ஒப்பனை முதல் எடிட்டிங் வரை தமிழ் சினிமாவின் பல நுட்பங்களில் கமல் முன்னோடியாக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கமல் சம்பந்தப்பட்ட எல்லாத் திரைப்படங்களுக்கும் அவருக்கே முதல் கிரெடிட் தந்து விடுகிறோமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஹீரோக்களின் பிரபலத்திற்குக் கிடைக்கும் வெளிச்சத்தின் பின்னால் அசலான திறமையாளர்கள் மங்கிவிடுவது துரதிர்ஷ்டவசமானது.
ஆனால், இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை, கமலைத் தாண்டி நாம் முதன்மையாக கிரெடிட் தர வேண்டியது, இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்குத்தான். மௌனத் திரைப்படங்களின் காலம் முடிந்து, நுட்பம் வளர்ந்து சினிமா பேசத் தொடங்கியது, 1927-ல். ஆனால் அதற்கும் 60 வருடங்கள் கழித்து, வசனமே இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுத்துப் பார்க்கலாம் என்று பரிசோதனை முயற்சியில் ஈடுபடுவதற்கு ஒரு முரட்டுத்தனமான கலை மனம் இருக்க வேண்டும். அது சிங்கீதம் சீனிவாச ராவிடம் இருந்தது.

‘பிளாக் காமெடி’ திரைப்படங்களின் முன்னோடி
சீனிவாச ராவ், கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு காட்சி படமாக்கப்பட்டது. வசனமே இல்லாமல் ஒரு கேரக்ட்டர் பயத்தை வெளிக்காட்ட வேண்டும். இது சீனிவாச ராவின் மனதில் ஆழமாகப் பதிந்து விதையாக மாறியது. "வசனமே இல்லாமல் ஒரு படம் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்?” என்று ரிவர்ஸில் சிந்தித்தார். ஆனால் அதற்குச் சுவாரஸ்யமான கதை இருக்க வேண்டும். சில காலம் கழித்து அவர் இயக்குநரான பின், இந்த விதை மீண்டும் முளைத்து அவருக்கு நினைவுபடுத்தியது. எழுத அமர்ந்து இரண்டே வாரத்தில் முடித்த திரைக்கதைதான் ‘புஷ்பக விமானம்’.
வசனம் இல்லாத இந்தப் பரிசோதனை முயற்சிக்கு முதலீடு செய்ய யார் முன்வருவார்? தயாரிப்பாளரைத் தேடி அலையும் போது கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் ஷிருங்கர் நாகராஜ் இணை தயாரிப்பாளராக இருக்க ஆர்வத்துடன் முன்வந்தார். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. மொழி இல்லாவிட்டாலும் இதை ஒருவகையில் ‘கன்னடத் திரைப்படம்’ எனலாம். கன்னடத்தில் ‘புஷ்பக விமானா’, தெலுங்கில் ‘புஷ்பக விமானம்’, இந்தியில் ‘புஷ்பக்’, தமிழில் ‘பேசும் படம்’ என்று வெவ்வேறு தலைப்புகள் சூட்டப்பட்டன. இந்தப் புதிய முயற்சிக்கு விமர்சன ரீதியாகக் கணிசமான பாராட்டுகள் கிடைத்ததோடு, வர்த்தக ரீதியாகவும் நன்கு ஓடியது. பெங்களூரில் 35 வாரங்களுக்கும் மேல் திரையிடப்பட்டது. ரூ.35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் வசூலில் ஒரு கோடியை ஈட்டியது. கன்னட மொழித் தரப்பிலிருந்து ‘சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதும் பெற்றது.
