
புகழ்பெற்ற கபடிவீரன் பொத்தாரியாக ராஜ்கிரண். நடிப்பில் பல படங்களில் அசத்துபவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.
கபடியின் அடையாளமாக ஊரால் போற்றப்படும் ஒரு கபடி வீரரை சந்தர்ப்பவசத்தால் அதே ஊர் தூற்ற, அந்த ஊருக்கு எதிராகக் கபடி வீரர் குடும்பமே களமிறங்கினால், அதுதான் ‘பட்டத்து அரசன்.’
தஞ்சை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில், மூன்று தலைமுறையால் சிலை வைத்துக் கொண்டாடப்படும் கபடி வீரன் பொத்தாரி (ராஜ்கிரண்). அவரது பேரன் கபடிப் போட்டியில் கிராமத்துக்குத் துரோகம் செய்ததாக ஊரே சந்தேகப்பட, எந்த ஊர் பொத்தாரியைக் கொண்டாடியதோ அதே ஊரே அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கிவைத்து இழிவுபடுத்துகிறது. தன் பேரன் துரோகியில்லை என்று நிரூபிக்க பொத்தாரியின் குடும்பம் ஒட்டுமொத்த ஊரையும் எதிர்த்துக் கபடிக்களத்தில் இறங்க, யார் வென்றார்கள் என்பதை அலுப்பும் சலிப்புமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

புகழ்பெற்ற கபடிவீரன் பொத்தாரியாக ராஜ்கிரண். நடிப்பில் பல படங்களில் அசத்துபவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. ஊரே கொண்டாடும் ஆடுகள நாயகனுக்கான கம்பீரத்தை எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை. சில காட்சிகளில் மட்டுமே கபடி ஆடும் அவர் உடலில் அவ்வளவு தடுமாற்றம். உணர்வுமிக்க காட்சிகளில்கூட அனுபவம் வாய்ந்த அவரும் ராதிகாவும் கவரும்படி நடிக்கவில்லை என்பதால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தாத்தாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட பேரனாக அதர்வா. சில இடங்களில் மிகைநடிப்பு, பல இடங்களில் அதற்கு நேர் எதிர். பாலசரவணன், சிங்கம்புலி என்ற இரண்டு நகைச்சுவை நடிகர்களும் ‘இந்தப் படத்தில் அதெல்லாம் எதிர்பார்க்காதீங்க’ என்று பிடிவாதம் காட்டுகிறார்கள். கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் பாத்திரமே பலவீனமாக இருப்பதால், அவர் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதுவரை தமிழ் சினிமாக்களில் காட்டப்படாத வெற்றிலைத் தோட்டத்தைக் காட்டும் இடங்களில் மட்டும் லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது. பொதுவாக ஜெயிக்கும் சற்குணம் - ஜிப்ரான் கூட்டணியில் இந்த முறை பாடல்களும் படு சுமார் ரகமே!

அம்மன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து ஹீரோ ஹீரோயினுக்குக் கட்டுவது போன்ற அரதப்பழசான காட்சிகள் படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன. 13 வயது சிறுவன் முதல் 70 வயது முதியவர் வரை நிரம்பிய ஓர் அணியில் பாலின வித்தியாசம் பார்க்காமல் ஒரு பெண்ணுக்கும் இடம் கொடுப்பது எல்லாம் எந்த ஊர் கபடிப்போட்டியில் நடக்கிறது என்று தெரியவில்லை. தன் பேரன்மீது பெரிய களங்கம் சுமத்தப்படும்போது அதைத் தீர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் குடும்பமே கபடிப்போட்டிக்குத் தயாராவதில் எந்த லாஜிக்கும் இல்லை. அதிலும் மாபெரும் ஆட்டக்காரராகச் சித்திரிக்கப்படும் ராஜ்கிரண் எந்த வித்தையையும் காட்டாமல் க்ளைமாக்ஸில் சொதப்புவது ஏமாற்றமே!
‘30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பழைய படம் ஓடும் தியேட்டருக்கு வந்துவிட்டோமோ’ என்று பார்வையாளர்களை யோசிக்கவைப்பதில் பட்டம் பெறுகிறான் இந்த அரசன்.