Published:Updated:

பயணங்கள் முடிவதில்லை: இளைய நிலா பொழிந்த அமரக்காவியம்; மைக் மோகன் உருவாகக் காரணமாக இருந்த சினிமா!

பயணங்கள் முடிவதில்லை

ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான இசை ரசிகர்களுக்கும் ‘பயணங்கள் முடிவதில்லை’யின் ஆல்பம் ஸ்பெஷலானது. இதில் வரும் அனைத்துப் பாடல்களுமே ‘சூப்பர் ஹிட்’.

Published:Updated:

பயணங்கள் முடிவதில்லை: இளைய நிலா பொழிந்த அமரக்காவியம்; மைக் மோகன் உருவாகக் காரணமாக இருந்த சினிமா!

ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான இசை ரசிகர்களுக்கும் ‘பயணங்கள் முடிவதில்லை’யின் ஆல்பம் ஸ்பெஷலானது. இதில் வரும் அனைத்துப் பாடல்களுமே ‘சூப்பர் ஹிட்’.

பயணங்கள் முடிவதில்லை
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `பயணங்கள் முடிவதில்லை’.

எண்பதுகளில் மோகன் நடித்த பல திரைப்படங்கள் ‘வெள்ளி விழா’ வெற்றியைக் கண்டிருக்கின்றன. அதன் மங்களகரமான துவக்கம் என்று ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படத்தைச் சொல்லலாம். இதில் அவர் பாடகன் பாத்திரத்தில் நடித்து படமும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால், அதே போல் வேடங்களில் தொடர்ந்து நடித்து ‘மைக் மோகன்’ என்கிற அடைமொழியைப் பெற்றார். அந்தப் பட்டத்திற்கு இந்தப் படம்தான் காரணமாக இருந்தது.

இது தவிரப் பல ‘முதல் விஷயங்கள்’ இந்தப் படத்தின் மூலம் நிகழ்ந்துள்ளன. இதுதான் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முதல் திரைப்படம். இதற்குப் பிறகு பல ‘சில்வர் ஜூப்ளி’ திரைப்படங்களை அவர் தந்துள்ளார். கோவைத்தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்ஸ்’ உருவானது இந்தப் படத்தின் மூலம்தான். இந்த நிறுவனமும் பல வெற்றித் திரைப்படங்களை பிறகு தந்தது. நடிகர் மோகனையும் எஸ்.என்.சுரேந்தரின் குரலையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. மோகனுக்காக 75 திரைப்படங்களுக்கு மேல் ‘டப்பிங் குரல்’ தந்திருக்கிறார் சுரேந்தர். இந்தக் கூட்டணி முதன் முதலில் இணைந்தது, இந்தப் படத்தில்தான். (மோகனின் வாய்ஸிற்காக முதலில் பரிசீலிக்கப்பட்டது, எஸ்.பி.பியின் குரல்தான். அவர் பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டார்).

ஆர். சுந்தர்ராஜன்
ஆர். சுந்தர்ராஜன்
Silverscreen Inc.
ஆர். சுந்தரராஜனின் சுவாரஸ்யமான திரைக்கதை, மோகன், பூர்ணிமாவின் நடிப்பு போன்றவற்றைத் தவிர, இந்தத் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு அடிப்படையான காரணமாக மூன்று பெயர்களை நிச்சயம் சொல்லியாக வேண்டும். அது 1) இளையராஜா, 2) இளையராஜா மற்றும் 3) இளையராஜா.

ஆம், இன்றளவும் ரசிகர்களின் மனங்களில் அழியாமல் ஒலித்துக் கொண்டிருக்கிற அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் படைத்து, இந்தத் திரைப்படத்தின் தரத்தை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றிருந்தார் ராஜா. படம் வெளியான சமயத்தில் நடிகர்களுக்குக் கூட அல்லாமல் இசையமைப்பாளருக்குப் பிரமாண்டமான கட்அவுட்களை திரையரங்கின் வாசலில் வைத்தார் தயாரிப்பாளர். படத்தின் USP ராஜாவின் இசைதான் என்பது தயாரிப்பாளருக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. அது பிறகு வரலாற்று உண்மையாகவும் ஆனது.

