கட்டுரைகள்
Published:Updated:

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்' மூலக்கதையில் சில மாற்றங்களைச் செய்து முதல்பாகத்தில் முன்வைக்கப்பட்ட முடிச்சுகளை இரண்டாம் பாகத்தில் அவிழ்த்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்

வானில் தோன்றிய தூமகேது, சோழர் குல வேந்தர்களில் யாருக்கான ஆபத்தை உணர்த்துகிறது என்ற கேள்வி, மூவருக்குமே ஆபத்துதான் என்பதாக உருமாறிவிட, சதித் திட்டங்களைக் கடந்து சோழர் குலம் தங்களின் மணிமுடியைக் காத்ததா என்பதே ‘பொன்னியின் செல்வன் 2.’

முதல் பாகத்தில் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக நம்பப்பட்ட அருண்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் தப்பித்து மீள்கிறார்கள். நாகப்பட்டினம் புத்த விகாரத்தில் சிகிச்சை பெறும் அருண்மொழி வர்மனைக் கொல்ல முயலும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள், சுந்தர சோழரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்குகிறார்கள். இன்னொருபுறம் ஆதித்த கரிகாலனைக் கொல்லும் எண்ணத்துடன் அவனைக் கடம்பூர் மாளிகைக்குத் தந்திரமாக வரவழைக்கிறாள் நந்தினி. அரசனாகும் ஆசையுடன் சிவபக்தர்களான காளாமுகர்கள் உதவியுடன் சோழரின் எதிரிப்படைகளான ராஷ்டிரக்கூடர்களுடன் கைகோக்கிறார் மதுராந்தகச் சோழர். ஆதித்த கரிகாலனுக்கு என்னவானது, நந்தினி உண்மையில் யார், பொன்னியின் செல்வன் எடுக்கும் இறுதி முடிவு என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை சொல்லி நிறைகிறது படம்.

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

நாவலில் எப்படியோ, படத்தின் அடிநாதமாக இருப்பது நந்தினி - ஆதித்த கரிகாலனின் காதலே என்பதை நிறுவ, முதல் 15 நிமிடங்களில் அவர்களின் சிறுவயதுக் காதல் கதையைக் கவிதையாகச் சொல்கிறார் இயக்குநர் மணிரத்னம். இடைவிடாது ஒலிக்கும் இசை, அற்புதமான ஒளிப்பதிவு, இளம்வயது ஆதித்த கரிகாலனாக வரும் சந்தோஷ், நந்தினியாக வரும் சாரா அர்ஜுன் ஆகியோரின் நடிப்பு ஆகியவை ஒரு பலமான தொடக்கமாக அமைகிறது.

தம்பி அருண்மொழி கடலில் மூழ்கிய செய்தி கேட்டுக் கலங்கும் கண்கள், காதலின் பரிதவிப்பு, நம்பிக்கையையும் சந்தேகத்தையும் நந்தினியின்மீது அருகருகே வைத்து அடையும் அலைக்கழிப்பு என்று ஆதித்த கரிகாலனாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். அலைபாயும் குதிரையில் அமர்ந்துகொண்டே கடம்பூர் மாளிகைக்குள் ‘பாட்டன்' பெரிய பழுவேட்டரையரைக் கிண்டல் செய்யும் குறும்பு, அதே சமயத்தில் நந்தினியை நீண்ட நாள்களுக்குப் பின் காணும் தவிப்பு என இரண்டையும் ஒரே முகத்தில் ஒரே நொடியில் வெளிப்படுத்துவது விக்ரமுக்கு மட்டுமே சாத்தியம்.

விக்ரமுக்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்தும் சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார் ‘நந்தினி’ ஐஸ்வர்யா ராய். வந்தியத்தேவன் முதல் பல்லவன் பார்த்திபேந்திரன் வரை தன் வன்மத்தைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம், தன் பேரழகு வியந்தோதப்படும்போதெல்லாம் முகத்தில் ஒளிவீசும் பெருமிதம், ஆதித்த கரிகாலனைச் சந்திக்கும்போது தன் எல்லா சூது ஆயுதங்களையும் கைவிட்டு காதலின் முனையில் நிராயுதபாணியாக நிற்கும் தவிப்பு ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆதித்த கரிகாலனைத் தன் அறையில் சந்திக்கும் காட்சியில் இருவரும் வெளிப்படுத்தும் நடிப்பும், பேசும் வசனங்களும் அதற்கேற்ற உணர்வைக் கடத்தும் கேமரா கோணங்களும், அதற்கேற்ற படத்தொகுப்பும் திரைமொழியின் உச்சம்.

சென்ற பாகத்தில் அசத்திய வந்தியத்தேவனுக்கு இரண்டாம் பாகத்தில் பெரிய வேலையில்லை. வந்தியத்தேவனுக்கு இருக்கும் வெளிகூட இந்த பாகத்தில் குந்தவைக்கு இல்லை. ஆனால் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காதல் காட்சியில், தான் இளமைத்துள்ளல் மிக்க இயக்குநர் என்பதை நிரூபிக்கிறார் மணிரத்னம்.

