`இந்த உலகத்துக்கு துரோகம் செய்யும் சமூக ஊடகங்கள்!' - படம்பிடிக்கும் `பத்து தல' இயக்குநர்

சமூக வலைதளம் வேற, இந்த உலகம் வேறன்னு இல்ல. ‘இந்த உலகம் எப்படியிருக்கு?'ன்னு நீங்க கேட்கறதா நினைக்க வேண்டியிருக்கு.
சிலம்பரசனின் ‘பத்து தல' படத்துக்குக் கிடைத்த வரவேற்பினால், மகிழ்ந்து நெகிழ்கிறார் இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா.
உங்க படங்கள்ல நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு வர்றது உங்களுக்கு எளிதானதா இருக்கும்போல..?
‘‘எளிதுன்னு சொல்ல முடியாது. ஒரு சவாலா எடுத்துப் பண்ணுறேன்னுவேணா சொல்லலாம். ஸ்கிரிப்ட்ல நிறைய கேரக்டர்கள் இயல்பாகவே வந்திருக்கலாம். சிலது ஒரு சீன்ல மட்டும் வரும். அப்படி ஒரு சீன்ல வந்தாலும்கூட அந்த கேரக்டரும் ஸ்கோர் பண்ணணும்னு நினைப்பேன். யாரோ ஒருத்தரைத் திருப்தி பண்ணணும்னு நினைச்சு எழுதினால், நிச்சயம் அது ஒரு நல்ல கதையா வராது. இன்னொரு விஷயம், இப்ப உள்ள நடிகர்களும் ‘நாம ஒரு சீன்ல வந்தாலும் பேசப்படணும்'னு தெளிவா இருக்காங்க. ‘பத்து தல'-யில் கூட பதினைந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கு. நீங்க தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் கூட, அவங்க ஒவ்வொருத்தருமே நினைவில் நிற்பாங்க. அதைப்போல எந்த ஜானரைத் தொட்டாலும், அந்த ஜானர் சுவாரஸ்யமா இருக்க, அதுக்கான நேர்மையான உழைப்பை எப்பவுமே கொடுப்பேன்.''

‘பத்து தல'-யில் உங்க குரு, கௌதம் மேனனையும் நடிக்க வச்சிருக்கீங்க. இப்ப நடிகரா அவர் அசத்திட்டிருக்காரே?
‘‘அவர், ‘காக்க காக்க' சமயத்துலேயே சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிச்சிருப்பார். அவர் நல்ல நடிகர்னு அவரிடம் உதவியாளராக இருக்கும்போதே தெரியும். அவர் நல்லா நடிக்கலைன்னா தான் எனக்கு அது ஆச்சர்யமா இருந்திருக்கும். இன்னொரு விஷயம், அழகா பாடுவார்... அருமையான டான்ஸரும்கூட! இப்படி அவருக்குள் நிறைய பரிமாணங்கள் இருக்கு.''
சமூக வலைதளங்கள் பற்றிய உங்க பார்வை?
‘‘இதை ஒரு மிகப்பெரிய கேள்வியா பாக்குறேன். சமூக வலைதளம் வேற, இந்த உலகம் வேறன்னு இல்ல. ‘இந்த உலகம் எப்படியிருக்கு?'ன்னு நீங்க கேட்கறதா நினைக்க வேண்டியிருக்கு. ஏன்னா ரெண்டுமே ஒண்ணுதான். எந்த வித்தியாசமும் இல்ல. சமூக வலைதளங்கள்ல ஏகப்பட்ட தகவல்களைப் பார்க்கறோம் எல்லாமே நமக்குத் தேவையானு கேட்டா, தேவையில்லைனுதான் சொல்வேன். எது தேவையான தகவலோ அதை மட்டும் கத்துக்கிட்டா போதும். தேவையில்லாத தகவல்களை மைண்ட்ல ஏத்தும் போது, குப்பைகள்தான் மனசுல நிக்கும். நேரம் விரயமாகும். உளவியல் ரீதியான மாற்றங்கள் வரும். அந்த மாற்றங்கள், குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

லாக்டௌன் டைம்ல நெட்ப்ளிக்ஸ்ல ‘தி சோஷியல் டைலமா'னு ('The Social Dilemma') ஒரு டாக்குமெண்டரியைப் பார்த்தேன். அப்படியே அதிர்ந்துட்டேன். சமூக வலைதளங்களை உருவாக்கின மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் பேட்டி அதுல இடம்பெற்றிருந்தது. அத்தனை பேரும் அனுபவங்களைப் பதிவு பண்ணியிருப்பாங்க. எல்லாருமே ஒட்டுமொத்தமா ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருக்காங்க. ‘இந்த உலகத்திற்கு நாங்க துரோகம் செய்துவிட்டோம்'னு மனம் வருந்திச் சொல்லியிருப்பாங்க. ‘இந்த உலகம் எங்களை மன்னிக்காது. இப்படியொரு தப்பை நாங்க செய்திருக்கக் கூடாது. இதனால இப்ப நாங்க எங்க குழந்தைங்ககிட்டகூட எங்க செல்போன்களைக் கொடுக்கறதில்ல. தவற்றை உணர்ந்ததால, இந்த சோஷியல் மீடியாவுல இருந்து விலகிட்டோம்'னு அதுல பேசியிருப்பாங்க.
அத்தனை பேருமே கோடிக்கணக்குல சம்பளம் வாங்கிட்டு இருந்தவங்க. இப்ப வேலையை உதறிட்டு, ரொம்பவே சாதாரணமான ஒரு வாழ்க்கையை அமெரிக்காவுல வாழ்ந்துட்டிருக்காங்க. சோஷியல் மீடியான்னா என்ன என்பதற்கு இந்த உதாரணம் போதும்னு நினைக்கறேன்.''