Published:Updated:

பொய்க்கால் குதிரை: கிரேஸி மோகனின் முதல் படம்; கமலின் கேமியோ, பாலசந்தரின் சிறப்பான இயக்கம்!

பொய்க்கால் குதிரை

இந்தப் படத்தில் கமல்ஹாசனும் நடித்திருக்கிறார். ஆனால் சிறப்புத் தோற்றம். கண்ணாடி பிரேமில் உறைந்திருக்கும் புகைப்படம் பேசுவது போலப் பல காட்சிகளில் வந்து சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்.

Published:Updated:

பொய்க்கால் குதிரை: கிரேஸி மோகனின் முதல் படம்; கமலின் கேமியோ, பாலசந்தரின் சிறப்பான இயக்கம்!

இந்தப் படத்தில் கமல்ஹாசனும் நடித்திருக்கிறார். ஆனால் சிறப்புத் தோற்றம். கண்ணாடி பிரேமில் உறைந்திருக்கும் புகைப்படம் பேசுவது போலப் பல காட்சிகளில் வந்து சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்.

பொய்க்கால் குதிரை
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'பொய்க்கால் குதிரை’.

கிரேஸி மோகனின் சரவெடி காமெடி வசன பாணியைப் பற்றி நமக்குத் தெரியும். ஒரு வசனத்திற்குள் ஒன்பது காமெடிகளை ஒளித்து வைப்பார். மறுமுறை பார்க்கும் போதுதான் அவற்றைக் கவனித்து ஆச்சரியப்படுவோம். ‘கிரேஸியின் வசனத்தில் பிடித்த படம் எது?’ என்று 2கே கிட்ஸை கேட்டால், சிலர் ‘வசூல்ராஜா’ என்பார்கள். இன்னமும் சிலர் சற்று முன்னே நகர்ந்து ‘அவ்வை சண்முகி’, 'பஞ்சதந்திரம்' படங்களைச் சொல்லக்கூடும். ஆனால் 1983-ம் ஆண்டே கிரேஸி மோகனின் சினிமாப் பிரவேசம் நிகழ்ந்து விட்டது. ஆம், அவருடைய வெற்றிகரமான நாடகமான ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ என்கிற படைப்பைத் திரைப்படமாக இயக்கினார் கே.பாலசந்தர்.

கிரேஸி மோகன், கமல்ஹாசன், கே.பாலசந்தர்
கிரேஸி மோகன், கமல்ஹாசன், கே.பாலசந்தர்

தீவிரமான உள்ளடக்கத்தைக் கொண்ட படங்களை எடுக்கும் ‘சீரியஸான’ இயக்குநர் என்கிற முகமும் பாலசந்தருக்கு உண்டு. அதே சமயத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் பல முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களையும் இயக்கியவர். சில படங்களில் நகைச்சுவையுடன் சமூகக் கருத்துகளும் கலந்திருக்கும். சில திரைப்படங்கள் வெறுமனே சிரித்து மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் ‘பொய்க்கால் குதிரை’.

கவிஞர் வாலி நடித்த முதல் திரைப்படம்

புதிய அறிமுகங்களைத் திரைக்குக் கொண்டு வருவதில் பாலசந்தருக்கு நிகரில்லை. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் பல ‘அறிமுகங்கள்’ நிகழ்ந்துள்ளன. பாலசந்தரின் பல தமிழ்த் திரைப்படங்கள், கன்னடத்தில் வெற்றிகரமாக ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கன்னடத் திரைப்பட உலகிலிருந்தும் சில திறமையான நடிகர்களை அவர் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்ததுண்டு. ‘ராமகிருஷ்ணா’ தமிழில் ஹீரோவாக அறிமுகமானது, இந்தத் திரைப்படத்தில்தான்.

அழகான சுருள்முடி, கட்டுமஸ்தான உடல், கேமிராவிற்கு ஏற்ற நிறம், துறுதுறு நடிப்பு என்று பல கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தமிழில் ஏனோ ராமகிருஷ்ணா அதிகம் சோபிக்கவில்லை. ஆனால் கன்னடத்தில் புகழ்பெற்ற ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘பொய்க்கால் குதிரை’யில் இவர் அடித்துள்ள லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எந்தவொரு நகைச்சுவை நாயகனுக்கும் குறைவில்லாத அளவுக்குத் திருப்தியான நடிப்பைத் தந்துள்ளார்.

