஜி.ஆர் கோட்டையின் பிரமாண்டத்தையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. நேர்க்கோட்டில் பயணிக்கும் கதையைத் தொய்வில்லாமல் தொகுத்திருக்கிறார் பிரவீன் கே.எல். கௌதம் கார்த்திக்கின் ஆரம்ப சண்டைக்காட்சி, தேர் சண்டைக் காட்சி, க்ளைமாக்ஸ் எனப் பல இடங்களில் மிரட்டியிருக்கிறது ஸ்டன்ட் டீம்.

முதல் பாதியில் கௌதம் கார்த்திக்கின் அண்டர்கவர் ஆபரேஷன் காட்சிகள் பார்த்துப் பழகிய கதைக்களம் என்றாலும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. இரண்டாம் பாதியிலும் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது திரைக்கதை. ஆனால், சிம்புவின் உண்மையான முகம் வெளிப்படும் இடத்தில் நம்பகத்தன்மையோ போதிய அழுத்தமோ இல்லை. சமூகப் பணிகள் செய்வதாலே குற்றங்களை நியாயப்படுத்த முடியுமா, மேஜிஸ்டிரேட்டிடம் செல்லவே ஆதாரங்கள் வேண்டுமா என்று லாஜிக் மீறல்களும் நிறையவே இருக்கின்றன.

யோசிக்காமல் பொழுதுபோக்கே பிரதானம் என்ற எண்ணத்தில் மட்டும் சென்றால், அதைக் கச்சிதமாக நிறைவேற்றுகிறது ‘பத்து தல.'