சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நானும் மருமகளும் கூட்டுக்களவாணிகள்!”

பூர்ணிமா பாக்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பூர்ணிமா பாக்யராஜ்

பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க வந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பின் ‘ராட்சசி’ படத்தில் நடித்தவருடன் பேசினேன்.

“ரீ-என்ட்ரி எப்படியிருக்கு?”

“கல்யாணத்துக்குப் பிறகும் எனக்குப் பல வாய்ப்புகள் வந்தது. குடும்பப் பொறுப்புகளுக்காக நடிக்காம ஒதுங்கியே இருந்தேன். ‘கில்லி’ படத்துல விஜய்க்கு அம்மாவா நடிக்கக் கேட்டப்போ தவிர்த்தேன். அப்போ சாந்தனுவுக்கு என்மேல கோபம். ‘ஜில்லா’வுல நடிக்க வாய்ப்பு வந்தப்போ, ‘அம்மா, என்ன ரோலா இருந்தாலும் பரவாயில்ல, நீ இதுல நடிச்சே ஆகணும்’னு சொல்லிட்டான்.

“நானும்  மருமகளும்  கூட்டுக்களவாணிகள்!”

மோகன்லாலுக்கு ஜோடின்னு சொன்னதும், ‘கதையே சொல்ல வேணாம் சார், நான் பண்றேன்’னு இயக்குநர்கிட்ட சொல்லிட்டேன். ஏன்னா, என் முதல்பட ஹீரோ மோகன்லால்கூட திரும்ப முப்பது வருடத்துக்குப் பிறகு சேர்ந்து நடிக்கப்போறதால, எனக்கு அவ்வளவு சந்தோஷம். சமீபத்துல ஜோதிகாகூட நான் நடிச்சிருக்கிற ‘ராட்சசி’க்கு நல்ல ரெஸ்பான்ஸ். கடந்த ஒரு வருடமா சீரியல்லேயும் நடிக்கிறேன். ஆனா, இந்த ரீ-என்ட்ரியைப் பத்து வருடத்துக்கு முன்னாடியே கொடுத்திருக்கலாமோன்னு வருத்தம் உண்டு.”

“தென்னிந்தியாவுல ரஜினி, சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால்னு எல்லா முன்னணி ஹீரோக்களோடும் நடிச்சுட்டீங்க. கமல்கூட நடிக்கிற வாய்ப்பு மட்டும் எப்படி மிஸ் ஆச்சு?”

“நான் ஹீரோயினா அறிமுகமாகவேண்டிய படமே கமல் சார் படம்தான். நான் பிறந்து வளர்ந்தது மும்பை. 70-களின் இறுதியில அங்கே ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா படங்கள்ல சின்னச் சின்ன ரோல் பண்ணிக்கிட்டிருந்தேன். அந்தக் காலகட்டத்துல இங்கே கே.பி சார், கமல் நடிப்புல நடனத்தை மையமா வெச்சு ஒரு படம் பண்றதா முடிவு பண்ணியிருக்கார். அந்தப் படத்துக்காக கே.பி சார் என்னைச் சென்னைக்கு வரவெச்சு லுக் டெஸ்ட், டான்ஸ் டெஸ்ட் எல்லாம் பண்ணிப் பார்த்துட்டு, ‘நீதான்மா பண்ற... உடனே படத்தை ஆரம்பிக்கிறோம்’னு சொல்லி அக்ரிமென்ட்கூட போட்டார். ஆனா, அந்த நேரத்துல எதிர்பாராதவிதமா, கமலுக்கு ஒரு விபத்து. அதனால, அந்தப் படத்தை ஆரம்பிக்கிறது தள்ளிப்போய்க்கிட்டே இருந்தது. இந்த நேரத்துல மலையாளத்துல இருந்து ‘மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள்’ வாய்ப்பு வந்தது. கே.பி சார்கிட்ட கேட்டேன், அரை மனசாதான் ஓகே சொன்னார். எனக்கு மட்டுமில்ல, மோகன்லால், டைரக்டர் ஃபாசிலுக்கும் அதுதான் முதல் படம். அந்தப் படம் பார்த்துட்டு தமிழ்ல ‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’ன்னு என் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. நடிக்க வந்த நாலு வருடத்திலேயே 60-க்கும் மேற்பட்ட படங்கள்ல ஹீரோயினா நடிச்சிட்டேன். ஆனா, கமல் சார், கே.பி சார்கூட வொர்க் பண்ண முடியாமப் போச்சு.”