பொய்க்கால் குதிரை படத்தில் கவிஞர் வாலி, சார்லி
பொய்க்கால் குதிரை படத்தில் கவிஞர் வாலி, சார்லி

அது போல் இந்தத் திரைப்படத்துக்குள் வந்த இன்னொரு அறிமுகம், கவிஞர் வாலி. ஆம், ஏராளமான பாடல்களை எழுதிப் புகழ் பெற்றிருந்த கவிஞர் ரங்கராஜனுக்குள் (வாலியின் இயற்பெயர்) ஒளிந்திருந்த நடிப்புத் திறமையை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்தார் பாலசந்தர். ஹீரோவுக்கு இணையான வேடம். படம் முழுவதும் ஜமாய்த்துள்ளார். ‘ஹேராம்’ உள்ளிட்டு வாலி தமிழில் நடித்தது, மொத்தம் ஐந்தே திரைப்படங்கள்தான். ‘பொய்க்கால் குதிரை’யும் அதில் ஒன்று.

வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்கிற இயற்பெயரைக் கொண்ட நடிகர் ‘சார்லி’ கண்டுபிடிக்கப்பட்டதும் இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான். வாலிக்கு இணையாகப் படம் முழுவதும் வரும் கேரக்டர்.
இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. கமல்ஹாசனும் நடித்திருக்கிறார். ஆனால் சிறப்புத் தோற்றம். கண்ணாடி பிரேமில் உறைந்திருக்கும் புகைப்படம் பேசுவது போலப் பல காட்சிகளில் வந்து சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்.

மெட்ராஸ் பாஷையில் பேசும் ரவீந்தர், மலையாளத்தில் சம்சாரிக்கும் ராதாரவி, ஆபாச போஸ்டர்களில் மை தடவும் புரட்சிப் பெண் கதாநாயகி விஜி என்று பல சுவாரஸ்யமான கேரக்டர்கள் உண்டு.

சம்பந்தத்துக்குப் பிடித்திருக்கும் பந்தயப் பைத்தியம்

சம்பந்தம் என்பவருக்குப் பந்தயம் கட்டுவதில் தீராத மோகம். யாரைச் சந்தித்தாலும் அடுத்த சில நிமிடங்களில் ‘என்ன பெட்டு?’ என்று கேட்கும் அளவுக்குப் பந்தயப் பைத்தியம். பேருந்தில் ஓர் இளைஞனுடன் சம்பந்தத்துக்கு உரசல் ஏற்படுகிறது. அந்தச் சண்டை சலூனிலும் தொடர்கிறது. அவரைப் பழிவாங்க எண்ணும் இளைஞன் “உங்க பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு காட்டுகிறேன், சவாலா?” என்று கேட்கிறான். பந்தயம் என்றால் ஓட்டப் பந்தயம் ஓடுவதற்குக் கூட தயாராக இருக்கும் சம்பந்தம், இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா? இது தனது மகளின் வாழ்க்கை என்பதைக் கூட அவர் யோசிப்பதில்லை. பந்தய வெறியில் “என் பொண்ணுக்கு காதல்ன்னாலே சுத்தமா பிடிக்காது. நிச்சயம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. பந்தயம்டா” என்று சவாலை ஒப்புக் கொள்கிறார். எந்தவொரு சூழலிலும் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்கிற ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்டுடன்’ இந்தப் பந்தயம் ஆரம்பிக்கிறது.

பொய்க்கால் குதிரை படத்தில் கவிஞர் வாலி
பொய்க்கால் குதிரை படத்தில் கவிஞர் வாலி
பிறகு நடக்கிறது அந்த ஜாலியான கலாட்டா. சம்பந்தத்தின் பெண்ணை சம்பந்தம் செய்ய இளைஞன் செய்யும் முயற்சிகளும், அதில் நிகழும் நகைச்சுவைச் சம்பவங்களும்தான் மீதமுள்ள படம். இந்தப் பந்தயத்தில் யார் வென்றது... பெரியவரா, இளைஞனா? இளைஞன்தான் ஜெயிப்பான் என்று நான் சொல்கிறேன். என்ன பெட்டு?!

