சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“பாரதியின் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்!”

ராஜா, பாரதி பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜா, பாரதி பாஸ்கர்

`எனக்கு எல்லாம் தெரியும். நான்தான் மக்களுக்கு ஞானம் சொல்கிறேன்' என்ற மனநிலை இல்லாமல், மக்களோடு நெருங்குகிற மாதிரி நம் கருத்துகளை எளிமையாகப் பேச வேண்டும்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

பட்டிமன்ற மேடைகளில் எப்போதும் எதிரும் புதிருமாப் பேசும் பாரதி பாஸ்கரிடமும், ராஜாவிடமும் ஒரே கேள்வியைக் கேட்டால்..? பதில்கள் பட்டாசாகப் பறக்கும்தானே! மதுரையில் இருந்த ராஜாவிடமும் சென்னையில் இருந்த பாரதி பாஸ்கரிடமும் ஒரே நாளில் தனித்தனியாகத்தான் கேட்டேன். ஆனால், கேள்விகளுக்கு இருவரும் சொன்ன பதில்களில்தான் செம சர்ப்ரைஸ் காத்திருந்தது.

``எந்த வயதில் முதன்முதலாக நீங்கள் மைக் பிடித்தீர்கள் என்பது நினைவில் இருக்கிறதா?’’

பாரதி பாஸ்கர்: என் ஏழு வயதில் பள்ளி நாடகம் ஒன்றில் ஆண் வேடமிட்டு கதாநாயகனாக மைக் முன் நின்று நடித்தேன். அந்த நாள், அந்த நேரம், அந்த மேடை இன்னும் நினைவில் இருக்கிறது. நான் நடிப்பதைப் பார்க்க, என் அம்மா அவசர அவசரமாக வந்து, முதல் வரிசையில் அமர்ந்ததுகூட இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

ராஜா: நான் வசித்த கீழமாத்தூர் கிராமத்தில் ஒலிபெருக்கி நிலையம் இருந்தது. கல்யாண வீட்டில், கோயில் திருவிழாவில் என எங்கெல்லாம் அந்த மைக் செட் போடுகிறார்களோ அங்கெல்லாம் மைக் பிடித்துப் பேசுவேன். என் அப்பாவுக்கு இது பிடிக்காது. `எங்க அந்தப் பய?' எனக் கேட்பார். அதற்குள் நான் மைக்கில் பேசுவது அப்பாவுக்குக் கேட்டுவிடும். `அவனை இழுத்துட்டு வாங்கடா' என ஆளை அனுப்பிவிடுவார். வந்ததும் அடி விழும். பட்டிமன்ற மேடைகளில் நான் மைக் பிடித்தது 31 வயதில்.

“பாரதியின் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்!”

``பட்டிமன்றம் எப்போது தோன்றியது?’’

பாரதி பாஸ்கர்: சங்க காலத்திலேயே பட்டிமன்றம் என்ற அமைப்பு இருந்திருக்கிறது. பெரும்பாலும் சமயவாதிகள் தங்களுக்குள்ளே எந்தச் சமயம் பெரிய சமயம் என்பதை நிரூபிப்பதற்காக, அன்று பட்டிமன்றத்தைப் பயன்படுத்தினார்கள். மணிமேகலையில் பட்டிமன்றத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. கலகம் செய்யாமல் கருத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்ற விதிகள்கூட இருந்திருக்கின்றன. மிக மிகத் தொன்மையான கால வரலாறு கொண்ட கலை வடிவம்தான் பட்டிமன்றம்.

ராஜா: மணிமேகலை, கம்ப ராமாயணம் போன்ற பண்டைய இலக்கியங்களிலும், மாணிக்கவாசகரின் பாடல்களிலும் பட்டிமன்றங்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது. 1,000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு முன்பே பட்டிமன்றம் தோன்றியிருக்கலாம். தருமி, சிவபெருமான் கதையைக்கூட பட்டிமன்றத்தின் ஆரம்பம்னு வேடிக்கையாகச் சொல்வார்கள். ஒருவர் சொல்வதை ஒட்டியும், வெட்டியும் பேசுவதுதான் பட்டிமன்றம்.

``ஒரு பேச்சு வெற்றிபெற என்னென்ன வேண்டும்?’’