அருண்மொழியாக ஜெயம் ரவிக்கு முதல் பாகத்தைவிட இதில் கூடுதல் காட்சிகள். காய்ச்சலிலிருந்து மீண்டு வந்து, புத்த விகாரத்தில் நடக்கும் சதியை அவர் முறியடிக்கும் இடம், மாஸ் ஹீரோவுக்கான பில்டப் காட்சி. முதல் பாகத்தில் இருந்த இடம் தெரியாமல் இருந்த ‘பல்லவ பார்த்திபன்' விக்ரம்பிரபுக்கு இந்த பாகத்தில் சொல்லிக்கொள்ளும் படியான வேடம். மந்தாகினியை நினைவுகூரும் இடத்திலும் மந்தாகினியைக் காப்பாற்ற முடியாமல் கலங்கித் தவிக்கும் இடத்திலும் மட்டும் தன் முதிர்ச்சியான நடிப்பைப் பதியவைக்கும் வாய்ப்பு சுந்தர சோழர் பிரகாஷ்ராஜுக்கு. பெரிய பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், மதுராந்தகன் ஆகியோரின் மனமாற்றங்களுக்குக் காரணங்கள் இருந்தாலும், அதற்கு ஏற்ற அழுத்தமான காட்சிகள் இல்லை. சிறிய பழுவேட்டரையர், பெரிய வேளாளர், மலையமான், பூங்குழலி, சேந்தன் அமுதன் போன்ற பாத்திரங்கள் ஆங்காங்கே தங்கள் இருப்பைப் பதிவுசெய்து காணாமல் போகிறார்கள்.

படத்தின் முதன்மை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். காதல், வீரம், சதி, சோகம் என எல்லா உணர்வுகளையும் நதிமீது மிதந்து செல்லும் இலைபோல் இசையால் கடத்தியிருக்கிறார். ‘வீரா ராஜ வீர...', ‘அகநக', ‘சின்னஞ்சிறு நிலவே' போன்ற பாடல்கள் மிகக்குறைவான நேரத்தில் ஒலித்தாலும் நம் நெஞ்சம் நிறைக்கின்றன.

புத்த விகாரம், சந்தை வீதிகள், சதுப்புநிலக்காடுகளில் உள்ள ஓடைகள், காட்டுப் பகுதிகள் எனப் பலதரப்பட்ட இடங்களைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குநர் தோட்டா தரணி, உடன் நின்ற ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி, ஒப்பனைக் கலைஞர் விக்ரம் கெய்க்வாட் என அனைத்துக் கலைஞர்களும் இணைந்து உழைத்திருக்கிறார்கள்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்' மூலக்கதையில் சில மாற்றங்களைச் செய்து முதல்பாகத்தில் முன்வைக்கப்பட்ட முடிச்சுகளை இரண்டாம் பாகத்தில் அவிழ்த்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். மந்தாகினியின் ப்ளாஷ்பேக், மதுராந்தகன் தொடர்பான கடைசி நிமிடத் திருப்பத்தைத் தவிர்த்தது, க்ளைமாக்ஸ் போர் எனப் படத்தில் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது மணிரத்னம், குமரவேல், ஜெயமோகன் அடங்கிய திரைக்கதைக் குழு.

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

அதே சமயம், இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டு வந்தவர்கள் நாவல் சம்பவங்களை லாஜிக்குடன் காட்சிப்படுத்துவதற்கும் சற்றே மெனக்கெட்டிருக்கலாம். வந்தியத்தேவன்கூட அவ்வப்போது மாட்டிக்கொள்கிறான்; ஆனால் ஆழ்வார்க்கடியான் நம்பி யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் நினைத்த நேரத்திலெல்லாம் ஈழம், நாகை, தஞ்சை, கடம்பூர் என்று எல்லா இடங்களிலும் இருப்பது எப்படி, ‘போர்ப்பயிற்சி இல்லாததால் மதுராந்தகச்சோழருக்கு முடி சூட்ட முடியாது' என்று முதல்பாகத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக அவர் போர்க்களத்தின் முன்னணியில் வந்து நிற்பது எப்படி, நிலவறை துவாரத்தின் வழியே பார்த்தால் பேரரசரின் படுக்கையறை வரை தெரிவது, சுந்தர சோழர் கதறியபோதும் எட்டிக்கூடப் பார்க்காத அரண்மனைக்காவலர்கள் என்று சோழர் அரண்மனையின் பாதுகாப்பு இவ்வளவு பலவீனமானதா, சோழர் காலத்தில் உருவாகாத ‘பாரத தேசம்' குறித்து இறுதிக்காட்சியில் அருண்மொழி வர்மன் பேசுவது எப்படி? - இப்படி ஏராளமான கேள்விகள். க்ளைமாக்ஸ் போர்க் காட்சியும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது.

தொழில்நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் காட்டிய முனைப்பை, துண்டுதுண்டான திரைக்கதை, லாஜிக் மீறல்கள், ஆதித்த கரிகாலன், நந்தினியைத் தவிர மற்ற பாத்திரங்களின் உருவாக்கம் முழுமையடையாதது போன்றவற்றைச் சரிசெய்வதிலும் காட்டியிருந்தால் நாமும் பொன்னியின் செல்வனுக்கு இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் ‘வெற்றிவேல் வீரவேல்' முழக்கம் எழுப்பியிருக்கலாம்.