இதற்குப் பிறகு வந்த இயக்குநர்கள் படத்தின் உத்தரவாதமான வெற்றிக்காக சில விஷயங்களைச் செய்தார்கள். கதையின் பிள்ளையார் சுழியை எழுதுவதற்கு முன்னால் அடித்துப் பிடித்து ராஜாவின் கால்ஷீட்டை முதலில் வாங்கினார்கள். ஹீரோ இசைக்கலைஞனாக இருந்தால், ராஜாவிடமிருந்து அற்புதமான பாடல்களை வாங்கி விட முடியும் என்கிற உத்தியைக் கடைப்பிடித்தார்கள். வசனங்களின் இடையில் பல மௌனமான ஷாட்களை வைத்தார்கள். தனது பின்னணி இசையால் அந்த மௌனங்களை ராஜா அற்புதமாக நிரப்பி விடுவார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை

முடியாத பயணங்கள் – தொடங்கும் காதலின் கதை என்ன?

தனது தோழியின் வீட்டிற்கு வந்திருக்கும் ராதா எழுதும் கவிதையின் தாள், காற்றில் பறந்து பக்கத்து வீட்டில் சென்று விழுகிறது. ஒண்டுக்குடித்தன வீட்டில் வாழும் ரவியின் கண்களில் அந்தக் கவிதை பட்டு அற்புதமான பாடலாக மாறுகிறது. ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் வறுமையில் தவிக்கும் ரவிக்கு ஒரு புகழ்பெற்ற பாடகனாக ஆவதுதான் கனவு. அவனது இசைத்திறமையைப் பார்த்து வியக்கும் ராதா, கூடவே காதலிலும் விழுகிறாள். தனது தந்தை கட்டி வரும் கோயிலின் திறப்பு விழாவில் ரவியின் இசைக்கச்சேரி அமையக் காரணமாக இருக்கிறாள்.

தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தொலைக்காட்சியில் ரவி பாடுவதற்கும் ஏற்பாடு செய்கிறாள். இதன் மூலம் அவனது திறமை வெளியுலகத்துக்குத் தெரிய வர, திரைப்படங்களில் பாடத் தொடங்கிக் குறுகிய காலத்திலேயே பிரபலமான பாடகனாக மாறுகிறான் ரவி. அவனுக்கும் ராதாவிற்குமான காதலும் கூடவே வேகமாக வளர்கிறது. இருவருமே திருமணக் கனவில் மிதக்கும் போது, இசைப் பயணத்துக்காக மதுரைக்குச் சென்று திரும்பும் ரவி ஆளே மாறி விடுகிறான். ராதாவைப் பார்க்காமல் முற்றிலுமாகத் தவிர்க்கிறான். அவனது புறக்கணிப்புக்குக் காரணம் தெரியாமல் ராதா தவிக்கிறாள். இந்தத் தவிப்பின் உச்சமாக ஒரு விபரீதமான முடிவை ராதா எடுக்கிறாள். இருவரும் நேரில் சந்திப்பதற்குள் காலம் கடந்து விடுகிறது.

வெற்றிக்குக் காரணமாக இருந்த சுந்தர்ராஜனின் இயக்கம்

‘தேவதாஸ்’ டைப் காதல் கதையின் மெல்லிய அவுட்லைனை மட்டுமே வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் உயிர் தந்திருக்கிறார் சுந்தர்ராஜன். மிக மிக இயல்பாக நகரும் காட்சிகள்தான் இந்தத் திரைப்படத்தின் பலம். அதற்குப் பிறகு நிகழும் காவிய சோகத்துடன் கூடிய க்ளைமாக்ஸ் முத்தாய்ப்பாக அமைந்து விட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி ராஜாவின் அட்டகாசமான இசையும் இதில் இணைந்து கொள்ள, ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள்.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை

அரசியல்வாதியாக வளர்ந்து கொண்டிருந்த கோவைத்தம்பியை, சுந்தர்ராஜன் என்கிற இளைஞர் சந்தித்து ‘பயணங்கள் முடிவதில்லை’ கதையைச் சொல்லித் தயாரிக்க வேண்டுகிறார். முன்அனுபவம் இல்லாத காரணத்தினால் முதலில் தயங்கும் கோவைத்தம்பி, பிறகுத் தன் நண்பர்களின் பெயர்களில் படத்தைத் தயாரிக்கிறார். இதன் கதையை எழுதியது, சுந்தர்ராஜன்தான் என்றாலும் ரீமேக் உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார். ஒளிப்பதிவுக்காக கஸ்தூரியும் எடிட்டிங்கிற்காக பாஸ்கரனும் இணைகிறார்கள். கதையின் ஹீரோ பாடகன் என்பதால் இளையராஜாவை அணுகுகிறார்கள். இரண்டு மணி நேரம் கதை கேட்கிற ராஜா, இசையமைக்க ஒப்புக் கொள்கிறார்.

முதலில் இந்தப் படத்தின் நாயகனுக்காகப் பரிசீலிக்கப்பட்டவர் சுரேஷ். ‘பன்னீர் புஷ்பங்கள்’ வெற்றியைப் பெற்றிருந்த நேரம் அது. ஆனால் சுரேஷ் ஒரு விபத்தில் சிக்கியதால் நடிக்க முடியாத சூழல். எனவே ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்திருந்த மோகன் என்கிற புதிய ஹீரோவை ஒப்பந்தம் செய்கிறார்கள். நாயகி பாத்திரத்திற்காக பூர்ணிமா அணுகப்படும் போது ‘புதிய இயக்குநர்’ என்பதால் அவர் நடிக்கத் தயங்குகிறார். ஏனெனில் அவருமே அப்போது மலையாளத்தில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ‘நெஞ்சில் ஒரு முள்’ என்கிற படத்தில் அறிமுகமாகியிருந்தார். முதலில் மறுத்தாலும், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்பதை பிறகு அறியும் பூர்ணிமா, மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக் கொள்கிறார். ஏனெனில் மலையாளத்தில் நடித்திருந்த ‘ஓலங்கள்’ திரைப்படத்திற்கு ராஜாதான் இசையமைத்திருந்தார். அதன் பாடல்கள் கேரளாவில் பிரபலமாகியிருந்தன.

சாமானியர்களின் ஹீரோ மோகன்

எம்.கே.டி - பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்று காலம் காலமாக இரு நடிகர்கள் முன்னணி வரிசையில் இருப்பதைப் பற்றி ‘நானும் நீயுமா’ என்கிற விகடன் தொடரில் மிக விரிவாகப் பார்த்திருக்கிறோம். போலவே இந்த வரிசையைத் தாண்டி அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்கள், சூப்பர் ஹீரோக்களாக அல்லாமல் சராசரியான நபர்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களை ஏற்பார்கள். சாமானியர்களின் நாயகர்களாக இருப்பார்கள். இதைப் பற்றியும் அந்தத் தொடரில் பார்த்திருக்கிறோம்.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை
இந்த சாமானியர்களின் ஹீரோ வகையில் மோகனை முக்கியமாகச் சொல்ல முடியும். கட்டுமஸ்தாக இல்லாமல் கெச்சலாக இருக்கிற உடம்பு, ஆக்ஷன் திறமைகள் போன்றவை இல்லாவிட்டாலும் வசீகரமான புன்னகை, இயல்பான நடிப்பு போன்றவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார் மோகன்.

