
பீரியட் படமாகக் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். குறிப்பாகக் கலை இயக்கமும், உடைகளும் 90-களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன
ஏற்கெனவே பிசினஸ் லோனுக்காக அலையும் இளைஞன் ஒருவன், தன் குடும்பத்தைக் காக்க, காணாமல்போன பெரிய தொகையை 36 மணி நேரக் கெடுவுக்குள் மீட்டு வருகிறானா, இல்லையா என்பதே இந்த ‘போத்தனூர் தபால் நிலையம்.'
1990-ல் நடக்கும் கதையில், கம்ப்யூட்டர் தொடர்பான பிசினஸ் லோனுக்காகத் தொடர்ந்து அலைகிறார் நாயகன். நண்பன், காதலி சூழ அவர் செல்லும் வங்கியில் எதிர்பாராத விதமாக அந்த மேனேஜருக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட, லோன் கிடைப்பதில் தாமதமாகிறது. நாயகனின் தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர். திடீரென அங்கே ஒரு பெரிய தொகை காணாமல்போய்விட, அப்பாவுக்காக அதை மீட்டெடுக்கும் பொறுப்பும் நாயகனிடமே வந்து சேர்கிறது. அதைக் கண்டுபிடிக்க அவரே களத்தில் இறங்கித் துப்புத்துலக்க, பல உண்மைகள் வெளியே வருகின்றன. கூடவே சில பல ட்விஸ்ட்களும் சேர்ந்துகொள்ள, இறுதியில் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

நாயகன் பிரவீனே இயக்குநர், கதையாசிரியர், எடிட்டர், கலை இயக்குநர் எனப் பல ரோல்களைச் செய்திருக்கிறார். ஆனால், ஒரு சில கதாபாத்திரங்கள் தாண்டி, மற்ற யாரிடமும் சிறப்பான நடிப்பை வாங்காமல் விட்டிருக்கிறார், அவர் உட்பட! போஸ்ட் மாஸ்டர் வெங்கட்ராமனாக வரும் ஜெகன் கிரிஷ் ரிட்டயர்மென்ட்டை நெருங்கும் நடுத்தரக் குடும்ப அப்பாக்களை நினைவூட்டிச் செல்கிறார். காமெடியனாக வரும் வெங்கட் சுந்தர் ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.
பீரியட் படமாகக் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். குறிப்பாகக் கலை இயக்கமும், உடைகளும் 90-களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. கதையின் பெரும்பாலான காட்சிகள் தபால் நிலையத்தில்தான் நடக்கின்றன. அதற்கான செட் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தென்மா, ஏலன் செபாஸ்டியன் ஆகியோரின் இசை, ஹெய்ஸ்ட் காட்சிகளில் மட்டும் அட்டெண்டன்ஸ் போடுகிறது.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்களும், அதைத் தொடர்ந்து நாயகன் மற்றும் நண்பர்கள் எடுக்கும் முடிவுகளும் அத்தனை வலுவான காரணங்களுடன் எழுதப்படவுமில்லை, காட்சிப்படுத்தப்படவும் இல்லை.

1990-ல் நடக்கும் கதைதான், ஆனால், படமே அந்தக் காலகட்டத்தில் எழுதி, உருவாக்கப்பட்டது போன்ற உணர்வையே தருகிறது. முதல் பாதியில் இருக்கும் சில சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்கூட, இரண்டாம் பாதியில் காணாமல்போய்விடுகின்றன. இதனாலேயே படம், நன்றாகத் தொடங்கி சுமாராக முடிக்கப்பட்ட ஒரு முயற்சியாக மட்டுமே திருப்திப்பட்டுக்கொள்கிறது.