‘பிளாக் காமெடி’ என்னும் வகைமைத் திரைப்படங்கள் இப்போது நமக்குச் சற்று பழகி இருக்கலாம். ஆனால் 1987-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை, இந்த ஜானரின் முன்னோடியான படைப்பு எனலாம். ஒருவரின் சடலம் கிடத்தப்பட்டிருக்கும் அஞ்சலிக் கூட்டத்தின் க்யூவில் நாயகனும் நாயகியும் ரொமான்ஸில் ஈடுபடுவார்கள். அவல நகைச்சுவையின் தன்மை இந்தக் காட்சியில் இருக்கிறதுதானே? இதே காட்சியை மேற்கோள் காட்டி இயக்குநரைப் பாராட்டினாராம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் சத்யஜித்ரே.

மிடில் கிளாஸ் நாயகனின் குறுக்குவழி பேராசை
மிடில் கிளாஸ் வாழ்க்கையின் அத்தனை தரித்திரங்களும் சங்கடங்களும் அற்பத்தனங்களும் ஒன்று சேர்ந்திருக்க வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். (இந்தப் படத்தில் எந்த கேரக்ட்டருக்கும் பெயர் கிடையாது). அவன் வசிப்பது ஒரு நெரிசலான விடுதியில். காலையில் கழிப்பறைக்கு க்யூ. வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாலும் சற்று அசந்தால் பின்னால் வருபவன் புகுந்து விடுவான். இரவு முழுவதும் நாய்கள் குரைப்பது தொடர் சங்கீதமாக இருக்கும். போதாக்குறைக்குக் கீழ்ப்பகுதியிலிருந்து குங்பூ சண்டைக்காட்சிகளின் டிவி சத்தம் இரவு பூராவும் ஒலித்துக் கொண்டிருக்கும். வெளியே செல்லும் வழியில் சாக்கடையைத் தாண்ட வேண்டும். இத்தனை இம்சைகள் சூழ்ந்திருக்கும் அந்த விடுதியின் பெயர் ‘ஆனந்த பவன்’. (என்னவொரு சுவாரசிய முரண்?!). சமயங்களில் கீழ்வீட்டுப் பெண் ஆடை மாற்றும் காட்சியை, மேல் ஜன்னல் வழியே காணக் கிடைப்பது, இங்கு வசிப்பதில் கிடைக்கும் சிறிய இன்பங்களில் ஒன்று என்று சந்தோசப்பட்டுக் கொள்கிறான்.
வேலை கிடைக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கும் அந்த இளைஞன், ஒரு நாள் சாலையில் விழுந்து கிடக்கும் ஓர் ஆசாமியைப் பார்க்கிறான். பணக்காரன். அவனுடைய கோட் பையில் ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சாவி இருக்கிறது. அந்த ஹோட்டலை இளைஞன் வெளியிலிருந்து பிரமித்துப் பார்த்திருக்கிறான். இப்போது இளைஞனுக்குள் திடீரென ஒரு குறுக்கு யோசனை ஓடுகிறது. அதைச் செயல்படுத்த முடிவு செய்கிறான். குடிகாரனைக் கொண்டு போய் தன்னுடைய விடுதி அறையில் கட்டிப் போட்டுப் படுக்க வைத்து விடுகிறான். அவன் எழுந்திருக்காமல் இருக்க மதுவை ஊற்றி விடுகிறான். பிறகு ஹோட்டல் சாவியை எடுத்துக் கொண்டு போய் அங்குச் சொகுசான வாழ்க்கையை ஜாம் ஜாம் என்று அனுபவிக்கிறான். ஒரு காதலும் அங்கு அவனுக்குக் கிடைக்கிறது.
ஆனால் இந்த தற்காலிக அதிர்ஷ்டம் இப்படியே செல்லுமா? கடைசியில் என்னதான் ஆனது என்பதை மிக மிகச் சுவாரஸ்யமான காட்சிகளால் சொல்லியிருக்கிறார்கள்.