பாரதி பாஸ்கர்: முதலில் கடவுளுடைய அருள் வேண்டும். பிறகு மைக் சரியாக வேலை செய்ய வேண்டும். அடுத்து, பார்வையாளர்கள் நம் பேச்சுடன் தொடர்ந்து வரும் மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ராஜா: நேரம் அறிந்து, பொருள் புரிந்து, அவை அறிந்து, அடக்கமாக, அளவாகப் பேச வேண்டும். `எனக்கு எல்லாம் தெரியும். நான்தான் மக்களுக்கு ஞானம் சொல்கிறேன்' என்ற மனநிலை இல்லாமல், மக்களோடு நெருங்குகிற மாதிரி நம் கருத்துகளை எளிமையாகப் பேச வேண்டும். தொடங்கும் நேரம் தெரிந்து, முடிக்கும் நேரம் அறிந்து பேசும் பேச்சுகள் வெற்றிபெறும். கொஞ்சம் நகைச்சுவையும் இருந்தால், அந்தப் பேச்சு இன்னும் வெற்றிபெறும்.

``உங்களைக் கவர்ந்த பேச்சாளர் யார்?’’

பாரதி பாஸ்கர்: அமரர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்தான் என் மனம் கவர்ந்த பேச்சாளர். அவர் வாழ்வின் நிறைவு காலத்தில் அவருக்குப் பார்வையில்லாமல்போனது. கையைப் பிடித்து அவரை மேடையில் நிற்க வைப்பார்கள். எதிரில் இருப்பவர்கள் இருபது பேரா, இரண்டாயிரம் பேரா என்றுகூட அவருக்குத் தெரியாது. ஆனால், அவர் பேசுகின்ற பேச்சு பார்வையாளர்களை தர்க்கரீதியாகச் சிந்திக்க வைக்கும். அதேபோல், இலங்கை ஜெயராஜ் பேச்சுக்கு நான் பெரிய விசிறி. `உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்/ வாக்கினிலே ஒளி யுண்டாகும்' என்று மகாகவி சொன்னதுபோல், அவர் பேச்சில் ஒளி நிறைந்திருக்கும். எங்கள் நடுவர் பாப்பையா சாரின் பேச்சுக்கும் ரசிகை நான். மேடையில் நிகழ்த்துகலை வல்லுநர் அவர்.

ராஜா: தமிழறிஞர் சாலமன் பாப்பையா. அவரின் பேச்சைக் கேட்டுக்கேட்டுதான் மேடை ஏறினேன். கலைஞரின் பேச்சும் எனக்குப் பிடிக்கும். பெண்களில் பாரதி பாஸ்கர்.

``நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் என்ன?’’

பாரதி பாஸ்கர்: பட்டிமன்றங்களில், `என்ன நினைச்சுட்டிருக்கீங்க?' என்ற வார்த்தைகள். மனதில் அடிக்கடி நினைக்கும் சொல் `அறம்.'

ராஜா: பட்டிமன்றப் பேச்சுகளில் `ரொம்ப' என்ற வார்த்தை ரொம்ப வந்துவிடுகிறது. `வணக்கம்' என்ற சொல்லையும் அதிகம் பயன்படுத்துவேன்.

``அதிகமாக எந்தத் தலைப்பில் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு பேசினீர்கள்?’’

பாரதி பாஸ்கர்: `குடும்ப முன்னேற்றத்துக்குப் பெரிதும் உழைப்பவர் கணவனா, மனைவியா?' இந்தத் தலைப்பில்தான் அதிகம் கலந்துகொண்டு பேசியிருப்பேன் என நினைக்கிறேன்.

ராஜா: `குடும்ப முன்னேற்றத்துக்குப் பெரிதும் துணை நிற்பது கணவனா, மனைவியா?' என்ற தலைப்பில்தான் முதன்முதலில் பேசினேன். அந்தத் தலைப்பில் குறைந்தது ஆயிரம் முறையாவது பேசியிருப்பேன்.

``உங்கள் வாழ்க்கையில் எந்தச் சம்பவத்தை நினைத்தால், அடக்க முடியாத சிரிப்பு வரும்?’’