சம்பந்தமாகக் கவிஞர் வாலி. ஜிப்பா, அங்கவஸ்திரம், சிலுப்பிய முடி, வெற்றிலை, சீவல் போட்டுத் துப்புவதால் எப்போதும் மோவாயைத் தூக்கியபடியே ‘கொழகொழ’வென்று பேசும் தோரணை, ஊரெல்லாம் அலப்பறையைத் தந்தாலும் மனைவிக்கு நடுங்கும் கணவன் என்று தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் பக்காவாகப் பொருந்தியுள்ளார். தனது சகாவான சார்லியை அவ்வப்போது பந்தயத்தில் தோற்கடித்து ‘பாதி மீசை’யை வலுக்கட்டாயமாக எடுக்க வைத்து வெற்றிச் சிரிப்பு சிரிக்கும் வாலி, இளைஞனிடம் சறுக்கும் இடங்கள் எல்லாம் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம். இவர் ஏன் நிறைய நடிக்கவில்லை என்கிற ஏக்கத்தை எழுப்பியுள்ளார். அப்படியொரு இயல்பான நடிப்பு.

‘இந்து’ என்கிற பெயருள்ள இளைஞனாக ராமகிருஷ்ணா. சுருள்முடியும் கொழு கொழு கன்னமுமாக வளர்ந்த குழந்தை போன்ற தோற்றத்தில் இருக்கும் ராமகிருஷ்ணா, இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அல்லது பாலசந்தரால் பொருத்தி வைக்கப்பட்டுள்ளார். முகத்தில் எக்ஸ்பிரஷனே வராத பல நடிகர்களோடு ஒப்பிடும் போது, இவரது அநாயசமான நடிப்பு ‘இவர் தமிழில் நிறைய நடித்திருக்கலாமே?’ என்று எண்ண வைக்கிறது. ரவீந்தர், ராதாரவி என்று தனது சகாக்களோடு சேர்ந்து கொண்டு, சார்லி தரும் ரகசியத் தகவல்களோடு இவர் போடும் திட்டங்களும் அவை தொடர்பான காட்சிகளும் சிரிப்பை வரவழைப்பவை.

பரமசிவமாக சார்லி. அதுவரை இரண்டு திரைப்படங்களில் சிறிய பாத்திரத்தில் வந்தவருக்குப் பெரிய பிரேக். படம் முழுவதும் வரும் கேரக்டர். சம்பந்தத்திடம் பந்தயத்தில் தோற்றுவிட்டு ‘பாதி மீசை’ அவமானத்துடன் மறைந்து வாழ்வார். வாலியைப் பழிவாங்குவதற்காக இளைஞனுக்கு ரகசியமாக உதவுவார். மீசையை எடுப்பதற்காக சார்லி தயங்கும் காட்சிகள், ‘தில்லு முல்லு’ படத்தை மெலிதாக ஞாபகப்படுத்துகின்றன.

பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை

‘மெட்ராஸ் பாஷை’யில் பூந்து விளையாடியிருக்கும் ரவீந்தர்

‘கிளப் டான்ஸ்’ ஆடுபவராக அறியப்பட்ட ரவீந்தர் என்னும் நடிகருக்குள் இத்தனை திறமை இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்த படம் இது. சினிமாவின் ‘மெட்ராஸ் தமிழில்’ சும்மா பூந்து விளையாடியிருக்கிறார். ‘குரு... குரு...’ என்று அழைத்து, தனது ஆதர்ச நடிகரான கமல்ஹாசனிடம், புகைப்படத்தின் வழியாக இவர் உரையாடுவதும், படத்தில் உறைந்திருக்கும் கமல், அவ்வப்போது குறும்பான பதில்கள் அளிப்பதும் சுவாரஸ்யமான காட்சிகள். டாக்டராகவும் சாமியாராகவும் மாறுவேடங்களில் வந்து காமெடி செய்யவும் முயன்றிருக்கிறார். மலையாளமும் தமிழும் கலந்து பேசி, இளைஞனின் காதலுக்கு உதவும் நடுத்தர வயது ஆசாமியாக ‘ராதாரவி’ வரும் காட்சிகளும் சுவாரஸ்யமானவை.

‘பக்கத்து வீட்டுப் பெண்’ போன்ற இயல்பான தோற்றத்தைக் கொண்டவர் நடிகை விஜி. ‘உடல் ஊனமுற்ற இளைஞனைத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று முற்போக்கு எண்ணத்துடன் உலா வரும் இவர், இந்துவை முதலில் கண்டு கொள்ளாமல் இருப்பதும், கண்பார்வையற்றவர் என்பதை அறிந்ததும் அனுதாபம் கொண்டு காதலில் விழுவதும் எனத் தனது இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

கண் பார்வையிலேயே தன் கணவரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருமதி.வாலியின் பாத்திரமும் (ஜெய விஜயா) சுவாரஸ்யமானது. ‘ஜிஞ்சனக்கு ஜனக்கு... நான் சொல்லித் தாரேன் கணக்கு’ என்பது போன்ற வரிகளை ‘கவிதை’ என்கிற பெயரில் எழுதி, தனக்குத் தானே புகழ்ந்து கொள்பவர் இவரது அண்ணன். ‘அறிவு கெட்ட மச்சானே’ என்று வாலியை இவர் அவ்வப்போது அழைப்பது குறும்பான காட்சி. (இந்தப் பாத்திரத்தின் மூலம் வாலி எழுதும் சில சினிமாப்பாடல்களும் பகடி செய்யப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்.)

மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் நாடகப் பாணியிலேயே நகர்கின்றன. என்றாலும் பல அவுட்டோர் காட்சிகளைத் திறமையாக இணைத்து ‘திரைப்பட’ வாசனையைக் கொண்டு வந்திருக்கிறார் பாலசந்தர். இவருடைய படங்களில் வரும் பாத்திரங்கள், பாத்திரம் கழுவுவது போல ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டேதான் வசனத்தையும் பேச வேண்டும். நடிகர்களுக்குச் சிரமம்தான். ஆனால் அதுதான் பாலசந்தரின் ஸ்டைல். இதனால் காட்சிகள் நாடகத்தனமாக அல்லாமல் இயல்பாக இருக்கும். ஆனால் இந்தப் பாணியே ஓவர் டோஸாக ஆகி விடும் ஆபத்தும் நிகழ்வதுண்டு.

பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை

‘தில்லுமுல்லு’வின் இன்னொரு வடிவம்

கிரேஸி மோகனின் கூர்மையான நகைச்சுவை வசனங்கள் பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கின்றன. சற்று தவறவிட்டால் ஒரு ஜோக்கைத் தவற விடும் ஆபத்தும் உண்டு. அப்படியொரு சரவெடி நகைச்சுவை.

தன்னைத் தாக்க வரும் மோகனை, ‘இந்து ஒழிக’ என்று சுவரில் எழுத வைத்து கோயில் பக்தர்களிடம் அடிவாங்கித் தரும் காட்சியில் உள்ள புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது. (இதற்காகவே இந்தப் பாத்திரத்திற்கு ‘இந்து’ என்று பெயர் சூட்டினார்கள் போலிருக்கிறது). நாயகியின் பாத்திரப் பெயர் ‘ஜானகி’. இந்தப் பெயர் இல்லாமல் கிரேஸி மோகனால் பேனாவை எடுக்கவே முடியாது. திரைப்படங்களில் துணைப் பாத்திரமாக நடிக்கும் ‘கவிதாலயா’ கிருஷ்ணன், ‘சொல்லு வாத்யாரே... கீச்சிடலாம்’ என்று வீட்டின் உரிமையாளர் வேடத்தில் வந்து கலாட்டா செய்யும் காட்சிகள் சுவாரஸ்யம்.

படத்தின் டைட்டில் கார்டில் கார்ட்டூன் உருவங்களின் பின்னணியில்தான் நடிகர்களின் பெயர்கள் ஓடுகின்றன. ‘வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும், சிரிச்சா என்ன செலவா ஆகும்?’ என்கிற முதல் பாடலே படத்தின் தன்மையைப் பற்றி பார்வையாளர்களுக்குப் புரிய வைத்து விடுகிறது. போதாக்குறைக்கு ‘கவலைகளை மறந்து சிரிப்பதற்காக’ என்று டைட்டிலில் எழுதி ‘இது ஜாலியான பொழுதுபோக்குப் படம்’ என்று பதிவு செய்து விடுவார் இயக்குநர்.

‘தில்லு முல்லு’ திரைப்படத்தில் ஒரு மீசையை வைத்துக் கொண்டு, தன் அடையாளத்தை மறைத்து தேங்காய் ஸ்ரீனிவாசனிடம் விளையாடுவார் ரஜினிகாந்த். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ஹீரோ என்ன செய்கிறான் என்று வாலிக்குத் தெரியும். ஆனால் வெளியில் சொல்ல முடியாது. அப்படியொரு முரணை வைத்துக் கொண்டு படம் ஜாலியாக நகர்கிறது. வாலியின் வரிகளில், எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் சுமாராக அமைந்திருக்கின்றன.

பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை
'பொய்க்கால் குதிரை’ - பாலசந்தரின் டைரக்ஷன், கிரேஸி மோகனின் வசனம், வாலி, ராமகிருஷ்ணாவின் அட்டகாசமான நடிப்பு போன்ற காரணங்களுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் பொழுதுபோக்கு உத்தரவாதம்!