இந்தத் திரைப்படத்தில், ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல், வாடகை தர முடியாமல் ஒண்டுக்குடித்தன வீட்டில் தவிக்கும் இளைஞனின் பாத்திரத்தில் அவர் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். “துணிக்குக் கஞ்சி போடணும்... சீக்கிரம் கொடுங்கம்மா" என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை இம்சை செய்து வாங்கிவிட்டு வீட்டுக்குள் அவசரமாக எடுத்துச் செல்வார். அது துணிக்குப் போடுவதற்காக அல்ல. அதுதான் அவர்களின் காலையுணவு. அந்தக் கஞ்சியை தன் நண்பனுடன் சாப்பிட்டு விட்டுக் கிளம்புவார்.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை

மோகனுக்கும் பூர்ணிமாவுக்கும் காதல் அரும்பி உருவாகும் காட்சிகள் மிக இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் மெல்லிய நகைச்சுவையுடனும் அமைக்கப்பட்டிருந்தன. பூர்ணிமாவுடன் முதன் முதலில் தொலைபேசியில் மோகன் உரையாடும் காட்சி சுவாரஸ்யமானது. தன் வலியை மறைத்துக் கொண்டு பிறகு பூர்ணிமாவைத் தவிர்ப்பது போல் கோபமாக நடிக்கும் காட்சிகளிலும் மோகனின் நடிப்பு நன்றாக இருந்தது. இவருக்கு நிகராக பூர்ணிமாவின் பங்களிப்பும் பல இடங்களில் ரசிக்கத்தக்கதாக இருந்தது. பல கோணங்களில் வசீகரமாக இருந்தார் பூர்ணிமா. இந்தப் படத்துக்காக இருவருமே ‘சிறந்த நடிகர்களுக்கான’ பிலிம்போ் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘இந்த சென்னை மாநகரத்திலே’ – ரகளை செய்த கவுண்டமணி

மோகனின் நண்பனாக ‘செல்வம்’ என்னும் மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.வி.சேகர். ஏறத்தாழ ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் அதே கேரக்டரின் சாயல்தான். ‘பசிக்குதடா. சிங்கிள் டீ வாங்கிக் கொடு’ என்று மோகனை இம்சித்துக் கொண்டே இருப்பார். தன் நண்பனின் வளர்ச்சியில் உண்மையான அக்கறையுடன் செயல்படுவார். இறுதியில் தன் பெயரில் உயில் எழுதி வைக்கும் மோகனின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து விடுவார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஓர் அசலான நண்பனின் பாத்திரத்தைத் திறமையாகக் கொண்டு வந்திருந்தார் சேகர்.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை

ராஜேஷூக்குப் பெரும்பாலும் இப்படிப்பட்ட பாத்திரங்கள்தான் வாய்த்தன. தனக்கு மனைவியாக வரப்போகிறவரை, அவளது காதலனுக்காக விட்டுத்தரும் கண்ணியமான மனிதன். இதிலும் அப்படிப்பட்ட சாயலைக் கொண்ட பாத்திரம்தான்... படத்தின் இறுதியில் வந்தாலும் ஒரு முக்கியமான திருப்பத்துக்கு இவரின் பாத்திரம் பயன்பட்டது. மகளின் மீது பாசம் கொண்ட பணக்காரத் தந்தையின் வேடத்தை பூர்ணம் விஸ்வநாதன் நன்றாகக் கையாண்டிருந்தார். மோகனுக்குப் பாடல் வாய்ப்பு தரும் காட்சியில் கங்கை அமரன் இசையமைப்பாளராகவே தோன்றியிருந்தார். இவர் தொலைக்காட்சியில் மோகன் பாடுவதைப் பார்க்கும் ஒரு காட்சியில் பக்கத்தில் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் சிறுவர்களாக அமர்ந்திருக்கும் சுவாரஸ்யமான காட்சியும் உண்டு.

‘இந்த சென்னை மாநகரத்திலே.. இப்படியொரு சிறப்பான பில்டிங்கைக் கட்டி’… என்கிற வசனத்தை அடிக்கடி சொல்லும் கேரக்டரில் கவுண்டமணி ரகளை செய்திருந்தார். இவர் ஒண்டுக்குடித்தன வீட்டின் உரிமையாளர். குடியிருப்பவர்களிடமிருந்து வாடகையை வசூலிப்பதற்குள் நொந்து அவலாகி விடுவார். இவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். பூர்ணிமாவின் தோழியாக ரஜினியும் இயல்பாக நடித்திருந்தார்.