“ ‘நீங்கள் கேட்டவை’, ‘விதி’ இரண்டு படங்களும் வெளிவந்து 35 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எப்படி உணர்கிறீர்கள்?”

“ ‘நீங்கள் கேட்டவை’ படத்துக்கு முன்னாடியே மலையாளத்துல நான் பாலு மகேந்திரா படங்கள்ல நடிச்சிருக்கேன். அதனால, எனக்கும், அவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. ஒருநாள் அவர், ‘இவங்க எங்கிட்ட வேற சில விஷயங்களையெல்லாம் எதிர்பார்க்கிறாங்க பூர்ணிமா. அவங்க என்னெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்கிறாங்களோ, அது எல்லாத்தையும் இந்தப் படத்துல தரப்போறேன். டைட்டிலே ‘நீங்கள் கேட்டவை’ன்னு வைக்கப்போறேன். இதுல ஒரு அம்மா கேரக்டர் இருக்கு. பண்றியா’ன்னு கேட்டார். அவர்மேல இருக்கிற நம்பிக்கையில, என்னோட சின்ன வயசுலேயே ரெண்டு பசங்களுக்கு அம்மாவா படத்துல நடிச்சேன். இந்தப் படத்தை அவர் கமர்ஷியல் ஃபார்முலாவுல எடுத்திருந்தாலும், அவரோட உழைப்புலேயும் நேர்த்தியிலேயும் எந்தக் குறையும் வைக்கல. அர்ச்சனா இந்தப் படம் மூலமாதான் அறிமுகமானாங்க. படம் ரிலீஸாகி பெரிய வெற்றியடைஞ்சது.

‘விதி’ என் கரியர்ல ரொம்ப முக்கியமான படம். ‘நியாயம் காவாலி’ங்கிற தெலுங்குப் படத்தோட ரீமேக். தெலுங்குல ராதிகா நடிச்சிருந்த ரோல்ல நான் தமிழ்ல நடிச்சிருந்தேன். ரீமேக்கா இருந்தாலும், ஆரூர் தாஸோட எழுத்துல வசனங்கள் ஒவ்வொண்ணும் அவ்வளவு தனித்துவமா இருக்கும். இன்னைக்கும் அந்தப் படத்தோட வசனங்களை ரசிகர்கள் ஞாபகத்துல வெச்சிருக்காங்க. இந்தப் படத்துல என் வீட்டுக்காரர் பாக்யராஜும் ஒரு கேமியோ ரோல்ல நடிச்சிருப்பார். அவர் பேசி நடிச்ச வசனங்களை அவரே எழுதிக்கிட்டார். அப்போதான் எங்க ரெண்டுபேருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இந்தப் படம் ரிலீஸான அடுத்த பத்து நாள்ல எங்க கல்யாணம் நடந்தது.”

“நடிகர் சங்கத் தலைமையில் ஏன் மாற்றம் வேணும்னு நினைக்கிறீங்க?”

“விஷால் அணி தலைமைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆச்சு. ஆரம்பத்துல கொஞ்சம் நல்லது பண்ணுனாங்க. ஆனா, அதுக்கப்புறம் அவங்களோட செயல்பாடுகள் திருப்தியா இல்லை. சங்கக் கட்டட வேலைகளையெல்லாம் இன்னும் முடிக்காம இருக்காங்க. விஷால் இந்த ஒரு பொறுப்பை மட்டும் ஒழுங்கா கவனிச்சிருக்கலாம். எங்களை மாதிரியே ஆரம்பத்துல அவரை ஆதரிச்ச ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, சங்கீதா இப்படிப் பலரும் அவங்க ஆதரவு நிலைப்பாட்டை மாத்திக்கிட்டாங்க. நாங்கெல்லாம் ஒரு அணியா சேர்ந்து என் வீட்டுக்காரரைத் தலைவரா நிறுத்தினோம். தேர்தல் நடந்து முடிஞ்சிருக்கு. ஜெயிச்சிடுவோம்னு நம்புறோம். ஜெயிச்சதும் சங்கக் கட்டடத்தை சீக்கிரமா கட்டி முடிக்கிறதுக்கான வேலைகளைத் தொடங்கணும். நலிந்த கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்யணும்.”