குறுக்குவழிப் பாதையின் அதிர்ஷ்டம் நிரந்தரமல்ல
இந்த ஒட்டுமொத்த படமுமே ஓர் அழகான நீதிக்கதை போலிருக்கிறது. ஆனால் உபதேசத் தொனி எங்குமே இல்லை. பல சின்ன சின்ன காட்சிகளின் வழியாகத் தான் சொல்ல வந்த செய்தியைக் கொண்டு போய் பார்வையாளனிடம் கச்சிதமாகச் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
ஓர் உதாரணக் காட்சியைச் சொல்கிறேன். வேலையில்லாத் திண்டாட்டம் இருந்த காலகட்டத்தில் இந்தப் படம் நிகழ்கிறது. வேலை வாய்ப்பிற்காக ஒரு நிறுவனத்தின் முன்பு ஏராளமான நபர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் எச்சில் துப்புவதற்காக விலகிச் செல்ல, இந்த இளைஞன் அந்த இடத்தில் போய் நின்று கொள்கிறான். அந்த ஆசாமி திரும்பி வந்து இவனை முறைத்துப் பார்க்கிறார். அவருக்கு வழிவிட்டு பின்னால் நகர்ந்து நிற்கிறான். ஆனால் வரிசையில் நிற்பவர்கள் ஒவ்வொருவராக இவனை நகர்த்தி நகர்த்தி பின்னால் அனுப்புகிறார்கள். கடைசியில் பார்த்தால் அவன் ஏற்கெனவே நின்றிருந்த இடமும் பறிபோய், இன்னமும் நீண்டிருக்கிற வரிசையின் கட்டக் கடைசிக்குப் போக வேண்டியிருக்கிறது. இதனால் பணி வாய்ப்பும் பறிபோகிறது. இதிலுள்ள நீதி புரிகிறதல்லவா? இதையேதான் படமும் விதம் விதமான காட்சிகளால் சொல்கிறது. ‘குறுக்கு வழியைத் தேடாதே’.
வேலை கிடைக்காத ‘இளைஞனாக’ கமல். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ‘நாயகன்’ திரைப்படத்திற்காக அவர் தலைமுடியைத் தியாகம் செய்திருந்த சமயம். எனவே இதில் ‘விக்’ வைத்து நடித்திருக்கலாம். இதற்குப் பிறகு வந்த ‘சத்யா’ திரைப்படத்தில் மொட்டையடித்து சில நாள்கள் முடி வளர்ந்த தலையுடன் நடித்திருப்பார் என்பதையும் நினைவுகூரலாம். இந்தப் படத்திற்காக மீசையையும் தியாகம் செய்தார். மீசையில்லாமல் எலைட் ‘லுக்’குடன் இருக்கும் கமலை, மிடில் கிளாஸ் மாதவனாகப் பார்ப்பது சற்று சிரமம்தான் என்றாலும் தன்னுடைய அசாதாரண நடிப்பினால் அதைத் திறமையாகக் கொண்டு வந்திருந்தார்.
பேஸ்ட்டை நசுக்கிப் பிதுக்கியெடுத்து பல் துலக்குவது, சட்டையின் அக்குள் பகுதியை மட்டும் சோப்பு தடவித் தோய்ப்பது, முழு கிளாஸ் டீயை வாங்க வசதியில்லாமல், 1 ரூபாய்க்கு அரை கிளாஸ் டீ வாங்கி அதை ‘காக்கா கல் போட்டு நீர் குடிக்கும் கதையின்’ பாணியில் முழு கிளாசாக்கி பெருமிதத்துடன் குடிப்பது, கழிவறை வாசலின் க்யூவில் காத்திருந்து ஏமாறுவது என்று அடித்தட்டு விடுதி வாழ்க்கையின் அத்தனை சங்கடங்களையும் திறமையான உடல்மொழியில் கொண்டு வந்திருந்தார். கமலும் அமலாவும் முதன்முறையாகச் சந்திக்கும் காட்சி அருமையானது.

