சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பிச்சைக்காரன்-2 - சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் ஆண்டனி

முதல் பாகத்தில் தாய்ப் பாசம் என்றால் இந்தப் படத்தில் அண்ணன்-தங்கைப் பாசம்.

ஒரு பணக்கார பிசினஸ் மேன் உடலில் பிச்சைக்காரரின் மூளையைச் சேர்த்தால் என்னாகும் என்பதே இந்த ‘பிச்சைக்காரன்-2’!

இந்தியாவின் ஏழாவது பணக்காரத் தொழில் அதிபர் விஜய் குருமூர்த்தியின் சொத்துகளை அபகரிக்க, அவரின் நிழலாக இருக்கும் மூவர் திட்டம் போடுகிறார்கள். மூளைமாற்று அறுவைசிகிச்சை நிபுணர் கிட்டியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு அதே ரத்த வகையைச் சேர்ந்த, தங்கையைத் தொலைத்துவிட்டுத் தேடும் பிச்சைக்காரர் சத்யாவின் மூளையை எடுத்து, பணக்காரர் விஜய்யின் உடலில் வைக்கிறார்கள். பிச்சைக்கார இளைஞனின் மூளை பணக்கார இளைஞனுக்குக் கிடைத்துவிட, அதன்பின் நடப்பதே படத்தின் கதை.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

தொழிலதிபர் விஜய் குருமூர்த்தியாகவும், பிச்சைக்காரர் சத்யாவாகவும் இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார். ஆரம்பக் காட்சிகளில் பணக்காரராக அவர் காட்டும் மிடுக்கிலும், நடுவில் பிச்சைக்காரராக... பாசமான அண்ணனாக பரிதாபத்திலும், பின்பாதியில் பிச்சைக்காரரின் மூளையோடு இருக்கும் பணக்கார இளைஞனின் தோரணையிலும் மூன்றுவிதமான உடல்மொழியில் வித்தியாசப்படுத்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். நாயகி காவ்யா தாப்பர் க்ளைமாக்ஸில் மட்டும் நடித்திருக்கிறார். முதல் பாதியில் வில்லத்தனத்தில் மிரட்டும் கில் தேவ், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி இரண்டாம் பாதியில் கதைப்படி ‘காணாமல்' போவதால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடுகிறது. வில்லன்கள் இல்லாத விஜய் ஆண்டனியைப்போலவே இரண்டாம் பாதித் திரைக்கதையும் திணறுகிறது. யோகிபாபுக்கும் பெரிதாய் காமெடிக்கு வேலை இல்லை. மன்சூர் அலிகான், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராம் என சீனியர்கள் அவரவர் ரோலில் வந்து போகிறார்கள்.

படம் முழுவதும் பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் பரிதாபமாகப் பல்லிளிப்பது மிகப்பெரிய மைனஸ். ஒளிப்பதிவாளர் ஓம்.நாராயணன் தன் ஏரியாவில் கவனம் செலுத்தியிருக்கலாம். எடிட்டராக விஜய் ஆண்டனி இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘கோயில் சிலையே' பாடல் மனதை ஈர்க்கிறது.

பிச்சைக்காரன்-2 - சினிமா விமர்சனம்
பிச்சைக்காரன்-2 - சினிமா விமர்சனம்

முதல் பாகத்தில் தாய்ப் பாசம் என்றால் இந்தப் படத்தில் அண்ணன்-தங்கைப் பாசம். ப்ளாஷ்பேக்கில் இரண்டு குழந்தை நட்சத்திரங்களை வைத்து சிறப்பாகக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ‘அறிமுக' இயக்குநர் விஜய் ஆண்டனி. ஆனால் விஜய் ஆண்டனி அறிவிக்கும் ‘ஆன்டி பிகிலி' சோசலிஷ திட்டமெல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல் கடப்பதால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. இதனாலேயே இறுதிவரை நாயகன் பேசும் ஏழை-பணக்கார வர்க்க பேதம், பசி, பட்டினி டயலாக்கெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறது.

மூளைமாற்று அறுவை சிகிச்சை என்ற அட்டகாசமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஓப்பனிங்கோடு தொடங்கும் படம் அண்ணன் தங்கைப் பாசம், பணக்காரக் குடும்பத்தின் வாரிசைக் கொல்லத் திட்டம்போடும் வில்லன்கள், டபுள் ஆக்‌ஷன் என அரதப்பழசாகத் தடம் மாறிவிடுவதால் இந்தப் பிச்சைக்காரனை ரசிக்க முடியவில்லை.