பாரதி பாஸ்கர்: நிறைய இருக்கிறது. ஒருமுறை லண்டன் மெழுகுச்சிலைக் கண்காட்சிக்குச் சென்றபோது, காந்தி சிலையைப் பார்த்தேன். நான் காந்திமுன் இரு கைகளையும் கூப்பி நிற்பதுபோல் என் கணவரைப் படம் எடுக்கச் சொன்னேன். `எவ்வளவு பணிவான போஸ்' என்று சொன்னவர், அடுத்த விநாடியே, `நான் காந்தியைச் சொன்னேன்' என்றார். இப்படிப் பல சமயங்களில் என் கணவர் அடிக்கும் பன்ச் டயலாக்குக்கு அடக்க முடியாமல் சிரித்திருக்கிறேன்.

ராஜா: வாழ்க்கையில் எல்லாமே ஒரு நேரம் திரும்பிப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கும். என் திருமணத்தில் நடந்த நிகழ்வை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும். ஆனால், அன்று எனக்கு அது பெரிய சோகம். என் திருமணத்தன்று என் நண்பன் அண்ணாமலை, அவன் காரில் என்னையும் என் சொந்தக்காரர்களையும் மண்டபத்தில் இறக்கிவிட்டான். அந்தக் காரின் டிக்கியில்தான் கல்யாணத்துக்கான மாலைகளை வைத்திருந்தார்கள். காரில் வந்த குஷியில் மாலைகள் இருந்த கூடையை என்னுடன் வந்தவர்கள் எடுக்க மறந்துவிட்டார்கள். என் நண்பன் இன்னொரு மண்டபத்தில் நடந்த கல்யாணத்துக்குப் போய்விட்டான். என்னைத் தவிர யாருக்குமே அவன் போன இடம் தெரியாது. இது தெரிந்த என் அப்பா என்னைத் திட்டி, `போய் மாலையை வாங்கிட்டுவா' என மணமேடையிலிருந்து என்னைப் பத்திவிட்டார். ஒரு சைக்கிள் ரிக்‌ஷா பிடித்து அனுப்பினார். ரிக்‌ஷா ஓட்டி வயசானவர். மதுரை ரயில்வே மேம்பாலத்தில் என்னை வைத்துக்கொண்டு அவரால் ரிக்‌ஷாவைத் தள்ள முடியவில்லை. என்னை இறங்கித் தள்ளச் சொன்னார். மாப்பிள்ளைக் கோலத்தில் ரிக்‌ஷாவைத் தள்ளிக்கொண்டு என் நண்பன் அண்ணாமலை இருந்த மண்டபத்துக்குப் போனேன். அவன் பொங்கல், இட்லி, வடை என சாப்பாட்டை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் ஷாக் ஆகிவிட்டான். `கல்யாண மாப்பிள்ளை இங்க என்னடா பண்ணுற?' என்று கேட்டவனிடம் விஷயத்தைச் சொன்னதும், `வந்தது வந்துட்ட... பொங்கல், வடை நல்லாருக்கு. உட்கார்ந்து சாப்பிடுடா' என்று சொன்னான். அந்நேரம் ஒரு பாட்டி என்னைப் பார்த்து, `தம்பி மாப்பிள்ளை வீடா, பொண்ணு வீடா' எனக் கேட்க... அதுக்கு அவன், `மாப்பிள்ளையே இவன்தான்' என்று சொன்னான். அந்தப் பாட்டி விவரம் தெரியாமல் விழிக்க... இதை எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.''

“பாரதியின் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்!”

``இவ்வுலகில் முக்கியமான நபர் யார்?’’

பாரதி பாஸ்கர்: நான்தான். நான் இருக்கும் வரைதான் எனக்கு இந்த உலகம் இருக்கும். என் கண் வாயிலாக, என் மனம் வாயிலாகத்தான் இந்த உலகத்தையே பார்க்கிறேன். அதனால், என்னைத் தவிர வேறு யாரும் இவ்வுலகில் முக்கியமான நபர் இல்லை.

ராஜா: நமக்கு நாம்தான் முக்கியம். திருவள்ளுவரே, `தற்காத்துத் தற்கொண்டாற் பேணி...' என்று சொன்னவர், அடுத்துதான் `தகைசான்ற சொற்காத்து'ன்னு சொல்கிறார். அவரவருக்கு அவரவர்தான் முக்கியம்.

``வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?’’