படம் முழுவதும் பொழிந்த இளைய இசை

ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான இசை ரசிகர்களுக்கும் ‘பயணங்கள் முடிவதில்லை’யின் ஆல்பம் ஸ்பெஷலானது. இதில் வரும் அனைத்துப் பாடல்களுமே ‘சூப்பர் ஹிட்’. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சுவையிலிருந்தது. கிட்டார் வாத்தியத்தைப் பிரதானமாக வைத்து ராஜா இசையமைத்திருந்த ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலை, இந்த ஆல்பத்தின் மணிமகுடம் எனலாம். இந்த மெட்டை ஹம்மிங்காகவும் ஆலாபனையாகவும் படத்தின் பல இடங்களில் உபயோகித்திருந்தார் ராஜா. இந்தப் பாடலின் கடைசியில் முத்தாய்ப்பாக ஒலிக்கும் இசைத்துணுக்கில் ‘ஐஸ்கிரீம் டாப்பிங்’ போல அத்தனை ருசி இருக்கும்.

ராஜா + வைரமுத்து கூட்டணி ஏன் பிரிந்தது என்கிற துக்கத்தை அதிகப்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘இளையநிலா’.
இளையநிலா - பயணங்கள் முடிவதில்லை
இளையநிலா - பயணங்கள் முடிவதில்லை

‘வரும் வழியில்

பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்'

என்று கவித்துவமான வரிகளால் விருந்து படைத்திருந்தார் வைரமுத்து. இந்த மெட்டை ‘மூடுபனி’ திரைப்படத்திற்காகத்தான் முதலில் உருவாக்கியிருந்தார் ராஜா. ஆனால் பாலு மகேந்திராவிற்கு பிடிக்காததால் ‘என் இனிய பொன் நிலா’ பாடலை போட்டுத் தந்தார். ‘இளையநிலா’ பாடலின் பிரதான வாத்தியமான கிட்டாரை அற்புதமாக வாசித்திருந்தவர் ஆர்.சந்திரசேகர். கிட்டாரின் இசை கச்சிதமாக வருவதற்காக ஏறத்தாழ 20 டேக்குகள் ஆனதாகச் சொல்கிறார்கள். புல்லாங்குழலின் இசையும் இந்தப் பாடலில் முக்கியமான பங்கை வகித்திருக்கும். அற்புதமாகப் பாடியிருந்த எஸ்.பி.பியின் பங்களிப்பை மறக்கவே முடியாது. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆன போது ‘இளைய நிலா’ பாடலின் மெட்டு அப்படியே பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த அளவிற்குத் தவிர்க்க முடியாத சிறப்பான பாடலாக இருந்தது.

‘ஏ.. ஆத்தா.. ஆத்தோரமா வாரியா’ பாடல், மேலோட்டமாகக் கேட்பதற்கு குத்துப்பாடல் போல் தெரிந்தாலும் நவீன இசைப்பாணியும் அழுத்தமாகக் கலந்து கிளாசிக் தன்மையைக் கொண்டிருக்கும். பாடலின் வரிகளை வைத்தே இது கங்கை அமரன் எழுதியது என்று யூகித்து விடலாம். இந்தப் பாடலுக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. ரஜினி நடித்த ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலின் மெட்டு, அதன் இயக்குநரான எஸ்.பி.முத்துராமனுக்கு முதலில் பிடிக்கவில்லை. வேறு மெட்டை ராஜாவிடம் கோரினார். அதற்காகப் போடப்பட்டதுதான் ‘ஆத்தோரமா வாரியா’... முத்துராமன் பழைய மெட்டையே வைத்துக் கொள்ள, இந்த ஆல்பத்திற்கு அந்த மெட்டு வந்து சேர்ந்தது. நாட்டுப்புற இசையையும் மேற்கத்தியப் பாணியையும் எத்தனை கச்சிதமாக இணைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது இந்தப் பாடல்.

