சினிமா
தொடர்கள்
Published:Updated:

பட்டாம்பூச்சி - சினிமா விமர்சனம்

பட்டாம்பூச்சி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டாம்பூச்சி - சினிமா விமர்சனம்

சீரியல் கில்லர் சுதாகராக ஜெய், தன் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து, துணிச்சலுடன் இந்த ரோலைச் செய்திருக்கிறார்.

மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கொலைக் குற்றவாளி ஒருவன், தான் ஒரு சீரியல் கில்லர் என்று வாக்குமூலம் கொடுக்க, அந்த வழக்கின் மறுவிசாரணையில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்தப் ‘பட்டாம்பூச்சி.’

தூக்குத்தண்டனைக் கைதியான ஜெய், தன் கடைசி ஆசையாகப் பத்திரிகையாளர் ஹனி ரோஸைப் பார்க்கவேண்டும் என்று தெரிவிக்கிறார். அந்தச் சந்திப்பில், தான் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், ஆனால் வேறு சில கொலைகளைச் செய்திருப்பதாகவும், காவல்துறை தேடிவரும் ‘பட்டாம்பூச்சி’ என்ற சைக்கோ கொலைகாரன் தானே என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வர, அதன் பொறுப்பு காவல்துறை அதிகாரியான சுந்தர்.சி-யிடம் வருகிறது. சுந்தர்.சி - ஹனி ரோஸ் இணை உண்மைகளைக் கண்டறிந்ததா என்பதைச் சில புத்திசாலித்தனமான ட்விஸ்ட்களுடன் சுவாரஸ்யமாகச் சொல்கிறது படம்.

பட்டாம்பூச்சி - சினிமா விமர்சனம்

சீரியல் கில்லர் சுதாகராக ஜெய், தன் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து, துணிச்சலுடன் இந்த ரோலைச் செய்திருக்கிறார். டோரட் சிண்ட்ரோமால் (Tourette syndrome) பாதிக்கப்பட்டவராகத் தன் தோள்களை அடிக்கடி நெட்டி முறித்துக்கொண்டு, கைகளைப் பட்டாம்பூச்சியாக விரித்துச் சிரித்துக்கொண்டு மிரட்டுகிறார். க்ளைமாக்ஸில் அவர் எப்படியெல்லாம் கொலைகள் செய்தார் என்பதை நடித்துக்காட்டி விளக்கும் காட்சி அப்ளாஸ் ரகம். காவல்துறை அதிகாரி குமரனாக, சுந்தர்.சி-க்கு எப்போதும்போல துப்பறிந்து உண்மையைக் கண்டறியும் பணி. தன் கடந்த கால பிரச்னை, அதனால் உண்டான மன அழுத்தம் என அவரின் பாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நாயகி ஹனி ரோஸுக்கும் முக்கியமான பாத்திரம்தான் என்றாலும், அவரை கிளாமர் டாலாக மட்டுமே காட்சிப்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாம்.

சீரியல் கில்லர்கள் ஏன் அப்படி மாறுகிறார்கள், அவர்களின் கொலைகள் எப்படி கருணை என்ற ஒன்றே இல்லாமல் இருக்கும் என்பதையெல்லாம் எந்தவித சமரசமும் செய்யாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகளையும் பெண்களையும் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. முதல் பாதிவரை ஜெய்யின் காய் நகர்த்தல்களும் அதைத் தொடர்ந்து வரும் ட்விஸ்ட்களும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. வசனங்கள் கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

பட்டாம்பூச்சி - சினிமா விமர்சனம்

அத்தனை எதிர்பார்ப்புகளுடன் வந்த இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாதியை வெறும் சேஸிங், கடத்தல், சண்டைக் காட்சிகள் கொண்டு மட்டுமே நிரப்பியிருக்கிறார்கள். நவநீத் சுந்தரின் பின்னணி இசை பழக்கப்பட்ட ஒன்றாகவே கடந்து போகிறது. கதை, திரைக்கதையாக நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் அதைப் படமாகக் கோத்த விதத்தில் இயக்குநர் பத்ரியும், எடிட்டர் ஃபென்னி ஆலிவரும் இன்னமும் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கலாம்.

நல்ல ஐடியாக்கள் அனைத்தும் முதல் பாதியிலேயே தீர்ந்துவிட்ட உணர்வு ஏற்பட்டாலும், ‘பட்டாம்பூச்சி’ ஒரு துணிச்சலான முயற்சியே!