பாரதி பாஸ்கர்: கிடையவே கிடையாது. சில சின்னப் பிள்ளைகள் நிதானமாக, தெளிவாக, ரொம்ப அழகாகப் பேசுவார்கள். பேச்சு என்பதற்கு ஒரே ஒரு விஷயத்துடன்தான் சம்பந்தம் இருக்கிறது. எவ்வளவு படித்திருக்கிறோம், எவ்வளவு சொற்கள் நம் கைவசம் இருக்கின்றன. அதை வைத்துதான் பேச்சின் வெற்றி இருக்கிறது.

ராஜா: நிச்சயமா சம்பந்தம் இருக்கு. மொழி புரியாமல் பேசுவது மழலை. தெரிந்ததைப் பேசுவது இளமை. தெரிந்ததை அனுபவத்துடன் பேசும்போது இன்னும் சிறப்பாகப் பேச முடியும். நம்மை நாமே பேச்சில் புதுப்பித்துக்கொள்ள வயதும் அனுபவமும் உதவுகிறது.

``நீங்கள் பின்பற்றும் தாரக மந்திரம்?’’

பாரதி பாஸ்கர்: `தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி...' என்று மகாகவி சொல்லும் இந்த வாக்கியத்தில் வரும், `நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?' என்பதுதான் என் தாரக மந்திரம்.

ராஜா: ரொம்ப எளிமையா இருக்கணும். இனிமையா இருக்கணும். யாருக்கும் இடைஞ்சல் தராமல் இருக்கணும்.

``உங்களை மிகவும் பாதித்த படம்?’’

பாரதி பாஸ்கர்: மணிரத்னத்தின் `கன்னத்தில் முத்தமிட்டால்' படம் என்னை மிகவும் பாதித்தது. `விடை கொடு எங்கள் நாடே...' என்ற பாடலும் அதன் காட்சிகளும் என்னை இன்னும் உலுக்கும்.

ராஜா: (சிரிக்கிறார்) என்னையும் ஒரு சினிமா நடிகன் ஆக்கியது `சிவாஜி'தான். இந்தப் படத்தை முதலில் சொல்லலாம். அடுத்து, `நேர்கொண்ட பார்வை', `ஜெய் பீம்' போன்ற படங்கள் என்னை மிகவும் பாதித்தன.

``மரண பயம் வந்ததுண்டா?’’

பாரதி பாஸ்கர்: (சிரிக்கிறார்) என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறீங்களா... மரண தேவனைக் கண்ணுக்கு நேராகப் பார்த்து, `இன்றில்லை பிறகு வா...' என்று சொன்னபிறகு மரண பயம் எப்படியிருக்கும் எனக்கு? அந்த எல்லை வரை போய் வந்துவிட்டேன். இனி அந்த பயமில்லை. அடுத்தமுறை கூப்பிட்டால் போக ரெடிதான்.

ராஜா: கொரோனா காலத்தைக் கடந்தவர்களுக்கு அது வராமல் இருக்குமா? நமக்கு நெருங்கியவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு நெருக்கடி வரும்போது நமக்கு பயம் வரத்தானே செய்யும்? முன்னாடி வயது ஏற ஏற மரண பயம் வந்தது. இப்போது எல்லாருக்குமே வருகிறது.

``உங்களின் உயரிய லட்சியம் என்று எதைச் சொல்வீர்கள்?’’

பாரதி பாஸ்கர்: என் சித்தியின் மேல் எனக்குப் பிரியம் அதிகம். அவர் ஆபரேஷனுக்குப் போகும் முன் எங்களிடம் இரண்டு விஷயங்களைச் சொன்னார். `பசின்னு யாராவது கேட்டால் சாப்பாடு போடுங்க. ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்க ஏதாவது செய்ய முடியும் என்றால், அதைச் செய்யுங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் திரும்பிவரவில்லை. ஆனால், இதுவரை அவர் சொன்னதைத்தான் லட்சியமாக வைத்திருக்கிறேன்.

ராஜா: தெரிந்தோ தெரியாமலோ ஒரு பேச்சாளன் ஆகிவிட்டேன். அதற்கான தகுதி இருக்கிறதா என இன்னும் தெரியவில்லை. வணிகவியல் படித்து வங்கிப் பணியாளனாகப் போனேன். பாப்பையா சார் புண்ணியத்தில் மேடைக்கு வந்துட்டேன். எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, என்னால் முடிந்தவரை மக்களை மகிழ்விப்பதுதான் என் மன விருப்பம். லட்சியம், நோக்கம் என்ற பெரிய சொற்களோடு இதைச் சேர்க்க விரும்பவில்லை.