குத்துப் பாடல் எழுதுவதில் வல்லவர் என்று தெரியும். ஆனால் இதே அமரன்தான் ‘வைகறையில் வைகைக் கரையில்’ பாடலின் அற்புதமான வரிகளையும் இதில் எழுதியிருக்கிறார். இப்படி திடீரென்று பிரமிப்பூட்டுவதில் கங்கை அமரன் வல்லவர்.
கங்கை அமரன்
கங்கை அமரன்

‘உன் நினைவே எனக்கோர் சுருதி

உன் கனவே எனக்கோர் கிருதி’

என்பது போன்ற அற்புத வரிகளை எழுதியிருப்பார். ‘சுபபந்துவராளி’ ராகத்தில் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டிருக்கிறது.

‘சிந்து பைரவி’ ராகத்தில் உருவான ‘மணியோசை கேட்டு எழுந்து’ பாடலும் மிக உருக்கமானது. பாடலின் இடையில் வரும் இருமல் சத்தத்தையும் பிறகு சுதாரித்துக் கொண்டு பாடும் விதத்தையும் எஸ்.பி.பி. சிறப்பாகக் கையாண்டிருப்பார். ‘ராக தீபம் ஏற்றும் நேரம்’ பாடலும் மிக உணர்ச்சிகரமான முறையில் இசையமைக்கப்பட்டிருந்தது, காட்சியாகவும் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு பாடல்களின் அற்புதமான வரிகளுக்குச் சொந்தக்காரர் முத்துலிங்கம். லதாங்கி ராகத்தில் உருவான ‘தோகை இளமயில் ஆடி வருகுது’ பாடலும் சிறப்பானது. ‘சாலையோரம் சோலையொன்று ஆடும்’ பாடலும் அருமை.

'மொட்டுக்கதவை

பட்டு வண்டுகள்

தட்டுகின்றதே

இப்போது’

என்று வரிகளில் சுவை கூட்டியிருப்பார் வைரமுத்து.

ஏழு பாடல்கள் உள்ள இந்த ஆல்பத்தில் எஸ்.ஜானகி இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். இது தவிர, மீதமுள்ள ஐந்து பாடல்களிலும் எஸ்.பி.பியின் ராஜாங்கம்தான். ஒவ்வொரு பாடலையும் அப்படி அனுபவித்துப் பாடியிருந்தார் பாலு.

இளையராஜா போட்டுத் தந்த இசை என்னும் அஸ்திவாரத்தில் தன்னுடைய திரைக்கதையைச் சுவாரஸ்யமாக அமைந்திருந்தார் சுந்தர்ராஜன். ஒரு தேய்வழக்கான காதல் கதையின் அவுட்லைனை மிகச் சுவாரஸ்யமான, உணர்ச்சிகரமான காட்சிகளாக மாற்றியிருந்தார். பூர்ணிமாவை நிராகரிக்கும் பாவனையில் “உன் கல்யாணத்துக்குன்னா ஓசியிலேயே பாடுவேன்” என்று மோகன் கடுமையாகச் சொல்லும் வசனத்தின் வலி, நாயகிக்கு மட்டுமல்லாமல் பார்வையாளனுக்கும் பரவும் வகையில் உணர்ச்சிகரமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது.

பயணங்கள் முடிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை
சோகமான முடிவு என்றாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆர். சுந்தர்ராஜன் திறமையாக இயக்கிய விதம், இளையராஜாவின் அற்புதமான பாடல்கள், மோகன் மற்றும் பூர்ணிமாவின் ஆத்மார்த்தமான நடிப்பு போன்ற காரணங்களால் 2கே கிட்ஸ்களும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கிறது, இந்த ‘பயணங்கள் முடிவதில்லை’.