“ ‘பாய்ஸ்’, ‘காதல்’, ‘சுப்ரமணியபுரம்’, `களவாணி’ இப்படி நிறைய நல்ல வாய்ப்புகள் சாந்தனுவைத் தேடி வந்தப்போ, ஏன் தவிர்த்துட்டீங்க. அந்த வாய்ப்புகளை இழந்த வருத்தம் இருக்கா?”

“நிச்சயமா இருக்கு. வெளியில பாக்யராஜ் சார்தான் அதைச் சொன்னார், இதைச் சொன்னார்னு பேசிக்கிறாங்க. ஆனா, உண்மையான காரணம் வேற. ‘காதல்’ வாய்ப்பு வந்தப்போ, சாந்தனு ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டி ருந்தான். அந்தக் கதை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவன் படிப்பு கெட்டுடக் கூடாதுன்னு நினைச்சோம். தவிர, அப்போ ஒரு ஹீரோவுக்கான தோற்றமும் அவனுக்கு இல்லை. அதனால, ‘காதல்’ பட வாய்ப்பைத் தவிர்க்க வேண்டியதாகிடுச்சு. ‘பாய்ஸ்’ பட வாய்ப்பு வந்தப்போ, அவன் இன்னும் சின்னப் பையன். ‘சுப்ரமணியபுரம்’ வாய்ப்பு வந்தப்போ, அவன் ‘சக்கரக்கட்டி’ படத்துல நடிச்சுக்கிட்டிருந்தான். பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்சு, ரஹ்மானோட பாடல்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டி ருந்தப்போ வந்த வாய்ப்பு அது. நாங்க உடனே ஷூட் பண்ணி, உடனே ரிலீஸ் பண்ணப் போறோம்னு சொன்னாங்க. கதை எங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, ஏற்கெனவே தாணு சார்கிட்ட போட்ட ஒப்பந்தத்தை மீற முடியாததால, ‘சுப்ரமணியபுரம்’ல நடிக்கல. ‘களவாணி’ வாய்ப்பைப் பொறுத்தவரைக்கும் நாங்க எதுவும் சொல்லல, ‘திரும்ப வர்றேன்’னு சொல்லிட்டுத்தான் போனாங்க; வரல. இந்த வாய்ப்புகளெல்லாம் மிஸ் ஆனதுல எங்களுக்கும் வருத்தம்தான்.”

‘விதி’ படத்துல நீங்க நடிச்ச ராதா கேரக்டர் என்னென்ன பிரச்னைகளைச் சந்திச்சதோ, அதே பிரச்னைகள் நிஜத்துல இன்னும் தொடருது. இதுகுறித்து?”

“ரொம்ப வருத்தமாதான் இருக்கு. ஆண்கள், பெண்களை மரியாதையா அணுகும் மனப்பான்மையை வளர்த்துக்கணும். ஒவ்வொருத்தர் வீட்டிலும் குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பாங்க. அதை மனசுல வெச்சு ஆண்கள் நடந்துக்கணும்.

“நானும்  மருமகளும்  கூட்டுக்களவாணிகள்!”

அதேபோல பெண்களும் ஒரு தவறு நடந்தா அதைத் தைரியமா வெளியே சொல்லக் கத்துக்கணும். இது எல்லாத்தையும்விட, குழந்தைகளோட அடிப்படைக் கல்விமுறையிலேயே இந்தப் புரிதலைக் கத்துக்கொடுக்கிறதுதான், இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வா இருக்கும்.”

“நிறைய ரோல் பண்ணியிருக்கீங்க. நிஜ வாழ்க்கையில இப்போ மாமியார் ரோல் எப்படியிருக்கு?”

“என்னையும் கீர்த்தியையும் மாமியார்-மருமகள்னு சொல்றதைவிட, கூட்டுக் களவாணிகள்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். அவருக்குத் தெரியாம நானும், சாந்தனுவுக்குத் தெரியாம அவளும் திருட்டுத்தனமா ஷாப்பிங், சினிமான்னு ஜாலியா சுத்துவோம். வீட்டுல எல்லோருமே சினிமாவுல இருக்கிறதால ஒருத்தரோட பணிச் சுமையை இன்னொருத்தர் புரிஞ்சுக்கிறோம். அதனாலயே பெருசா எங்களுக்குள்ள பிரச்னைகள் இல்லை.”