கமல், அமலா – எக்ஸ்பிரஷனில் கலக்கிய நடிகர்கள்
இந்தப் படத்தில் வசனங்கள் கிடையாது என்பதால் நடிகர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். அவர்களின் உடல்மொழி, முகபாவம், நடிப்பு போன்றவற்றின் மூலம்தான் என்ன நடக்கிறது என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டாக வேண்டும். மொழிப் பிரச்னை இல்லை என்பதால் பல மாநிலங்களிலிருந்தும் திறமையான நடிகர்களைத் தேடிப் பிடித்தார் சீனிவாச ராவ். இந்த வரிசையில் கமலின் நடிப்புத் திறமை பற்றிச் சொல்லவே வேண்டாம். அமலா கலாஷேத்ராவில் நடனம் பயின்றவர் என்பதால் முகபாவங்களின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இயல்பாகவே இருந்தது. எனவே இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் அமலா நகைக்கடையில் முயன்று பார்க்கும் கம்மல்களை, தன் பார்வையினாலேயே கமல் மறுப்பதும் பிறகு கடைசியாக ஒன்றை ‘நல்லாயிருக்கு’ என்பது போல் சைகை காட்டுவதும், ‘ஓர் அந்நிய ஆணிடம் ஏன் ஒப்புதலைப் பெற வேண்டும்?’ என்கிற உணர்வு திடீரென்று வர, அமலா சட்டென்று விலகுவதும், பிறகு கடைக்கு வெளியில் கமலைப் பார்த்தவுடன் தலைமுடியை இழுத்து காதின் கம்மலை மறைத்துக் கொள்வதும்... என்று படம் முழுக்க கவிதைக் கணங்கள்தான்.
கமல் ‘பரிசுப்பெட்டி’ சுமந்து சொல்லும் காட்சி ஒன்று வருகிறது. கமல் ‘வேண்டுமென்றே’ தவற விட்டுச் செல்லும் அந்தப் பரிசுப்பெட்டியை, பார்க்கும் ஓர் ஆசாமி ஆசையுடன் முகர்ந்து பார்த்து விட்டு எடுத்துச் செல்வார். அடுத்தடுத்த சமயங்களில் கமல் பரிசுப் பெட்டியை எடுத்து வரும் போது அதே ஆசாமி பதறி அடித்துக் கொண்டு எதிர்த் திசையில் ஓடுவார். இது ஏன் என்று புரிய வேண்டுமெனில் நீங்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும். வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை இது.
வசனம் பேசாமலேயே நடிப்பில் அசத்திய நடிகர்கள்
ஒரு கான்டிராக்ட் கில்லரும் படத்தில் வருகிறார். அம்ரீஷ்புரியைத்தான் இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தார்கள். அது சாத்தியப்படாததால், சரிகாவின் பரிந்துரைப்படி டினு ஆனந்த் நடித்தார். (நாயகன் படத்தில் அப்பாவியாக வரும் பாத்திரம்!) பனிக்கட்டியால் செய்த கத்தியால் தனது டார்கெட்டை குத்தி சாகடித்தால் தடயம் இருக்காது என்பது இவரது ஐடியா. இதற்காக பிளாஸ்க்கில் ஐஸ் கத்திகளுடன் கமலைப் பின்தொடர்ந்து செல்வதும், அந்தக் கொலை முயற்சிகள் தவறிக் கொண்டே போவதும், இறுதியில் நடக்கும் ட்விஸ்ட்டும் சுவாரசியமான காட்சிகள். (இவர் ஏன் கமலைக் கொல்ல அலைகிறார் என்பதை அறிவதற்கும் நீங்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும்!).

அமலாவின் தந்தையாக, மேஜிக் செய்யும் ஓர் ஆசாமியும் நடித்திருக்கிறார். இந்தப் பாத்திரத்தில் பி.சி.சர்க்கார் ஜூனியரை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். அது சாத்தியப்படாமல் போகவே கே.எஸ்.ரமேஷ் என்கிற மாயாஜாலக்காரரை நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தினுள் இவர் செய்யும் தந்திரக்காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, ‘ஹே... எப்புட்ரா?’ என்கிற பிரமிப்பையும் ஏற்படுத்துபவை. இவரது மனைவியாக ஃபரீதா ஜலால் நடித்திருக்கும் காட்சிகளும் சிறப்பானவை.