“பாரதியின் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்!”

``பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?’’

பாரதி பாஸ்கர்: `அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே...' என்பதுதான். பாரதியின் தைரியம் பிடிக்கும். அச்சத்துக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தையே நடத்தியவன் மகாகவி. `அச்சத்தைச் சுட்டெரித்து சாம்பலைக்கூட மிச்சமின்றிக் கரைத்துவிட வேண்டும்' என்று சொன்னவன்.

ராஜா: முண்டாசுக்கவி. எழுத்துகளுக்கு உத்வேகம் தந்தவன். விடுதலைப் போராட்டத்தில் தமிழரை வீறுகொண்டு எழச் செய்தவன். மகாகவி பாரதி என்றதும் தமிழரின் எழுச்சிதான் முதலில் தோன்றும். பேச்சு மேடைகளில், `பாரதி' என்றதும் `பாரதி பாஸ்கர்' ஞாபகம் வரும். நடுவர் ஐயா, பாரதி பாஸ்கரை `பாரதி’ என்றுதான் அழைப்பார்.

``மறக்க முடியாத மேடை எது?’’

பாரதி பாஸ்கர்: 2004 அல்லது 2005-ல் தான் நடுவர் ஐயாவுடன் இணைந்து சன் டி.வி பட்டிமன்றங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

அப்போதெல்லாம் சன் டி.வி-யில் பேசுவது பெரிய லாட்டரிப் பரிசு கிடைத்தது போல மகிழ்ச்சியாக இருக்கும். அங்கு போனதும்தான் தெரிந்தது, ராஜா சாருக்குப் பிறகு நான் பேச வேண்டும் என்பது. அவருக்குப் பிறகு பேசுவது என்பது பேச்சாளர்களுக்கு ஒரு நெருக்கடி. அவர் பேசியதும் பார்வையாளர்கள் அனைவரும் அவர் பக்கம்தான் நிற்பார்கள். அவருக்கு எதிராகப் பேசினால், பார்வையாளர்களுக்குப் பிடிக்காது. ஆனால், அன்றைக்கு அவர் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் நான் எதிர்க்கருத்து சொன்னேன். ஆடியன்ஸ் மிகவும் ரசித்தார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான், நாங்கள் இருவரும் ஒரே அணியில் பேசுவது சாத்தியமே இல்லை என்பதாகிவிட்டது. எனக்கு எதிராக அவரும் அவருக்கு எதிராக நானும் என்று முடிவு செய்யப்பட்டது அந்த மேடையில்தான். அது மறக்க முடியாத மேடை.

ராஜா: மதுரை சொக்கலிங்கம் நகரில் 15.07.1991 அன்று முதன்முதலில் பட்டிமன்றத்தில் மைக் பிடித்தேன். திடீர் பேச்சாளன் ஆனேன். அன்னைக்கு நான் பேசி முடிச்சதும், அரை டிராயர் போட்டிருந்த மைக் செட்காரர், `சூப்பர்'னு கத்தினார். அவர்தான் என் முதல் ரசிகர். இப்போது அந்த மேடையை நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. மறக்க முடியாத மேடை அதுதான்.

``உங்கள் மானசீக குரு யார்?’’

பாரதி பாஸ்கர்: என் ஆசான் ஜெயமோகன்தான். இதுவரை அவரிடம் இதைச் சொன்னதில்லை. வாழ்க்கையைப் பற்றி என்னுடைய பார்வையை விரிவு செய்தவர். வித்தியாசமாக, தர்க்கரீதியாக, அறிவுபூர்வமான விஷயங்களை அச்சமின்றி அணுகுவது எப்படி என்பதை அவரின் எழுத்துதான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

ராஜா: சாலமன் பாப்பையா... எப்போதும் எனக்கு நல்லதைச் சொல்லிக்கொடுக்கும் குருவாக இருந்திருக்கிறார். இருக்கிறார்!

``தமிழராகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம் எது?’’

பாரதி பாஸ்கர்: திருக்குறளைப் படிக்கும்போதெல்லாம் தமிழராகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். என் அறிவுக்கு எட்டியவரை, அறிவுலகத்துக்குச் சவால்விடும் நூல் திருக்குறள் போல இதுவரை எழுதப்படவில்லை என்பது என் கருத்து.

