
ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில், விஜய்க்கு சிம்மாசனம் போட்ட திரைப்படம்! :-)
மொத்தம் நாலு சஸ்பென்ஸ்!
ஒரு சூழல்... அதில் யாராவது ஒரு புதியவர் வரவு...! அவரைக் கொண்டே காரியங்கள் நடத்திக் கொண்டு கதை நகர்த்தல்..! முடிவில் கொஞ்சம் வித்தியாச க்ளைமாக்ஸ்.
'புதுவசந்தம்' மற்றும் 'கோகுலம்’ படங்களில் பார்த்த அதே விக்ரமன் பாணி இதிலும்!
பாலும் பழமுமாக இழைகிறது ஓர் இந்துக் குடும்பமும் கிறிஸ்தவக் குடும்பமும். இரண்டு வீட்டிலும் வசிக்கும் 'பஞ்சும் நெருப்பும்'. ஊரைவிட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட... இந்தியா - பாகிஸ்தான் லெவலுக்கு முட்டி மோதுகிறார்கள். ஓடிப் போன ஜோடியின் மகனாக இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்கவென்றே வருகிறார் விஜய்.
தாத்தாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், அம்மாக்கள், பேரன்கள், பேத்திகள் என்று மூன்று தலைமுறையினரும் திரையில் நடமாடிக் கொண்டிருந்தாலும், அதிகமாக 'ஸ்கோர்' செய்வது என்னவோ தாத்தா பாட்டிகள் தான். பேரனைப் பார்க்கும் திருட்டுத் தனம், பேரன் பேரில் அர்ச்சனை என்கிற ஐடியாக்கள் எல்லாம் ஓகே. இந்தக் காட்சிகள் டி.வி சீரியல் கணக்காக மெஷின்தனமாக நகருவதையும் மறுப்பதற்கில்லை.
இப்படிப் பக்கத்து பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பங்களின் பிரிவினையைக் காட்டத் தொடங்குவது, கொஞ்சம் பிசுக்கான விஷயம்தான். Balance sheet- டைப்பில் இரண்டு வீட்டு அயிட்டங்களையும் சமமாக காட்டிக் கொண்டே இருக்க வேண்டிய தொல்லை டைரக்டருக்கு; பார்க்க வேண்டிய இம்சை நமக்கு.

விஜய்க்கு இது ஒரு வித்தியாசமான, மென்மையான களம். டான்ஸ் ஆடுவதில் இருக்கும் அதே 'ஜோர்' நடிப்பில் இல்லையென்றாலும், இந்தப் படத்துக்கு பெரிய பாதகமில்லை. சங்கீதாவுக்கு புடவை பாந்தமாகப் பொருந்தும் அளவுக்கு ஏனோ மார்டன் டிரஸ் பொருந்தவில்லை. ஆனால், விஜய் தனது கணவன் என்று பொய் சொல்லி ஊரை நம்ப வைக்கும் துடுக்குத்தனம் ஓகே.
புதுமுகம் அஞ்சு அர்விந்த், நம்ம ரோகினியையும், சுதா சந்திரனையும் மிக்ஸ் பண்ணியது போலிருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை!
காமெடிக்கு சார்லி மட்டுமே. அந்தச் 'சுதந்திரக் குளியல்' விஷயம் கொஞ்சம் ஓவர் என்றாலும், சிரிப்பு பீறிட்டு விடுகிறது.

படத்தில் நான்கு சஸ்பென்ஸ். முதலாவது விஜய் யார் என்று இனம் காட்டும் இடைவேளை. இரண்டாவது சஸ்பென்ஸ் ஃபளாஷ்பேக்கில்... விஜய் காதலிக்கும் புதுமுகப் பெண் சொல்லும் அந்த வார்த்தையில்.! மூன்றாவது, புதுமுக இளம் ஜோடிக்கு நடக்கும் மதமாற்ற டெக்னிக்!நான்காவது... க்ளைமாக்ஸ்! ஒவ்வொன்றுமே நேர்த்தியாக, 'நச்'சென்று வெளிப்பட்டிருப்பதுதான் திரைக்கதை கம் டைரக்டரின் வெற்றி.
ரொம்ப நாளைக்கப்புறம் விக்ரமன் கொஞ்சமாக நிமிர்ந்திருக்கிறார்.
- விகடன் விமரிசனக் குழு