பணக்கார குடிகாரராக சமீர் கக்கர் நடித்திருந்தார். ‘நுக்கட்’ போன்ற தூர்தர்ஷன் தொடர்களில் இவரது நடிப்பை ஏற்கெனவே பலரும் ரசித்திருப்பார்கள். இவர் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் கமலின் மூலம் வலுக்கட்டாயமாக இயற்கை உபாதை கழிக்கும் காட்சிகளில் இருவரின் முகபாவங்களும் வெடித்துச் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். பிரபல தெலுங்கு நடிகரான பி.எல்.நாராயணா, சாலையோர பிச்சைக்காரராக நடித்திருந்தார். தன்னிடம் உள்ள ரூபாய் நோட்டைப் பிச்சைக்காரரிடம் காட்டி பெருமையடித்துக் கொள்வார் கமல். பதிலுக்கு தன்னிடமுள்ள நோட்டுக்களைப் பிச்சைக்காரர் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டும் போது முகம் வெளிறிப் போய் விலகி விடுவார் கமல். மிகச் சுவாரஸ்யமான காட்சி இது. இறுதியில் பிச்சைக்காரரின் மரணத்தின் மூலம் கமலுக்கு ஒரு நல்ல படிப்பினை கிடைக்கும்.
‘புஷ்பக்’ என்கிற பிரமாண்டமான ஹோட்டல் உரிமையாளரின் படிப்படியான வளர்ச்சி, சில புகைப்படங்களின் மூலம் சுருக்கமாக ஆனால் ஆழமாக நமக்குக் கடத்தப்பட்டு விடுகிறது. இதுவும் கமலுக்கு ஒரு படிப்பினையாக அமைகிறது. நட்சத்திர ஹோட்டலில் தூக்கம் வராமல், விடுதியின் அருகே ஒலிக்கும் நாயக் குரைப்பு சத்தத்தை டேப் ரிகார்டரில் பதிந்து எடுத்து வந்து ஒலிக்க விட்டு பிறகு கமல் நிம்மதியாக உறங்குவது குறும்பான காட்சிகளுள் ஒன்று.

உலகத்தின் மிகச் சுருக்கமான காதல் கதை
கமலுக்கும் அமலாவிற்கும் இடையில் நிகழும் சுருக்கமான காதல் கதை சோகத்துடன் நிறைவுறுவது அற்புதமான காட்சி. தான் செய்த பிழையை அமலாவிடம் கடைசியில் ஒப்புக் கொள்வார் கமல். பிரிவுணர்வு காரணமாக, தன் தொடர்பு முகவரியை ஒரு துண்டுச் சீட்டில் அமலா எழுதித் தருவதும், அது காற்றில் பறந்து எடுக்க முடியாத பள்ளத்தில் விழுந்து விடுவதும் உணர்வுபூர்வமான காட்சி. தவறான வழியில் வரும் சொகுசு மட்டுமல்ல, காதலும் கூட நிலைக்காது என்கிற கவித்துவமான நியாயம் இதில் வெளிப்படுகிறது.
