கட்டுரைகள்
Published:Updated:

“எனது திறமைதான் எனது சந்தோஷம்..!”

பிரதீப் ரங்கநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரதீப் ரங்கநாதன்

படங்கள்: விக்கி

சமீபத்திய ‘லவ் டுடே' வெற்றி தமிழ்த்திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சாதாரண பட்ஜெட்டில் தயாரான படம். எங்கே பார்த்தாலும் அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். பதற்றம் குறைந்து முகத்தில் நிறைவு காணக் கிடைக்கிறது.

“மக்கள் என்றில்லை. பொதுவாக ஒரு மனிதனை நல்லா சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அதோடு அதை நன்றாகவும் உணர வைக்கணும். சொல்லப்போனால் எல்லாக் கதையும் சொல்லப்பட்டுவிட்டதுன்னு சொல்லுவாங்க. ஆக சொல்லுகிற முறையில் தான் வித்தியாசம் பண்ணணும். நான் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும்போது அதிகம் யோசிப்பேன். புதுசாகச் சொல்லணும் என்பதில் விடாப்பிடியாக இருப்பேன்.

எனக்கு ஓசைகளில் கைத்தட்டல்தான் ரொம்பப் பிடிக்கும். எனக்கு கதை சமயங்களில் ஒரு வரியில்கூடக் கிடைக்கும். அது எப்படிப் போகுதுன்னு பின்தொடர்ந்து போய் அதை அழகாக முடிக்க முடியுமான்னு பார்ப்பேன். இந்தப் பெரிய படத்தையே ஒரு குட்டிப் படமாகத்தான் முன்னாடி நானே எடுத்து வச்சிருந்தேன். பொழுதுபோக்கு மாதிரி நகைச்சுவையும் கலந்து சொல்லலாம். கடைசியில் ஒரு நல்ல செய்தி மக்களுக்குப் போய்ச் சேரணும்னு நினைப்பேன். அப்படிச் செய்ததால் தான் இந்த வரவேற்பு...’’ இன்னும் பேசுவதற்கான ஆர்வத்தில் இருக்கிறார் பிரதீப்.

“எனது திறமைதான் எனது சந்தோஷம்..!”

இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சதுண்டா?

“மரியாதையான வசூல் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் மக்கள் கூடிக் கூடி சேர்ந்து ரசித்துப் படம் பார்க்கிறதை எதிர்பார்க்கல. என்னால் மக்களின் ரசனையைத் தொட்டுவிட முடிஞ்சிருக்கேன்னு சந்தோஷமா இருக்கு. மக்கள் எனக்குக் கொடுத்தது அப்படி ஒரு இடம். அவங்க என்னை ஏத்துக்கிட்டதை நினைத்து அப்படியே கனிஞ்சுபோய் உட்கார்ந்திருக்கேன். இந்த வெற்றியை அடிப்படையாக வச்சுக்கிட்டு அப்படியே அதைப் பக்குவமாக அடுத்தடுத்து எடுத்துப் போயிட்டே இருக்கணும். நான் ஆசைப்பட்டதுல நிறைய என் வாழ்க்கையில் நடந்தது. இங்கே இருக்கிற அளவுக்கு களம் வேறு எங்கேயும் கிடையாது. புதிய களம், புதிய நடிகர்கள் என தமிழ்நாட்டை எல்லோரும் கவனிக்கிறார்கள். கதை அம்சத்திற்கும், வித்தியாசத்திற்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்கள். இளைஞர்களுக்கு வழி பிறந்து விட்டதுன்னு சொல்லத் தோணுது.''

ஒரு சின்ன லைனை வைத்துக்கொண்டு திரைக்கதையை சாமர்த்தியமாக எழுதியிருக்கீங்க...

“நீங்க சொன்ன மாதிரி சின்ன லைன்தான். மக்களுக்கு அதைப் பிடிக்கிற மாதிரி சொல்றதுதான் பெரும்பாடு. கதையும் திரைக்கதையும் வேறு வேறுன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம். இதில் க்ளைமாக்ஸ் எப்படி வைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிருக்கேன். 15 விதமா வசனமும் எழுதி வச்சிருந்தேன். படம் காமெடியில் முடியலாம். ஆனால் ஆழம் இருக்கணும்னு நினைச்சேன். படம் பார்த்துட்டு சிரிச்சிட்டுப் போகலாம். ஆனால் எதையும் உணராமல் போய் விடக்கூடாதுன்னு நினைச்சேன். இதில் யோகி பாபுவை கேரக்டர் ரோலில் நல்லபடியாகக் கொண்டு வந்திருக்கிறதாக எல்லோரும் சொன்னாங்க. நான் என்னிக்கும் அவரை காமெடியனாக மட்டுமே பார்த்ததில்லை. டப்பிங் பேச வந்திட்டு அவர் பேச முடியாமல் திரும்பினதும் நடந்திருக்கு. திரைக்கதையை ரொம்பவும் நம்புவேன். அதைச் செதுக்கி வைத்துக் கொண்டால் ஷூட்டிங்கை சரியாகத் திட்டமிடலாம். இன்னும் சொல்லிக்கிற மாதிரி படங்கள் செய்யணும்னு ஆசை.”

“எனது திறமைதான் எனது சந்தோஷம்..!”

இன்றைய இளைஞர்களின் உலகைத் தொட்டதுதான் வெற்றிக்குக் காரணமா?

“நானே நடிக்கணும்னு நினைச்ச பிறகு என்னை மாதிரி இளைஞர்கள் வாழ்க்கைதானே வரணும். ‘புதுசா பண்ணியிருக்கேன்’னு தடபுடலா பெருமைப்பட்டுக்க முடியாது. உங்களுக்குத் தெரிஞ்சதுதான் இந்த வாழ்க்கை. நான் வெளியே எடுத்து வச்சுக் காட்டும்போது நம்ம வாழ்க்கைதானே என்று நமக்கு ஒட்டுதல் வந்துடுது. தொடர்ந்து இளைஞர்களை கவனிச்சுக்கிட்டே இருக்கேன். சகல கேரக்டர்களையும் கண்ணால் பார்த்து கிரகிச்சு, அதைத்தான் படத்தில் சரியான இடத்தில் சாமர்த்தியமாக வைக்கறேன். இதில் மனிதர்களின் உண்மையான முகங்களை எடுத்து வச்சோம். அதையே சீரியஸாகச் சொல்லிவிடாமல் சிரிப்பாகவும், சிந்திக்கிற மாதிரியும் சொல்லியிருக்கோம். எனது திறமைதான் எனது சந்தோஷம். எப்பவும் கதையில் வித்தியாசத்தைக் கடைப்பிடிக்கணும்னு நினைக்கிறேன். பொதுவாக மனிதர்களைக் கையாள்வதுதான் நம் வாழ்க்கையோட ஆகப்பெரிய சவால். அதே மாதிரிதான் சினிமாவிலும்! கேரக்டர்களைக் கட்டி எழுப்பி கதை நிலை குலையாமல் காப்பாற்றிச் செல்ல வேண்டியதும் சவால்தான். அதற்கான தொடர்ந்த பயிற்சிதான் என் ஒவ்வொரு படமும். எழுதி வைத்த எழுத்து காட்சியாக மாறும் வித்தையை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு சினிமாவை அதனாலேயே ரொம்பவும் பிடிக்கிறது.''