ராஜா: உலக நாடுகள் எங்கு சென்றாலும் தமிழர்கள் அன்புகாட்டும்போது, தமிழைப் படித்துத் தமிழில் பேசுவதால்தானே இந்த வாய்ப்பு என்று பெருமைப்பட்டிருக்கிறேன். பட்டிமன்றம் என்ற கலை தமிழில் மட்டுமே இருக்கிறது. சங்க இலக்கியங்கள் தொடங்கி கம்ப ராமாயணம், பெரியபுராணம் போன்ற இலக்கியச் செழுமை வாய்ந்த மொழி தமிழ் மொழி. உலக மொழிகளில் மிகவும் பழைமையான செம்மொழித் தமிழைப் பேசும்போதெல்லாம் தமிழனாகப் பெருமைப்படுகிறேன்.

“பாரதியின் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்!”

``நம்பிக்கைத் துரோகிகளை என்ன செய்யலாம்?’’

பாரதி பாஸ்கர்: வணங்கலாம். நன்றி சொல்லலாம். ஏனென்றால், இன்னொருமுறை ஏமாறாமல் இருப்பதற்கான பாடத்தை அவர்கள்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

ராஜா: `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயம் செய்து விடல்' என்ற திருக்குறளிலேயே இதற்கான பதில் இருக்கிறது. துரோகம் செய்தவர்களை, முதுகில் குத்தியவர்களை, அவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்யலாம். `பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!' என்று பாரதி சொல்கிறார். `ஒருவன் உன்னை வலக்கன்னத்தில் அடித்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு' என்று விவிலியமும் சொல்கிறது. எல்லாருமே `மறந்துடுங்க; மன்னிச்சிடுங்க'ன்னுதான் சொல்லுறாங்க. மன்னித்துவிட்டு அவர்களிடமிருந்து விலகிவிடலாம்.

``மனம்விட்டு அழுத சம்பவம்?’’

பாரதி பாஸ்கர்: என் தந்தையார் கிருஷ்ணன் அவர்களின் மரணம். தாங்கவே முடியாமல் அழுதேன். முடிவற்ற இருள் பள்ளத்தில் விழுந்துகொண்டே இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது என் தந்தையின் மரணம்தான்.

ராஜா: எங்கள் பட்டிமன்றப் பேச்சாளர் தா.கு.சுப்பிரமணியன் திடீரென மறைந்தபோது தாங்க முடியாமல் அழுதேன். 25 ஆண்டுகளுக்கும் மேல் என் சகோதரர் போல் என்னுடன் பயணித்தவர். ரொம்பவே கலங்கிப்போனேன். எப்போது அவரை நினைத்தாலும் கண்ணீர் வரும்.

``அரசியலில் சேரச் சொல்லி அழைப்பு வந்ததா... என்ன சொன்னீர்கள்?’’

பாரதி பாஸ்கர்: மறைமுக அழைப்புகள் வந்திருக்கின்றன. அது என் களம் அல்ல என்று பதில் சொன்னேன்.

ராஜா: என்னை யாருங்க கூப்பிடுவாங்க... அரசியல் தலைவர்களைப் பற்றிப் பேசச் சொல்லி அழைப்பு வரும். கொஞ்சம் யோசித்துப் பேசுவேன். நாம எல்லாம் அரசியலுக்குப் போனால் செல்லாக்காசு ஆகிடுவோம். அரசியலுக்கான எந்தக் கூறும் என்கிட்ட இல்லை. இன்றைய அரசியல் கட்சிகளும் இப்போது பேச்சாளர்களை விரும்புவதில்லை. செயல் வீரர்களைத்தான் விரும்புகிறார்கள். என்ன மாதிரி செயல்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

``உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?’’

பாரதி பாஸ்கர்: `Nothing is new in this universe, which has not been met by somebody who lived before you.' உனக்கு நேர்ந்த இது, ஏற்கெனவே கோடிக்கணக்கான மனிதர்களுக்கு நேர்ந்ததுதானே. எதுவுமே இந்த உலகில் புதிதல்ல!

ராஜா: `இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற பாரதியின் வாசகம்.

``உங்களைக் கவர்ந்த நாவல் எது?’’