இன்னொரு முக்கியமான காட்சியும் உண்டு. தன்னிடம் திடீரென்று பணம் சேர்ந்துவிட்டதால், ‘இதை வாங்கித் தரட்டுமா... அதை வாங்கித் தரட்டுமா?' என்று கடை கடையாக அமலாவைக் கூட்டிச் செல்வார் கமல். ஆனால் அமலாவோ, ஒரு பாழடைந்த கட்டடத்தின் சுவரில் வளர்ந்திருக்கும் பூவைக் காட்டுவார். மிகச் சிரமப்பட்டு ஏறி அதை எடுத்துத் தரும் கமலுக்கு, அதிலிருந்து ஒரு பூவை மட்டும் தந்து விட்டு எதிர்பாராத கணத்தில் ஒரு முத்தமும் தந்து விடைபெறுவார் அமலா. அந்த ஒற்றைப் பூவை பிரசாதம் போல் கையில் ஏந்திச் செல்வார் கமல். அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழும். அதை எடுக்கச் செல்லும் சமயத்தில் அந்தப் பூவை காலால் தெரியாமல் மிதித்து நசுக்கிவிடுவார். இப்படிக் கவிதையான காட்சிகளுக்குள் அறம் சார்ந்த செய்திகளையும் புதைத்து வைத்திருந்தார் சீனிவாசராவ்.
எல்.வைத்தியநாதனின் பின்னணி இசை
இந்தப் படத்தின் கதையை ஆரம்பத்தில் சோகச் சுவையுடன் எழுதியிருந்தார் இயக்குநர். பிறகு சார்லி சாப்ளின் பாணியில் ‘டிராஜிக் காமெடியாக’ எழுதி திரைக்கதையை மாற்றினார். கமல் வாழும் விடுதியைச் சுற்றியுள்ள தெருக்கள், தோட்டா தரணியால் ‘செட்டாக’ போடப்பட்டன. கட்டடத்தின் மேலே கமல் தங்கியிருக்கும் வீடும் படத்திற்காகப் புதிதாகக் கட்டப்பட்டது. ‘புஷ்பக்’ என்கிற பெயரில் சித்திரிக்கப்படும் ஹோட்டல், பெங்களூரில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி. அங்குப் படப்பிடிப்பை நடத்த ஹோட்டல் நிர்வாகம் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ‘இந்தப் படம் வந்த பிறகு உங்கள் ஹோட்டல் உலகம் பூராவும் பிரபலமாகும்’ என்று தயாரிப்பாளர் சொன்ன பிறகு சம்மதித்திருக்கிறார்கள்.

வசனம் இல்லாத படம் என்பதால் நடிப்பைத் தாண்டி பின்னணி இசையும் முக்கியமானது. காட்சிகளின் உணர்ச்சிகளை இசையால்தான் இட்டு நிரப்ப முடியும். குறைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு எல்.வைத்தியநாதன் தந்திருக்கும் ‘மினிமலிச’ பின்னணி இசை பல இடங்களில் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. சித்தார் கலைஞர் ஜனார்த்தனன் மிட்டாவின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்தது. கெளரிசங்கரின் ஒளிப்பதிவும் காட்சிக் கோணங்களும் அருமை. பெரும்பான்மையான காட்சிகள் ஹோட்டலில் நிகழ்வது போல் திரைக்கதை அமைந்திருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியிருந்தார்கள்.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். எந்தவொரு திரைப்படமும் காட்சிகள் வழியாகத்தான் நகர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்னமும் கூட வசனத்தின் தாக்கத்திலிருந்து இந்தியச் சினிமா பெரிதும் வெளிவரவில்லை. வசனமே இல்லாமல் இந்தத் திரைப்படத்தில் வரும் பல சுவாரஸ்யமான காட்சிகளைப் பார்க்கும் போது ‘சினிமாவிற்கு வசனம் என்பது தேவைதானா?’ என்கிற பிரமிப்பையும் கேள்வியையும் சீனிவாசராவ் ஏற்படுத்தி விடுகிறார்.

பரிசோதனை முயற்சி என்பதைத் தாண்டி, கமல், அமலா உள்ளிட்டவர்களின் அட்டகாசமான நடிப்பு, பிளாக் காமெடி நகைச்சுவைக் காட்சிகள், சீனிவாசராவின் திறமையான இயக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்தத் திரைப்படத்தை இன்றும் கூட பார்த்து ரசிக்கலாம்.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.