பாரதி பாஸ்கர்: ஆயிரக்கணக்கான நாவல்கள் எனக்குப் பிடிக்கும். அவற்றில் என்றென்றும் என் மனதில் முதல் இடத்தில் அமர்ந்திருப்பது, தி.ஜானகிராமனின் `மோக முள்' நாவல் மட்டும்தான்.

ராஜா: நிறைய இருக்கு. சரித்திர நாவல் என்றால், `பொன்னியின் செல்வன்'.

தி.ஜானகிராமனின் அனைத்து நாவல்களும் பிடிக்கும். `அம்மா வந்தாள்'. `மரப் பசு', `மோக முள்' இவையெல்லாம் என் இளமையில் விரும்பிப் படித்தவை.

``பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?’’

பாரதி பாஸ்கர்: ரசிகர்கள் ராஜா சாருக்கு அதிகம். ரசிகைகள் பாரதி பாஸ்கருக்குத்தான் அதிகம்.

ராஜா: பாரதி பாஸ்கருக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்காங்க. அவர்களை மாதிரி மக்கள் மனம் கவரப் பேசக்கூடியவர்கள் மிக அபூர்வம். அவர் பேச்சுக்கு நானும் ஒரு ரசிகன்.

``சாலமன் பாப்பையாவிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?’’

பாரதி பாஸ்கர்: தனக்கு எதிராக இருப்பவர்கள், பகைவர்கள், விரோதிகள் என அனைவரையும் மன்னித்துக்கொண்டே இருக்கும் அவரின் பெருந்தன்மை பிடித்தது. பிடிக்காததும் அதுவேதான்.

ராஜா: பிடித்தது எளிமை. பிடிக்காதது அதீத பொறுமை.

``நீங்கள் இதுவரை பேசாத தலைப்பு எது?’’

பாரதி பாஸ்கர்: தீவிர அரசியல் தலைப்புகளில் நான் பேசியதில்லை. பேச வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஆனால், அதற்கான சூழல் இப்போது இல்லை.

ராஜா: தமிழகத்தை இன்றைக்கு பாதிக்கும் அரசியல், திரைப்படங்கள், ஜாதி, சமய துவேஷங்கள் இதைப்பற்றி எல்லாம் பேசணும்னு ஆசையாயிருக்கு. ஆனால், இன்றைய காலச் சூழல் இதையெல்லாம் ஒத்துக்காது. இப்போது எதைப் பேசினாலும் ஒரு கலர் கொடுத்துடறாங்க. கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

``எதை மிஸ் செய்கிறீர்கள்?’’

பாரதி பாஸ்கர்: நீண்ட விடுமுறையில் இருப்பதால், அலுவலகச் சூழலை மிஸ் செய்கிறேன். மற்றபடி எனக்கு நிறைவான வாழ்க்கைதான்.

ராஜா: ஓய்வுபெற்ற பிறகு வங்கிச் சூழலை மிஸ் செய்யறேன். தினமும் நூறு, இருநூறு கஸ்டமர்களைப் பார்த்து அவர்களுடன் கலந்துரையாடுவேன். அதையெல்லாம் மிஸ் பண்ணுறேன்.

``நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?’’

பாரதி பாஸ்கர்: அப்படி ஒரு ஆசையும் கிடையாது. யாரும் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்; அதுதான் யதார்த்தம். இந்த உலகம் நம்மைக் கடந்து சென்றுகொண்டே இருக்கும். இருந்தாலும் யாராவது ஒருவர்... சோகத்தில் இருக்கும்போது, பயத்தில் இருக்கும்போது, கண்ணீரில் இருக்கும்போது... `பாரதி பேசியதைக் கேட்டேன். அவர் பேச்சைக் கேட்ட பிறகு புதுப் பாதை கிடைத்தது' என்று யாராவது ஒருவர் சொன்னாலும் போதும். இந்த வாழ்வு பயனுள்ளது.

ராஜா: நினைவுகூரப்படும் அளவுக்கு நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஒரு எளிமையான மனிதனாக நினைக்கப்படணும்னு விரும்புறேன். ஆனால், தலைவர்களையே அவர்கள் சார்ந்த இயக்கங்கள் மறந்துவிடுகின்றன. வெறும் பேச்சாளர்களையெல்லாம் யார் நினைவில் வைப்பார்கள்?